உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

708

மணிபல்லவம்

பழையபடி அவனை என்னுடைய நன்றிக்கு அடிமையாக்கிக் கொள்வது வழக்கம். இன்றும் அதே முறையை மேற்கொள்ளத்தான் அவனை இந்த மாளிகையின் செல்வங்கள் எல்லாம் குவிந்திருக்கும் நிதியறையான நிலவறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றேன். ஆனால் இன்று அவனுடைய ஆத்திர நோய்க்கு என்னுடைய பழைய மருந்து பொருந்திக் குணம் தரவில்லை. என்னுடைய தந்திரங்களே தம் ஆற்றலில் நலிந்துபோய் மிக நல்ல சமயத்தில் என்னைக் கைவிட்டு விட்டன. நான் விழிப்பாயிருக்கத் தவறிவிட்டேன். “நம்முடைய வழக்கமான பழைய தந்திரங்களில் அவற்றுக்கு ஆளாகிறவர்கள் சந்தேகப்படத் தொடங்கி விட்டார்கள் என்று அறியும்போதே நாம் புதிய தந்திரங்களுக்கு மாறிவிட வேண்டும்” என்று அரச தந்திரிகளுக்குச் சொல்லியிருக்கிற இரகசியத்தை என்னைப் போன்ற வாணிகர்களும் கடைப்பிடிக்கலாம் பெண்ணே! நான் எதற்காக இப்படியெல்லாம் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டும் சூழ்ச்சிகளுக்கு ஆளாகியும் துன்பங்களையும் அடைகிறேன் என்று புரியாமல் உங்களுக்கெல்லாம் என்மேல் சந்தேகம் உண்டாகலாம். ஆனால் என் வாழ்க்கை இவற்றில்தான் கிடக்கிறது. இவற்றால் தான் நடக்கிறது. இவற்றால்தான் முடியவும் போகிறது” என்று மகளிடம் உணர்ச்சி குமுறக் குமுறப் பேசினார் பெருநிதிச்செல்வர்.

அதுவரை எதிரே நின்று கேட்டுக்கொண்டிருந்த வானவல்லிக்கு இப்போது தந்தையாருடைய முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. தான் அவரிடமிருந்து கேட்கக் கூடாததும், கேட்கவேண்டாததுமாகியவற்றைக் கேட்பதாக உணர்ந்து அஞ்சினாள் அவள். ஆனால் அவரோ நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார்.

“சிறு வயதில் நீ கற்றிருக்கிற அற நூல்களும், நீதி நூல்களும் இவற்றையெல்லாம் பாவம் என்று உனக்குக் கற்பித்திருக்கும். ஆனால், உலகத்தில் தோன்றியிருக்கிற அறநூல்கள் எல்லாம் எவை எவைகளைப் பாவங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/99&oldid=1231529" இலிருந்து மீள்விக்கப்பட்டது