அருவாளனுடைய சம்மதம் பெருநிதிச் செல்வருக்கு நிறைந்த நிம்மதியை அளித்தது. அவர் விருப்பத்தைச் செயலாக்க அவன் முன் வந்ததில் அவருக்குப் பரம திருப்தி ஏற்பட்டி ருந்தது. “நல்லது! உன்னுடைய நன்றியிலாவது நான் நம்புவதற்கு இன்னும் இடம் இருக்கிறது. என்னிடம் நீ தின்ற சோறு என்னை ஆதரிக்கும் செருக்கைத்தான் உனக்குத் தந்திருக்கிறது. என்னையே எதிர்க்கும் செருக்கைத் தரவில்லை. போய்விட்டு உன் கூட்டாளியோடு இன்றிரவு நடு யாமத்துக்கு இரண்டு நாழிகை இருக்கும்போது திரும்ப வும் இங்கே வா. முதலில் உன் கையில் ஒப்படைத்து அப்புறம் எமன் கைக்கு மாற்ற வேண்டிய உயிரை இப்போது இந்த மாளிகையின் நிதியறையில்தான் அடைத்து வைத்திருக்கிறேன். இன்றிரவு அந்த உயிருக்கு அதன் உடம்பிலிருந்து விடுதலை அளித்துவிடலாம்” என்று கூறி அருவாளனுக்கு விடை கொடுத்து அனுப்பினார் பெருநிதிச் செல்வர். அவர் கூறியபடி நள்ளிரவுக்கு முன்னால் மறுபடி அங்கே வருவதாக ஒப்புக் கொண்டு புறப்பட்டுச் சென்றான் அருவாளன்.
அங்கிருந்து அவன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்தில் தன்னுடைய இன்னொரு சந்தேகத்தையும் உடனே தீர்த்துக்கொண்டு விட எண்ணியவராய்ச் சுரமஞ்சரியைச் சிறை வைத்திருந்த மாடத்துக்கு ஏறிச் சென்றார் அவர். அப்போது அந்த மாடமும் அதன் பகுதிகளும் வழக்கத்தை மீறிய அமைதியோடு இருந்தன. மாடத்தின் உட்பக்கம் சுரமஞ்சரியோ வசந்தமாலையோ பேசிக்கொள்ளும் ஒலிகூடக் கேட்கவில்லை. இருவரும் அந்த முன்னிரவு வேளையிலேயே தூங்கியிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவர் கதவைத் தட்டினார். சிறிது நேரம் வரை அவருக்கு ஒரு பதிலும் இல்லை.