உள்ளடக்கத்துக்குச் செல்

அனிச்ச மலர்/6

விக்கிமூலம் இலிருந்து

6

டாக்சியில் போகும்போது சுமதி மேரியிடம் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. தியேட்டர் வாசலில் போய் இறங்கும்போது, "பரங்கிமலை போகணும்னா நானே நீங்க படம் முடிஞ்சி வர்ரவரை வெயிட் பண்றேம்மா’ என்று டாக்சி டிரைவர் தானாகவே திடீரென்று அப்போது வலியவந்து மேரியிடம் கேட்டபோது சுமதியின் சந்தேகம் இன்னும் அதிகமாயிற்று. அந்த டாக்சி டிரைவருக்கு மட்டுமல்லாமல் எந்த டாக்சி டிரைவருக்கும் மேரியை நன்றாகத் தெரிந்திருக்கும் என்று தோன்றியது. ”வேண்டாம்! நீ போகலாம்” என்று சிறிது கடுமையாகவே அவனுக்குப் பதில் சொல்லி மீட்டர் பார்த்துப் பணம் கொடுத்தாள் மேரி. கீழே இறங்கி நின்று தியேட்டர் முகப்பிலிருந்து பெரிய பெரிய படங்களையும் சுவரொட்டிகளையும் பார்த்த சுமதி,

”ஏய் மேரீ! நீ சொன்ன படமில்லேடீ... ஏதோ ’மை கெய்ஷா’ன்னில்லே போர்டிலே போட்டிருக்கான்...” என்று கேட்டாள்.

"ஐயாம் வெரி ஸாரி சுமதி ! நான் சரியாப் பார்க்கலே, நேத்தி வரை ’தியேட்டர் புரோக்ராம்'ஸிலே அந்தப்படம்தான் போட்டிருந்தான். இன்னிக்கு சேஞ்ஜ் ஆகியிருக்கும் போலேருக்கு. பரவாயில்லை, இதுவும் நல்ல படம்தான்; பார்க்கலாம் வா ?”

சுமதிக்கு ஆட்சேபணை இல்லை. மேரி அதிகச் செலவையும் பொருட்படுத்தாமல் 'பால்கனி'க்கு இரண்டு டிககெட் வாங்கினாள். மேரியின் ஊதாரித்தனமான செலவுகள் சுமதிக்கு ஆச்சரியத்தை உண்டாக்கின. பஸ்ஸுக்குப் பதில் டாக்சியில் வந்ததும், டாக்சிக்காரனுக்கு மீட்டரில் ஆனதற்குமேல் ஒரு ரூபாய் போட்டுக் கொடுத்ததும் அதிக விலையுள்ள பால்கனி டிக்கட்கள் வாங்கியதும் அதிகப்படியான காரியங்களாகச் சுமதிக்குத் தோன்றியது. "நீ ரொம்பத்தான் அதிகமாகச் செலவழிக்கிறே மேரி.”

"செலவா பெரிய விஷயம்; உன்னைப்போல ஒரு ஃபிரண்டு கூட வர்ரப்போ எத்தனை ஆயிரம் வேணும்னாச் செலவழிக்கலாம் டீ சுமதி...”

இருவரும் உள்ளே நுழைந்து பால்கனியில் தங்களுக் குரிய இருக்கைகளில் அமர்ந்தார்கள். ஏற்கனவே விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்லைடுகள் காண்பிக்கப்பட்டு முடிந்து, ’இந்தியன் நியூஸ் ரெவ்யூ’ ஆரம்பமாகி ஒடிக்கொண்டிருந்தது. இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் யாரோ ஆண்பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். நடுவாக மேரிக்கும் சுமதிக்கும் இடம் கிடைத்திருந்தது. நியூஸ் ரீல் முழுவதும் ஓடியபின் படம் ஆரம்பமாகியது. படம் ஜப்பானிய தேவதாசிகள் எனப்படும் கெய்ஷாப் பெண்களைப் பற்றியது. ஆண்களை உபசரித்து, மயக்கிக் கவர்வதையே ஒரு கலையாகப் பாவித்து 

வளர்த்து வரும் அழகிய இளம் கெய்ஷாப் பெண்களைப் பற்றியது கதை. படம் ஒடிக்கொண்டிருக்கும்போது மேரி ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாற்றி மாற்றிச் சுமதிக்கு விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருந்தாள்.


"நம்ம நாட்டிலேதான் இதை எல்லாம் தப்பாக நினைக்கிறோம். ஒரு பெண் அழகாகவும் இளமையாகவும் இருந்துவிட்டால் அவள் யாரோடும் பழகக்கூடாது என்றும், யாரையும் உபசரிக்கக்கூடாது என்றும் தடுத்து விடுகிறோம். ஜப்பானிய கெய்ஷாக்கள் அழகு என்பது ஆண் மகனின் கண்கள் அனுபவிப்பதற்கே என்று நினைக்கிறார்கள், உபசரிக்கிறார்கள், ஆண்களை மயக்குகிறார்கள், சம்பாதிக்கிறார்கள். நம் இந்தியாவில் கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யும் ஒரு கம்பெனி மானேஜிங் டைரக்டர் என்ன சம்பாதிக்கிறாரோ அதை ஜப்பானில் ஒரு கெய்ஷா சம்பாதித்து விடுகிறாள் சுமதி !"__ தயக்கத்தோடுதான் மேரியின் இந்த விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.


அவள் மெல்ல மெல்லத் தன்னை 'பிரெயின் வாஷ்' செய்கிறாளோ என்று முதலில் சுமதி சந்தேகப்பட்டாலும் பின்னால் அந்தச் சந்தேகம் மாறி மறந்து, படத்தில் வருகிற நிகழ்ச்சிகளுக்கும் மேரி சொல்லுகிற கருத்துக்களுக்கும் ஒற்றுமை இருக்கவே, அதைச் சுமதியால் ஊன்றிக் கேட்க முடிந்தது.

"கெய்ஷா கேர்ள்ஸ் ஆஃப் ஜப்பான் என்று என் கிட்ட ஒரு புஸ்தகம் இருக்கு. அதை உனக்கு வேணூம்னாப் படிக்கத் தரேன் சுமதி!"


அது ஒரு ஹாலிவுட் டைரக்டருக்கும் ஜப்பானிய கெய்ஷாவுக்கும் ஏற்படுகிற உறவு பற்றிய படம். கெய்ஷாப் பெண் அந்த ஹாலிவுட் டைரக்டரின் உடற் களைப்புத் தீர கைகால்களை இதமாகப் பிடித்து விடுகிறாள். டீ தயாரித்துக் கொடுக்கிறாள். அழகிய சிறிய தங்கப் பதுமை போன்ற அந்த ஜப்பானிய கெய்ஷரப் பெண் நிற்பது, நடப்பது, சிரிப்பது, பேசுவது எல்லாமே 

காவியமாய் இருந்தன. கெய்ஷா அழகுப் பதுமையாய் இயங்கினாள், மயக்கினாள்.


இடைவேளை வந்தது. தியேட்டரில் விளக்குகள் எரிந்தன. விளக்கொளியில் அக்கம் பக்கத்து சோபாக்களில் இருந்தவர்களில் பலர் ஒரே சமயத்தில் மேரியை நோக்கி, "ஹலோ!" என்ற விளித்தனர். மேரி அவர்களை எல்லாம் திடீரென்று சந்தித்ததில் தான் வியப்படைந்தவள் போல் காட்டிக் கொண்டாள். தன்னோடுகூட இருந்த சுமதியை அவர்களுக்கெல்லாம், "மீட் மிஸ் சுமதி!'- என்று தொடங்கி உற்சாகமாக அறிமுகப்படுத்தி வைத்தாள். மேரியால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் அனைவருமே ஆண்கள்தாம். இருபத்தெட்டு வயது முதல் நாற்பது வயது வரை பலவிதமானவர்கள் அவர்களில் இருந்தனர். ஹிப்பித் தலையர்கள், ஒட்ட வெட்டிய கிராப்புடன் ஸ்மார்ட்டாக இருந்தவர்கள், உருவி எடுத்தது. போல் பேண்ட், ஷூ, டை, கோட் எல்லாம் அணிந்த பிளாஸ்டிக் முகமுடைய மனிதர்களைப்போல் சுத்தமாயி ருந்தவர்கள் எல்லாரும் தென்பட்டார்கள். எல்லாரையும் மேரிக்குத் தெரிந்திருந்தது. அவர்களை எல்லாம் மேரி தனக்கு அறிமுகப்படுத்தியபோது, அவர்கள் தன்னை. நோக்கி 'ஓவரா'கச் சிரித்தது, முகம் மலர்ந்தது எல்லாம் சுமதிக்குப் பிடிக்கவில்லை. ஏதோ காணாததைக் கண்டதுபோல் சிலர் சுமதியிடம் நேருக்கு நேராகவே அவள் அழகை வியந்து சொல்லத் தொடங்கினார்கள். அந்த ஆண்களின் பேச்சு, தோரணை பாவனைகள் எல்லாவற்றையும் பார்த்துச் சுமதி கொஞ்சம்' ரிஸர்வ்டு': ஆகவே நடந்துகொண்டாள். அவளுக்கு அச்சமாயிருந்தது. "பீ சீர்ஃபுல் மைடியர்..” என்று அவளைத் தோளில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துவதற்கு முயன்றாள் மேரி. அவளைச் சூழ்ந்திருந்த ஆண்களில் சிலர், "வெளியிலே போய் ஏதாவது டிரிங்க்ஸ் சாப்பிடலாம் வாங்க" என்றார்கள். 

"லெட் அஸ் ஸெலபரேட் திஸ் நைஸ் மீட்டிங்" என்று சுமதியின் பக்கமாகக் கையை நீட்டிச் சுட்டிக் காட்டிச் சிரித்தான் ஓர் இளைஞன். சுமதி மெல்லத் தப்பித்துக் கொள்ள முயன்றாள்.


"எனக்கு டிரிங்ஸ் எதுவும் வேண்டாம்! நான் இங்கேயே ஸீட்'லே இருக்கேன். நீங்கள்ளாம் போயிட்டு வாங்க...”


"நோ. நோ. வாட் இஸ் திஸ்?. உனக்கு மேனர்ஸ் கூடவா புரியாது சுமதி? இவங்க உன்னைச் சந்திச்சதை ஸேலபரேட் பண்ணத்தான்னு கூப்பிடறாங்க. நீ என்னடான்னா..? இவங்கள்ளாம் யாருன்னு நினைச்சே நீ.? சும்மா தெருவிலே போற ஆளுங்க இல்லே. எல்லோரும் பெரிய மனுஷங்களாக்கும். இவர் க்வீன் அண்ட் கம்பெனி சேர்மன். அவர் எமரால்ட் பெயிண்ட்ஸ் பி.ஆர்.ஒ. இன்னொருத்தர் பெரிய டயர் மெர்ச்சென்ட். எல்லாரும் அநேகமா ஃபோர் ஃபிகர்ஸ்ல ஸாலரி வாங்கிறவங்களாக்கும்.” மேரி சுமதியின் காதருகே இதை மெதுவாகச் சொல்லி வற்புறுத்தினாள். அதற்குள் சுமதி மறுக்கிறாளோ என்று சந்தேகப்படத் தொடங்கிவிட்ட அவர்களில் ஒருவர்,


"மிஸ் சுமதி மட்டும் நம்மோடு இப்ப வரலேன்னா நாங்கள்லாம் இங்கேயே தர்ணா’ப் பண்ணிடுவோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


அதற்குமேல் அந்தச் சூழ்நிலையில் எதிர்நீச்சலிடும் சக்தியைச் சுமதி இழந்தாள். மேலுக்குச் சிரித்தாற்போல் இருக்க முயன்றபடி உள்ளூற வேதனையோடு அவர்களுடன் சென்றாள். தியேட்டரின் மாடியிலேயே வராந்தாவில் இருந்த காஃபி பாரில் எல்லோருக்குமாகக் கோகோ கோலா ஆர்டர் செய்யப்பட்டது. ஆண்கள் அவரவர்கள் பிராண்ட் சிகரெட்டை வாங்கிப் புகைத்துக் கொண்டே உரையாடலானார்கள். இடைவேளை முடிந்து உள்ளே விளம்பர ஸ்லைடுகள் காண்பிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஸ்லைடுகள் முடிந்து படம் 

தொடங்குகிற நேரம் வரும்வரை அவர்கள் எல்லாரும் வெளியேதான் பேசிக்கொண்டிருந்தார்கள். மேரி ஒவ்வொருவரையும் தனித் தனியே சில விநாடிகள் அந்த லவுஞ்சிலேயே ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று ஏதோ பேசிவிட்டு வந்தாள். அப்படி அவள் அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது அவளால் அழைத்துச் செல்லப்பட்ட ஆளைத் தவிர மற்றவர்கள் சுமதியைச் சூழ்ந்துகொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவளிடம் சிரித்துப் பேசலாயினர். சுமதியும் அவர்களிடமிருந்து முகத்தை முறித்துக்கொண்டு தப்பிப்போய் உள்ளே சென்று அமர முடியாதபடி சுற்றி வளைத்துக்கொண்டு நின்றுவிட்டார்கள். அவர்கள் அந்த நிலையில் அப்போது தனக்குத் தெரிந்தவர்களோ சக மாணவிகளோ யாராவது தன்னைப் பார்த்தால் என்ன நினைத்துக் கொண்டு போவார்கள் என்றெண்ணியபோது சுமதிக்கு மனம் கூசத்தான் செய்தது. எதற்கோ எங்கேயோ தொடங்கித் தான் எங்கேயோ வரக்கூடாத இடத்துக்கு வழி தப்பி வந்துவிட்டதாகத் தோன்றியது அவளுக்கு. மேரி அந்தத் தியேட்டரில் இடைவேளையில் அவர்களை எல்லாம் சந்தித்தது தற்செயலாக இருக்கும் போலவும் பட்டது. முன்பே திட்டமிட்டது போலவும் பட்டது. எது உண்மையாயிருக்கும் என்று முடிவு செய்ய இயலவில்லை.

இடைவேளை முடிந்து மீண்டும் படம் தொடங்கிய போது மறுபடி மேரியின் குரல் சுமதியின் காதருகே வழக்கமான கீதோபதேசத்தைத் தொடங்கிவிட்டது.


"நம்ம தேசத்திலேதான் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய, இளமையின் அழகை எல்லாம் என்றைக்கோ புருஷன் என்று பெயர் சொல்லிக்கொண்டு தன்னிடம் வரப்போகிற எவனோ ஒர் ஊர் பேர் தெரியாத ஆண் பிள்ளைக்காக மட்டுமே என்று பணம் சேர்த்து வைக்கும் அனுபவிக்கத் தெரியாத கஞ்சப்பயலைப் போலச் சேர்த்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள். மற்ற ஊரில் எல்லாம் ஃப்ரீமார்ஷியல் லைஃப், எக்ஸ்ட்ரா மார்ஷியல் 

லைஃப், டேட்டிங் எல்லா சுதந்திரமும் பெண்களுக்குக் கிடைக்கிறது.”


சுமதி பதிலே சொல்லவில்லை. மேரியும் நிறுத்த வில்லை.

"அட்தி ஸேம் டைம்... ஓர் ஆண் தான் தாலி கட்டப் போகிற ஒரு பெண் எதிர்ப்படுகிறவரை அப்படி விரதம் காத்துக் கற்போடு பொறுத்திருக்கிறானா என்றால் இல்லை. ஆண் மட்டும் திருமணத்துக்கு முன்னால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண்தான் சுத்தமாயிருக்கணுமாக்கும்? இதுதான் இந்தியப் பண்பாடு என்கிறார்கள். என்ன பண்பாடோ இது?"


இதைக் கேட்டுச் சுமதி பதில் சொல்லாததோடு சற்றே எரிச்சலடைந்தாள். மேரி தன்னைக் குழப்பி மூளைச் சலவை செய்ய முயலுகிறாளோ என்ற எச்சரிக்கையும் ஜாக்கிரதை உணர்வும் மீண்டும் சுமதிக்குத் தோன்றியது.

"மேரி: ப்ளிஸ் லெட் மீ ஸீ த பிக்சர் ஃபர்ஸ்ட்... அப்புறம் நாளைக்கு இதெல்லாம் விவாதிக்கலாமே?” என்று துணிந்து குறுக்கிட்டு மேரியின் வாயை அடைத்தாள் சுமதி. இல்லாவிட்டால் அப்போது மேரி ஒய்ந்தே இருக்கமாட்டாள் என்று தோன்றியது.


படம் ஒருவிதமாக முடிந்தது. மேரியும் அவள் சிநேகிதர்களும் சுமதியும் கும்பலாகத் தியேட்டருக்கு வெளியே சேர்ந்து வந்தார்கள். மேரி இப்போது டாக்ஸி தேட வில்லை. அவள் தியேட்டரில் சந்தித்த சிநேகிதர்களில் நடுத்தர வயதை உடைய ஒருவர் ஒரு புத்தம் புது மெர்ஸிடீஸ் பென்ஸ் காரைக் கொண்டு வந்து நிறுத்தி அவர்கள் இருவரையும் அதில் ஏறிக் கொள்ளச் சொன்னார்.


"நீ வேணும்னாப் போ மேரீ! நான் ஒரு ஆட்டோவில் ஹாஸ்டலுக்குப் போய்க்கிறேன்” என்று சுமதி ஒதுங்கிக் கொள்ள முயன்றாள். 

"உன்னை ஒண்ணும் நான் கடிச்சு முழுங்கிட மாட்டேன் சுமதி! ஏறிக்கோ, ஹாஸ்டல் வாசல்லே டிராப் பண்ணிட்டு அப்புறம் நாங்க போறோம்” என்றாள் மேரி,


சுமதி மேலும் தயங்கவே அந்தக் காரின் உரிமையாளரே, "ஏறிக்கோம்மா!.. உன்னை ஹாஸ்டல்லே டிராப் பண்றேன், பயப்படாதே" என்று கெஞ்சினார்.


சுமதி மேலும் அவர்களிடம் மன்றாடிக் கொண்டு நிற்காமல், காரில் ஏறி முன் ஸீட்டில் மேரியின் அருகே அமராமல் பின் ஸீட்டில் தனியே அமர்ந்து கொண்டாள். கார் ஒசையின்றி வழுக்கிக் கொண்டு விரைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/6&oldid=1146878" இலிருந்து மீள்விக்கப்பட்டது