நா. பார்த்தசாரதி
637
நின்ற சமயங்களை இப்போது நினைத்துக் கொண்டு விட்டார் நகைவேழம்பர். அப்படித் தலைகுனிந்து தான் நிற்க நேர்ந்த சமயங்களில் புழுவைப் பார்ப்பதுபோல் பெருநிதிச் செல்வர் தன்னை அலட்சியமாகப் பார்த்த பார்வைகளும் நினைவுக்கு வந்து அவரைக் கொலை வெறியில் முறுகச் செய்தன. செய்வதன் விளைவை நினையாமற் செயற்பட்டார் அவர். இளங்குமானைக் கப்பலோடு கடலில் கவிழ்ந்து மூழ்கச் செய்துவிட்டு அந்த வெற்றியோடு பெருநிதிச் செல்வருக்கு முன் போய் நிற்க வேண்டுமென்ற ஒரே ஆசைதான் அவருக்கு இப்போது இருந்தது.
துரத்திக் கொண்டு வந்த படகில் இருப்பவர்கள் தீப்பந்தங்களைக் கொளுத்தித் தங்கள் கப்பலின் மேல் எரியும் அளவுக் தாக்குதல் வளர்ந்துவிட்டதைக் கண்டு அமைதியாகக் கைகட்டிக் கொண்டு நிற்கும் இளங்குமரனைப் பார்த்துப் பெரும் சீற்றமடைந்தார் வளநாடுடையார். “பகைவர்களுக்கு முன்னால் இரக்கம் காட்டுவது பேதமை தம்பீ! பகைக்கு முன்னால் காட்ட வேண்டிய ஒரே அறம் பகைதான். அருள் என்றால் விலை என்ன என்று கேட்கிறவர்களிடம் நீ அருள் காட்டிப் பயனில்லை. உன் மனத்தை மாற்றிக்கொள். கைகளை உதறிக்கொண்டு இந்த எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முன் வா! பறந்து வருகிற தீப்பந்தங்கள் இந்தக் கப்பலின் பாய்மரத்தில் பட்டுவிடாதபடி மறித்துப் பிடி. நமது பாய்மரம் தீப்பட்டு எரிந்து போனால் பின்பு இந்தக் கப்பல் எந்தத் திசையில் போகுமென்று சொல்ல முடியாது. அநாதைக் கப்பலாகிக் கடலிலேயே கிடந்து அலைக்கழியும். நமது பாய்மரத்தைக் காப்பாற்று, நம்முடைய இந்தக் கப்பல் கவிழ்ந்தால் இதனோடு