நா. பார்த்தசாரதி
703
அவமானமடைவதற்குப் பதில் கடலில் தீப்பிடித்த அந்தக் கற்பூரப் படகிலேயே நான் மாண்டு போயிருக்கலாம்’ என்று நினைத்தார். பொழுது விடிகிற நேரத்தில் பெருநிதிச் செல்வருடைய வாழ்க்கையை ஒரேயடியாக இருளச் செய்துவிடலாமென்று திட்டமிட்ட மனத்தோடு தான் வந்ததையும் அவரைப் பயமுறுத்தியதையும் இறுதியில் நிகழ்ச்சிகள் எப்படியெப்படியோ மாறித் தன்னுடைய வாழ்க்கையே இருண்டுபோய் விட்டதையும் நினைத்தபோது இப்படித்தான் இது நடந்துவிட்டது என்று நடந்ததை முடிவாக நம்ப முடியாதது போலிருந்தது. அவ்வளவு வேகமாகவும் அது நடந்திருந்தது. தன்னுடைய அதுமானத்தால் தொட முடிந்த எல்லைக்கு அப்பாலும் பெருநிதிச் செல்வரின் சூழ்ச்சித் திறன் அதிகமாய்ப் பெருகி வளர்ந்திருப்பதை இன்று நிதரிசனமாகப் புரிந்து கொண்டார் அவர்.
‘சற்றுமுன் முத்துக்களைத் தேர்ந்தெடுக்கும் போதே என் போதாத காலத்தையும் நான் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டேன்! ‘இவர்களுக்கு முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்’ என்று அவர் என் முதுகில் தட்டிக் கொடுத்தபோது நான் என்னுடைய ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு அந்தக் கணமே அவருடைய பணியாளனாக மாறிவிட்டது எவ்வளவு பெரிய அறியாமை?’ - என்று தன்னுடைய தவற்றை எண்ணியபோது அந்த நிலவறையில் கருங்கற் சுவர்களும், தளமும் இற்று விழுகிற பெருங்குரலில் பயங்கரமாகக் கதறி அழ வேண்டும் போலத் தோன்றியது அவருக்கு. அந்த இருளடைந்த நிலவறையில் அடைபட்டுக் கிடக்கிறவரை பொற்காசுகளும், முத்தும் மணியும் எப்படித் தம் பயனையும், மதிப்பையும் பெறுவதற்கு முடியாதனவாகிப் பெறுமானமின்றி முடங்கிவிட்டனவோ அப்படியே தன்னுடைய ஆற்றலும் முடங்கிவிட்டதாகத் தெரிந்தது அவருக்கு. பயன்படுத்துகிற வரையிலும் ஆற்றல் மதிப்பு ஒன்றுமில்லாமல் போகிற காசுகளைப் போலவே தானும் ஒன்றும் செய்ய முடியாமல் அடைபட்டுப் கிடக்க நேர்ந்த போதாத காலத்தை எண்ணி எண்ணி