உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

744

மணிபல்லவம்

ஒரு கண்ணுக்கும் பார்க்கும் ஆற்றல் இருக்கக்கூடாது” என்று தம் கையிலிருந்த ஊன்றுகோலின் நுனியினாலேயே அலட்சியமாக அவன் தோளில் சுமையாகி யிருந்த நகைவேழம்பரின் உடம்பைச் சுட்டிக் காட்டினார் பெருநிதிச் செல்வர்.

‘செய்கிறேன் ஐயா! நாளைக்கு உங்களுக்கும் எனக்கும் பொழுது விடியும். இவருக்கு மட்டும் விடியவே விடியாது. அவ்வளவு செய்தால் போதும் அல்லவா?’ என்று ஒருமுறை திரும்பி அவரிடம் கேட்டுவிட்டு மேலே நடந்தான் அருவாளன். அதன்பின் அவன் அங்கிருந்து நடந்த வேகத்தை நடையா, ஒட்டமா என்று பிரித்துச் சொல்ல முடியாது.

நான்கு நாழிகைக்குப் பின் சக்கரவாளக் கோட்டத்துக் காட்டின் உள்ளே பாழடைந்த காளிக்கோட்டம் ஒன்றில் போய்த்தான் தன்னுடைய தோள் சுமையை அவனால் இறக்குவதற்கு முடிந்தது. நரிகள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்தோடும் அடர்த்தியான புதர்கள் சூழ்ந்த அந்தக் காளிக் கோட்டத்தின் முன்புறத்தில் தான் சுமந்து வந்த உடலைக் கிடத்திவிட்டு, முடிந்து போய்க் கொண்டிருக்கிற இந்த உயிரை தாமே இன்னும் விரைவில் முடித்துவிட்டு அறிவிக்க வேண்டியவரிடம் போய் அறிவித்துவிடலாமா? அல்லது தானே முடிகிற வரை இதைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டுப் போகலாமா? என்று தயங்கியபோது வேறு ஒரு புதிய யோசனையும் அவனுக்கு உண்டாயிற்று.

‘இவரோ இன்று நிச்சயமாகச் சாகப் போகிறார். அதற்கு முன்னால் இவரைக் கொஞ்சம் வாழச்செய்து பார்த்தால் என்ன! அப்படிச் செய்தால் சாவதற்கு முந்திய இவரது எண்ண்ங்களையாவது நான் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுமே? என்று நினைத்தான் அருவாளநாகன், தான் நினைத்ததைச் செயற் படுத்துவதற்கு அந்த இடத்துச் சூழ்நிலை ஏற்றதுதானா என்று அறிந்துகொள்ள முயல்வது போலச் சுற்றும் முற்றும் பார்த்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/135&oldid=1231561" இலிருந்து மீள்விக்கப்பட்டது