நா. பார்த்தசாரதி
699
அதே நாளங்காடியில் இளங்குமரன் பசி மயக்கத்தினால் சோர்ந்து தன் மார்பில் சாய்ந்தபோது அவனுடைய அந்தப் பொன்னுடல் தன்மேல் கற்பூர மணம் கமழச் செய்ததையும் முகுந்தபட்டரை வாதத்தில் வென்று அந்த வெற்றியாலும் அகங்காரம் அடையாமல் தன்னடக்கமாக அவருக்கு மறுமொழி கூறியதையும், வார்த்தைகளை அளவாகவும் ஆற்றலுள்ளவையாகவும் பயன்படுத்தி எதிரியை விநாடி நேரத்தில் வீழ்த்தி விடவல்ல சமதண்டத்து ஆசீவகர்களைக் கூட்டமாக வென்றதையும் எண்ணி எண்ணிப் பூரித்தார் நீலநாக மறவர்.
இளங்குமரனுடைய வாழ்க்கையில் வீரம் இருந்தது. அழகு இருந்தது; காதல் இருந்தது; அறிவு இருந்தது; அருள் இருந்தது. இன்னும் மகாகவிகள் எவ்வெவ்வற்றை யெல்லாம் காவிய குணங்கள் என்று தேர்ந்தெடுத்துத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடிப் போற்றிக் கவிதையாகவும், காவியமாகவும் எழுதி வைத்திருக்கிறார்களோ அவையெல்லாம் அவனுடைய வாழ்வில் இருப்பதாகப் புரிந்து கொண்டார் நீலநாகர். பெண்ணின் செவிகளில் போய்ப் பொருந்திய பின்பு குண்டலங்களுக்கு அப்படிப் பொருந்திய இடத்தால் அழகு வருவதாகப் பொற்கொல்லர்கள் கூறுவதை நீலநாகர் வன்மையாக மறுத்திருக்கிறார். ‘குண்டலத்தால் பெண்ணுக்கு அழகு வளர்வதாக வேண்டுமானால் சொல்லலாம். பெண்ணால் குண்டலத்துக்கு அழகில்லை’ என்று முரட்டுத்தனமாக ஆலமுற்றத்துப் பொற்கொல்லர்களிடம் பலமுறை வாதிட்டிருக்கிறார் அவர். அவரே இப்போது அந்த உவமையை வேறு விதமாக மாற்றி இளங்குமரனோடு பொருத்தி நினைக்கத் தொடங்கியிருந்தார். இளங்குமரன் காவிய குணங்களைப் பெற்றதனால் அழகு கொண்டான் என்பதற்குப் பதிலாகக் காவிய குணங்கள் தமக்கு நாயகனாக அவனைப் பெற்றதனால் அழகு கொண்டிருக்க முடியும் என்று மாற்றி நினைத்தார் அவர். ‘நான் நினைத்துக்