உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

730

மணிபல்லவம்

கவலை. என் கவலை தீர வேண்டுமானால் அவர் இல்லாமல் தொலைய வேண்டும்!” என்று கூறிவிட்டு அந்தக் கூற்றைக் கேட்கிறவனின் முகத்து விளைவை அறிவதற்காக அருவாளனுடைய கொடிய முகத்தைக் கூர்ந்து பார்த்தார் அவர். அருவாளனுடைய முகத்தில் திகைப்பும் சந்தேகமும் தெரிந்தன.

“நான் தானா இப்படிப் பேசுகிறேன் என்று என்மேல் சந்தேகப்படாதே, அருவாளா! இன்று இரவு நடு யாமம் முடிவதற்குள் இந்த நகரத்தில் ஓர் உயிர் உன் கையால் குறைய வேண்டும். அப்படிக் குறைகிற உயிர் என் கவலையைத் தீர்க்கிற உயிராகவும் இருக்க வேண்டும். அந்த உயிர் போகும்போது என் கவலையும் போய்விட வேண்டும்.”

அருவாளன் மௌனமாக அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். இரும்புப் பலகை போன்ற அவனுடைய பரந்த மார்பு மேலெழுந்து விரிந்து விம்மி தணிந்தது. அவர் அவனுடைய அந்த மௌனத்தைப் பொறுக்க முடியாமல் அவனைச் சீறிக் கோபித்துக் கொண்டார்.

‘ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறாய்? இப்போது மட்டும் நான் அளித்த சோற்றுச் செருக்கு உன்னிடமிருந்து எங்கே போய் ஒளிந்து கொண்டது?”

இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் அவன் தலை தாழ்ந்தது. இந்தக் கேள்வியினால் அவன் மடக்கப்பட்டு விட்டான் என்பதைச் சொல்வது போல அவனுடைய முகபாவமும் மாறியது.”

“செய்கிறேன், ஐயா; செய்கிறேன், நீங்கள் எதைச் சொல்லுகிறீர்களோ அதைச் செய்து உங்களிடமிருந்து நான் பெற்ற சோற்றுச்செருக்குக்கு நன்றி செலுத்தி விடுகிறேன்...” என்று ஆவேசத்தோடு அவருக்குப் பதில் கூறினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/121&oldid=1231548" இலிருந்து மீள்விக்கப்பட்டது