706
மணிபல்லவம்
போது சிறிது நேரத்திற்கு முன் கதவு விரைவாகத் திறந்து மூடுவதுபோல் ஓசை கேட்டதன் காரணம் அந்த இடத்தில் அவருக்கு விளங்கிற்று.
அங்கே கதவுக்குக் கீழே இருந்த முதற்படியின் மேல் ஒரு மண் மிடா நிறையச் சோறும் பக்கத்திலேயே இன்னொரு மண் கலயத்தில் குடிப்பதற்குத் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் அவை அங்கு அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த சூழ்நிலையையும் பார்த்தபோது நகைவேழம்பருக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
“எனக்குச் சோறு ஒரு கேடா?” என்று கத்திக் கொண்டே படிமேல் ஏறி நின்று அந்த மண் கலயத்தையும் மிடாவையும் காலால் ஓங்கி உதைத்தார் அவர். அவை படிகளில் உருண்டு உடைந்து சிந்திச் சிதறின. அந்த சமயத்தில் மேலே பெருநிதிச் செல்வர் யாரிடமோ பேசிவிட்டு இரைந்து சிரிக்கிற ஒலியைக் கேட்டு அவருடைய கொதிப்பு இன்னும் அதிகமாகியது. அந்தச் சிரிப்பு தன் செவிகளில் கேட்க முடியாத தொலைவுக்கு ஓடிப்போய்விட வேண்டுமென்று அவர் நிலவறைப் படிகளில் கீழே இறங்குவதற்குத் தாவியபோது உடைந்த மிடாவிலிருந்து அங்கே சிதறியிருந்த சோறு அவர் காலில் பட்டு நன்றாகச் சறுக்கிவிட்டது.
நகைவேழம்பர் நிலவறைக்குள்ளே படிப்படியாய் வீழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பெருநிதிச் செல்வர் மேலே மாளிகைக்குள் தன் மகள் வானவல்லியிடம் மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
“நீ நல்ல காரியம் செய்தாய் பெண்ணே! என் குறிப்பைப் புரிந்துகொண்டு நீ திரும்பிவிடாமல் நிலவறைக்குள்