638
மணிபல்லவம்
என்னுடைய எல்லா நம்பிக்கைகளுமே கவிழ்ந்துவிடும்” - என்று ஆவேசத்தோடு கூறியபோது வளநாடுடையாரின் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்துவிட்டன. அந்தக் கிழட்டு உடல் தாங்கமுடியாத ஆவேசத்தைத் தாங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பாய்மரக் கப்பலின் மீகாமன் வளநாடுடையாருக்கு அருகில் வந்து கூறினான்.
“பதறாதீர்கள், பெரியவரே! நமக்கு இது ஓர் எதிர்ப்பே அல்ல; கடலில் கவிழப்போவது அவர்களுடைய படகுதான். நம்முடைய பாய்மரம் தீப்பற்றுவதற்கு அவர்கள் இன்னும் பல தீப்பந்தங்களை வீசி எறிய வேண்டும். இப்போது நான் இங்கிருந்து நேரே ஒரு சிறிய தீப்பந்தத்தை வீசி எறிந்தால் போதும். அந்தப் படகே குபீரென்று பற்றிக்கொண்டு எரியும். அவர்களுடைய படகு எரிவதற்குத் தேவையான நெருப்பு அந்தப் படகுக்குள்ளேயே இருக்கிறது. சந்தேகமாயிருந்தால் இதோ பாருங்கள்... என்று இவ்வாறு கூறியபடியே ஒரு சிறிய தீப்பந்தத்தை எடுத்து அந்தப் படகில் ஓர் இலக்கைக் குறிவைத்து வீசினான் கப்பல் தலைவன். குறி தவறாமல் பாய்ந்தது அந்தத் தீப்பந்தம்.
என்ன அதிசயம்! கப்பல் தலைவனுடைய தீப்பந்தம் அந்த இடத்தை நெருங்கு முன்பே படகுக்குள் தீப்பற்றி விட்டாற்போலச் சோதி மயமான மாபெரும தீ நாக்குகள் அந்தப் படகிலிருந்து எழுந்தன. அதிலிருந்து கற்பூர மணத்தைச் சுமந்த புகைச் சுருள்கள் எங்கும் பரவின. படகில் பற்றிய நெருப்புச் சுடருக்கு நடுவேயிருந்து, “அடப்பாவி! படகில் கற்பூரம். இருப்பதை முன்பே என்னிடம் சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா?” என்று குரூரமாக ஒரு குரல் வினாவியது. அந்தக் குரூரக் குரல் நகைவேழம்பருடையதென மணிமார்பன் புரிந்து கொண்டான். ஐயா! அதைச் சொல்ல வந்தபோதுதான் நீங்கள் என்னை அடக்கிப் பேசவிடாமல் தடுத்து விட்டீர்களே!” -- என்று : ஏளனச் சிரிப்போடு ஒரு குரல் அதற்குப் பதிலும் கூறியது.