உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

757

திறந்து கத்திகளின் நுனிகளை அடுக்கியது போன்ற பல் வரிசை தெரியப் பாய்ந்து வந்து அவரது தொடையில் வாய் வைத்தது. மற்றொரு நரி பலி பீடத்தை ஒட்டினாற் போலத் தாவி அவருடைய தோளில் பற்களைப் பதித்தது. அவர் எந்த வகையான மரணத்துக்கு ஆசைப்பட்டாரோ அதுவே அவருக்குக்கிடைத்துக் கொண்டிருந்தது. அவரே அதிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓட முயன்றாலும் முடியாதபடி சாவின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்து விட்டன. எழுந்து ஓடிவிடலாம் என்றால் முறிந்துபோன காலுக்கு மேலே எழுந்து நிற்கின்ற ஆற்றலும் இல்லை. கூட்டம் கூட்டமாகச் சிறுத்தைப் புலிகளைப் போல் வந்து மேலே பாய்ந்து சதையைக் கவ்விக் குதறும் கொடிய நரிகளை எதிர்த்துப் போராடுகிற வலிமை அவரது கைகளிலும் உடம்பிலும் அப்போது இல்லை.

தனது உடலில் சதையைக் குருதி சிந்தக் கவ்வி இழுத்துக் குதறும் காட்சியைத் தன்னுடைய கண்ணினாலேயே பார்க்கும் அனுபவம் விசித்திரமாகத்தான் இருந்தது. அதுவே குரூரமாகவும் இருந்தது.

‘என்னை நாலைந்து பேராகச் சூழ்ந்து கொண்டு அணு அணுவாகச் சித்திரவதை செய்தாலும் என்னுடைய வாய் அலறாது. கண்ணில் நீர் நெகிழாது. அப்படி என் உடம்பையும், மனத்தையும் கல்லாகவும் இரும்பாகவும் நானே பழக்கியிருக்கிறேன்’ என்று தானே சிறிது நேரத்துக்கு முன் அருவாளனிடம் கூறிய சொற்களை இப்போது நினைத்துக்கொண்டு சிரிக்க முயன்றார் அவர். நரிகள் மேலே விழுந்து தாறுமாறாகப் பிடுங்கிய வலியினாலும், வேதனையினாலும் அவருக்குச் சிரிப்பும் வரவில்லை.

‘எப்படி வாழ வேண்டாமோ அப்படி இதுவரை வாழ்ந்து விட்டேன். அப்படி வாழக்கூடாது என்று தெரிந்திருந்தும் அப்படியே வாழ்ந்தேன். அந்த வாழ்வு இப்போது இப்படி முடிகிறது’ என்று உயிர் வேதனையோடு உடம்பில் வலி துடிக்கத் துடிக்க அவர் நினைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/148&oldid=1231571" இலிருந்து மீள்விக்கப்பட்டது