உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

688

மணிபல்லவம்

நான்கு புறமும் எவராவது முரட்டுக் கொலையாளிகளை மறைவாக இருக்கச் செய்துவிட்டுத் தம்மைத் தீர்த்துவிடுகிற அந்தரங்க எண்ணத்தோடு அங்கே அவர் அழைத்து வந்திருப்பாரோ?’ என்று சந்தேகம் கொண்டவராய் ஒற்றைக் கண்ணினால் நான்கு புறமும் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே, ஒவ்வோர் அடியாகப் பாதம் பெயர்த்து வைத்து உள்ளே நடந்தார் நகைவேழம்பர். ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பது போல் பெருநிதிச் செல்வரின் சூழ்ச்சிகள் நகைவேழம்பருக்கு மனப்பாடம். எப்போதும் இயல்பிலேயே வேறு வழியின்றி நிரந்தரமான கோழையாக இருப்பவனைக் கண்டு பயப்பட வேண்டுவதில்லை. சில சந்தர்ப்பங்களைச் சமாளிப்பதற்காக மட்டும் கோழைபோல நடித்து விட்டுப் பின்பு எதிரியைக் கறுவறுக்க நேரம் பார்க்கும் நடிப்புக் கோழைகளை நம்பக்கூடாது. இத்தனை ஆண்டுகள் பழகியும் பெருநிதிச் செல்வர் முதல் வகைக் கோழையா, இரண்டாவது வகைக் கோழையா என்பதை முடிந்த முடிவாக அறிந்து கொண்டுவிட முடியாமல் திணறினார் நகைவேழம்பர். காரணம் அவர் இரண்டு வகைக் குணங்களையும் மாற்றி மாற்றிச் செயல்படுத்தியிருக்கிறார். அதில் எது மெய் எது போலி என்று புரிந்துகொள்வது, தந்திரத்தில் தேர்ந்தவராகிய நகைவேழம்பருக்கே அரிதாயிருந்தது. அதனால்தான் அன்று காலை நேரத்தில் அவரோடு நிலவறைக்குள் புகுந்த போது மிக நுணுக்கமான தற்காப்பு நினைவுடனேயே அங்கு நுழைய வேண்டியிருந்தது நகைவேழம்பருக்கு.

செல்வக் களஞ்சியமான காவிரிப்பூம்பட்டினத்தையே சோழ மன்னனிடமிருந்து விலைபேசி வாங்கினாலும் அதற்கு அப்புறமும் மீதமிருக்கக்கூடிய அவ்வளவு செல்வம் வேறு வேறு வடிவில் அங்கே குவிந்து கிடந்தது. இருவரும் அவற்றை எதிரெதிர்த் திசைகளிலே இருந்து பார்த்தபடி இருந்தனர். இருவருடைய நெஞ்சுத் துடிப்பையும் கேட்டு முத்துக்கள் மின்னுவதற்குப் பயந்தனவோ என இருந்தன. இருவரும் மூச்சு விடுகிற ஒலி வெகுண்டெழுந்த சர்ப்பங்கள் சீறுவதுபோல் ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/79&oldid=1231508" இலிருந்து மீள்விக்கப்பட்டது