உள்ளடக்கத்துக்குச் செல்

அனிச்ச மலர்/16

விக்கிமூலம் இலிருந்து

16

சுமதியால் நடந்து விட்டதை மறுபடி நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் இருந்தது. தான் இழந்தது எத்தனை பெரிய விஷயம் என்பது ஞாபகம் வருகிற போதெல்லாம் அவள் உடல் நடுங்கியது. தன்மேல் தானே அறுவறுப்பு அடைந்தாள் அவள். தன்னைச் சமாதானப் படுத்த வந்த மேரியின் மேல் எரிந்து விழுந்தாள் சுமதி. சப்தம் கேட்டுக் கன்னையாவும் படுக்கையிலிருந்து உறக்கம் கலைந்து எழுந்திருந்து வந்தார். ஹிஸ்டீரியா வந்ததுபோல மேரியின் மேலும் கன்னையா மேலும் சீறிப் பாய்ந்து அறையவும், கைகளை மடக்கிக் கொண்டு முஷ்டியால் குத்தவும் தொடங்கினாள் அவள். உள்ளே கலவரம் கேட்டு 'கேர் டேக்கர்' போல அந்தப் படகு வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த ஓர் காஷ்மீர் ஆள் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான்.

மேரி விரைந்து சென்று அவனைப் போகச் சொல்லி ஆங்கிலத்தில் வேண்டிக் கதவைத் தாழிட்டுக் கொண்டு  வந்தாள். முதலில் சுமதியைத் தடுக்கவோ பதிலுக்குத் தாக்கவோ செய்யாமல் தன்மேல் அவளுக்கு ஏற்பட்ட ரவுத்திரத்தை அப்படியே அனுமதித்தாள் மேரி. கன்னையா தாங்கமாட்டார் என்பதனால் அவரை மட்டும் படுக்கை அறைக்குள் போய் உள்ளே தாழிட்டுக் கொள்ளும்படி ஜாடை காட்டினாள். அவரும் அப்படியே செய்து தப்பினார்.

சுமதியின் கோப வெறியும் ஆத்திரமும் தணிந்தபின் மேரி மெதுவாக அவளைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள். "உன்னை லட்ச லட்சமாகச் சம்பாதிக்கிற கதாநாயகியா ஆக்கப் போறாரு. புகழேணியின் உச்சிக்குக்கொண்டு போகப்போறாரு. நீயே யோசனை பண்ணிப்பாரு. அவரிட்ட இப்படி நடந்துக்கலாமா? இங்கே நடந்தது யாருக்குத் தெரியும்? யார் உன்னைத் தப்பா நினைக்கப் போறாங்க ? படிச்சவளான நீயே இப்படிப் பட்டிக் காட்டுப் பொண் மாதிரியா நடந்துக்கிறது? ஒண்னும் ஆகாது! நீயே கலவரப்படுத்தி ஊரைக் கூட்டி ஒப்பாரி வச்சு எல்லாருக்கும் உன்மேலே சந்தேகம் வர்ர மாதிரிப் பண்ணிப்பிடப்போறே. ரெண்டு 'பில்ஸ்' தரேன். முழுங் கிட்டுத் தண்ணியைக் குடிச்சுட்டு நடந்ததை மறந்துடு. வீண் வம்பு பண்ணி அடம்பிடிச்சேன்னா நீயா எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு சொன்ன கதையா ஆயிடும்” என்று பாதி நயமாகவும், பாதி மிரட்டலாகவும் சொன்னாள் மேரி. சற்று நிதானப்பட்டவுடன் வெளியூரில் தான் அநாதரவாக இருப்பது சுமதிக்குப் புரிந்தது. அழுது கதறி ஆகாத்தியம் பண்ணுவதனால் தானே தன் நிலைமையை வெளிப்படுத்திக் கொண்டதாய் ஆகிவிடும் என்ற பயமும் தற்காப்பு உணர்வும் வேறு அவளுக்கு ஏற்பட்டன. தன் ஆத்திரத்தையும் கோபத்தையும் பார்த்து அவர்கள் பதிலுக்குப் பழிவாங்க முற்பட்டுவிட்டால் புது ஊரில் புது இடத்தில் புது மனிதர்களுக்கிடையே தன் நிலை எவ்வளவு நிராதரவாகப் போய்விடும் என்ற எண்ணிய போது சுமதிக்குப் பயமாயிருந்தது. அவள் சுதாரித்துக் கொண்டு விட்டாள். . . . .  சுமதியின் ஆத்திரத்தையும், கோபத்தையும், அருவருப்பையும் தணிப்பதற்கு மேரி மேற்கொண்ட உபாயங்கள் பயனளித்தன. பேரும், புகழும், பணமுமாக வாழும் பல நட்சத்திரங்கள் அதற்காக எப்படி எப்படி எதை எதை இழந்திருக்கிறார்கள் என்றெல்லாம சுமதியிடம் விவரித்து அதெல்லாம் அங்கே சினிமா உலகில் சர்வசகஜம் என்பது போல் பலவற்றைச் சொல்லத் தொடங்கினாள் மேரி. வெளி உலகில் குணக்குன்றுகள் என்ற பெயரெடுத்த சில பெரிய குடும்பத்துப் பெண்கள் தனியே விரும்பியும் விரும்பாமலும் செய்த அந்தரங்கத் தவறுகளையும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமலே அவர்கள் மேற்கொண்டு செல்வாக்காக வாழ்வதையும் கூடச் சுமதியிடம் பொறுமையாக விவரித்தாள். 'இது ஒன்றும் இந்தக் காலத்தில் பெரிய தவறில்லை. இப்படி ஆகாமல் சினிமாவில் பேரும் புகழும் பணமும் பெற்ற பெண்ணே கிடையாது'-என்பதுபோல் பொறுமையாகப் பல பேருடைய உதாரணங்களைக் கதையாகச் சொன்னாள். இந்த மாதிரி விஷயங்களைச் சமாளிப்பதில் மேரிக்கு இயல்பாக இருந்த சாதுரியமும் அப்போது பயன்பட்டது-சுமதி அடங்கி வழிக்கு வரலானாள்.

சுமதியை மெல்ல மெல்ல நடந்ததை ஜீரணித்துக் கொள்வதற்குத் தயாராக்கிவிட்டாள் மேரி. அடிமேல் அடி வைத்த பின் அம்மியும் நகரத்தான் செய்தது.

"ஊருக்குத் திரும்பியதும் உன்னைக் கதாநாயகியாக அறிவிக்கும் புதுப் படத்தின் முழுப் பக்க விளம்பரம் உன்னுடைய உருவத்தோடு எல்லாப் பெரிய தினசரிகளிலும் வெளிவரும்"-என்று சுமதியிடம் கன்னையாவும், மேரியும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். காஷ்மீர் ஹேண்டிகிராஃப்ட்ஸ் எம்போரியம், பட்டுப் புடவைக்கடை எல்லாவற்றிற்கும் சுமதியை அழைத்துச் சென்று 'ஃப்ளாங் செக்' கொடுத்ததுபோல அவளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொள்ளச் சொல்லி  வற்புறுத்தியும் அங்கே இங்கே அழைத்துச் சென்றும் அடுத்தநாள் மாலைக்குள் அவர்கள் அவளைச் சரிக்கட்டி விட்டார்கள்.

தனது மாறுதலான நிலைமை, யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் தெரியும்படி நடந்து கொள்வதுதான் தன்னை அதிகம் காட்டிக் கொடுத்துவிடும் என்று எண்ணிச் சுபாவமாகவும், கலகலப்பாகவும் எல்லாரிடமும் பழகினாள் சுமதி. அவளே சமாளிக்கத் தயாராகியிருந்தாள்.

காஷ்மீரில் அவுட்டோர். ஷூட்டிங் நடந்து முடிந்து டில்லி திரும்பியதும் அங்கே இரண்டு நாள் தங்கினார்கள் அவர்கள். அந்த இரண்டு நாளில் சுமதியை யாரிடத்தில் அறிமுகப்படுத்தினாலும் "எங்கள் புதுப் படத்தின் கதாநாயகி' என்று கன்னையா அறிமுகப்படுத்தினார். மேரியும், கன்னையாவும், முக்கியமாகத் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் சுமதியையும் உடனழைத்துச் சென்றனர். அவளைத் தனியே விடவே இல்லை.

அவர்கள் சென்னைக்கு விமானத்தில் திரும்பிய நேரம் இரவு ஏழு மணிக்கு மேலிருந்ததனால்-மீனம் பாக்கம் விமான நிலையத்திலிருந்து சுமதி நேரே ஹாஸ்டலுக்குச் செல்வதா, அல்லது மேரி வீட்டிலாவது கன்னையா வீட்டிலாவது அன்றிரவு தங்கிவிட்டு அப்புறம் மறுநாள் காலை ஹாஸ்டலுக்கு மதுரையிலிருந்து இரயிலில் வந்து இறங்கியவளைப் போலச் செல்வதா என்ற யோசித்தார்கள்.

"என்னோடு வா! காலையில் டாக்ஸியில் அனுப்பி விடுகிறேன்” என்றாள் மேரி. சுமதியும் சம்மதித்தாள். கன்னையாவோடு போய் அவருடைய புரொடக்க்ஷன் அலுவலகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்ட பின்பு தான் அவர்கள் இருவரும் செயிண்ட் தாமஸ் மவுண்டுக்குக் காரில் புறப்பட்டுச் சென்றார்கள்.

மேரி வீட்டில் அன்றிரவு சுமதிக்கு உறக்கம் வர வில்லை. மனத்தில் பல நிகழ்ச்சிகள் உறுத்திக்  கொண்டிருந்தன. அரிதாகவும், பெரிதாகவும் போற்றிக்காத்த கன்னிமையை இழந்து விட்டோம் என்பது எல்லா ஆறுதல்களுக்கும் பின்புகூட ஒரு மறவாத் துயரமாக நினைவு வரத்தான் செய்தது. படுக்கையில் துங்குவது போல் பாசாங்கு செய்து புரண்டு கொண்டிருந்தாள் அவள். இரவு ஒரு மணிக்கோ ஒன்றரை மணிக்கோ யாரோ மெதுவாக வந்து மேரியை எழுப்பினார்கள்.

சுமதி கண்களை இறுக மூடிக்கொண்டு அயர்ந்து துரங்குவதுபோல நடத்துவிட்டாள். மேரியை எழுப்பிய ஆண் குரல், "ஒரு பார்ட்டி வந்திருக்காரு” என்றதும் அவள் எழுந்து சென்றுவிட்டு ஒருமணி நேரம் கழித்துத் திரும்பி வந்ததும் சுமதிக்கு நன்கு தெரியும். ஆனால் விடிந்தபோது அதெல்லாம் தனக்குத் தெரிந்ததாக அவள் மேரியிடம் காண்பித்துக் கொள்ளவில்லை.

காலைச் சிற்றுண்டி காபிக்குப் பின்பு சுமதியை ஒரு டாக்ஸியில் அவளுடைய பெட்டி முதலிய பயணச் சாமான்களோடு கல்லூரி விடுதிக்கு அனுப்பி வைத்தாள் மேரி.

"ஒண்ணும் பயப்படாதே! உனக்கு இனிமே அந்தக் காலேஜில் படிச்சுப் பிரமாதமா எதுவும் ஆகப் போறதில்லே. நாளைக்கே நீ பெரிய ஹீரோயினா ஜொலிக்கப் போறே... வார்டன் எதாவது கேட்டாள்னா முழிச்சிக்கிட்டு நிற்காதே. தைரியமா ஃபேஸ் பண்ணு” என்று டாக்சி புறப்படுவதற்கு முன்னால் சுமதிக்கு ஒர் அறிவுரையும் சொல்லியனுப்பி இருந்தாள் மேரி. எதற்காக அப்படி அவள் சொல்லியனுப்பினாளென்று சுமதிக்குப் புரியவே இல்லை.

மதுரையில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி லீவு கேட்டுக்கொண்டு காஷ்மீர் போயிருந்தாலும் செம்பரம்பாக்கம் அவுட்டோர் விஷயம் பத்திரிகைகளில் பிரசுரமானதும், வேறு சில சந்தேகங்களும் வார்டனைக் குழப்பிச் சந்தேகப்பட  ருக்கலாம் என்று நினைத்தாள் சுமதி. 'தான் காஷ்மீர் போனதுகூடப் பரம ரகசியமில்லை. சில சினிமாப் பத்திரிகையில் செய்தியாக வந்திருக்கக்கூடும்' என்றே அவளுக்குத் தோன்றியது. டாக்சியில் விடுதிக்குச் செல்லும்போது சுமதி இதை எல்லாம் யோசித்தாள். பெட்டியையும் பிற சாமான்களையும் தூக்கிச் செல்ல முடியாது என்பதால் ஹாஸ்டல் கேட் அருகே டாக்ஸியை நிறுத்திக்கொண்டு அங்கு நின்ற 'வாட்ச்மேனை' உதவிக்கு அழைத்தாள். அவன் தயங்கித் தயங்கி வந்தான். "வார்டன் அம்மா நீ வந்தால் வந்ததும் உடனே ஹாஸ்டல் நோட்டிஸ் போர்டைப் பார்க்கச் சொல்லிச்சும்மா. அதைப் பார்த்துப் போட்டு அப்பாலே ரூம்லே வந்து அந்தம்மாளைப் பார்ப்பியாம்" என்றான் வாட்ச்மேன்.

சுமதிக்குத் 'திக்'கென்றது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவள் மாடிப் படியில் சாமான்களை வைத்துவிட்டு ஆர்வத்தாலும், பதற்றத்தாலும் விரைந்து அடித்துக் கொள்ளும் நெஞ்சுடனே வார்டன் அறையை ஒட்டியிருந்த ஹாஸ்டல் நோட்டீஸ் போர்டைப் பார்த்தாள். பொய் சொல்லி லீவு பெற்றுக் கொண்டு கண்டபடி ஊர் சுற்றுகிற காரணத்துக்காக அவளை கல்லூரியிலிருந்தும் ஹாஸ்டலிலிருந்தும் 'சஸ்பெண்ட்' செய்திருப்பதாக வார்டன் அறிவித்திருந்தாள்.

அப்போது வார்டன் அறைக்குள்ளே இருப்பதாகத் தெரியவே சுமதி தயங்கியபடியே அந்த அறைக்குள் நுழைந்தாள். வார்டன் அவள் உள்ளே நுழைவதைத் தலை நிமிர்ந்து பார்த்தும்கூட 'வா' என்றோ 'இங்கே ஏன் வந்தாய்?' என்றோ கேட்கவே இல்லை. மறுபடி குனிந்து வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள். சுமதியின் நெஞ்சை உறுத்தியது அந்த அலட்சியம்.

சுமதியாக ஏதோ சொல்ல ஆரம்பித்தபோது, "சுமதி! யூ கெனாட் மேக் மீ எ ஃபூல்..” என்று சீறியபடியே சிவப்புப் பென்ஸிலால் கட்டம் கட்டி மார்க்

செய்யப்பட்ட ஒரு கத்தை நியூஸ்பேப்பர் கிளிப்பிங்ஸை எடுத்து மேஜை மேல் போட்டாள் வார்டன் மாலதி சந்திரசேகரன். அந்த நியூஸ் பேப்பர்'கட்டிங்ஸ்'எல்லாவற்றிலும் அவள் செம்பரம்பாக்கம் வெளிப்புறப் படப் பிடிப்புக் காட்சிகளில் கலந்துகொண்டது முதல் காஷ்மீர் புறப்படுகிற யூனிட்டோடு புறப்பட்டுச் சென்றதுவரை படங்களோடு செய்திகள் பிரசுரமாயிருந்தன. தன்னுடைய பொய், பச்சையாகக் கையும் களவுமாகக் கண்டு பிடிக்கப்பட்டுவிடவே சுமதி எதுவும் சொல்ல முடியாமல் கண்கலங்கி நின்றாள். "உங்க மதரோட கூட மதுரைக்கு நான் ட்ரங்க் ஃபோனில் பேசியாச்சு. இந்த 'வீக் எண்டிலே' உங்க மதர் இங்க வரா. நோட்டீஸ் போர்டிலே நீ பார்த்தது பழசு. லேடஸ்ட்டா நானும் பிரின்சிபாலும் உன்னை 'டிஸ்மிஸ்' பண்ணிக் காலேஜிலிருந்து அனுப்பிடறதுன்னு முடிவு பண்ணியாச்சு...”

சுமதிக்கு ஏதோ கெஞ்சிக் கதற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை; நெடுமரம்போல் சும்மா நின்றாள் சுமதி.

"ஒரு படிக்கிற பொண்ணுக்கு இத்தனை சூதுவாது, பொய் எல்லாம் இருந்தா எப்பிடி உருப்படப்போறே நீ? உங்கம்மா என்னாடான்னா நீ பிரமாதமாப் படிச்சுக் கிழிச்சு 'டிஸ்டிங்க்ஷனோட' பாஸ் பண்ணப் போறதா சொப்பனம் கண்டுண்டிருக்கா! நீயானால் கண்ட கண்ட சினிமாக் காலிப்பசங்களோடல்லாம் ஊர் சுத்திண்டிருக்கே. இதென்ன காலேஜ்னு நினைச்சியா? இல்லே சத்திரம், சாவடின்னு நினைச்சியா?”

"இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க வார்டன்! ஏதோ தெரியாத்தனமா...”

"சும்மாக் கதை அளக்காதேடீ! தெரியாத்தனமாவது ஒண்ணாவது?. தெரிஞ்சு விரும்பி ஆசைப்பட்டு வேனும்னுதானேடீ நீ இதெல்லாம் பண்ணியிருக்கே?”

"ஐ டோண்ட் வாண்ட் டு ஸீ யுவர் டர்ட்டி ஃபேஸ். கெட் அவுட், ஐ ஸே கெட் அவுட்”.

சுமதிக்கும் திடீரென்று ஆத்திரமும் ரோஷமும் வந்திருக்க வேண்டும். அவள் வார்டனின் அறையிலிருந்து வெளியேறிக் கீழே வராந்தாவிலிருந்து காசு போட்டுப் பேசும் ஃபோனில் போய் மேரியோடு பேசினாள். நடந்ததைச் சொன்னாள்.

"அப்படியா சங்கதி? நீ ஒண்ணும் அலட்டிக்காதே, மறுபடியும் ஒரு டாக்ஸி வச்சுக்கிட்டு நேரே இங்கே வா. அல்லது புரொட்யூஸர் கன்னையா வீட்டிலே போய் இரு. நான் அங்கே வந்துடறேன்”- என்றாள் மேரி.

சுமதி ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ஒரு ரூபாயைக் கையில் திணித்து மறுபடி அவன் உதவியுடனேயே பெட்டி சாமான்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வாசலிலேயே டாக்ஸி ஸ்டாண்டு இருந்ததனால் அவள் வந்து இறங்கிய அதே டாக்ஸியே அங்கு இன்னும் நின்றிருந்தது. டாக்ஸியில் ஏறிக்கொண்டு தி.நகரிலிருந்த கன்னையாவின் புரொடக்க்ஷன் அலுவலக வீட்டுக்கே டாக்ஸியை விடச் சொன்னாள் சுமதி.

அவள் போனபோது கன்னையா துாக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. பெட்டி சாமான்களை வராந்தாவில் இறக்கி வைக்க அங்கே இருந்த புரொடக்க்ஷன் அலுவலகப் பையன் உதவி செய்தான். கன்னையாவின் ஏ.ஸி. அறையிலிருந்து யாரோ ஒர் இளம் எக்ஸ்ட்ரா நடிகை அவசர அவசரமாக வெளியேறுவதை அந்தப் பதற்றமான மன நிலையிலும் சுமதி கவனிக்கத் தவறவில்லை. நல்ல வேளையாக ஃபோன் வெளியில் இருந்தது. அங்கிருந்தே மறுபடி மேரிக்கு ஃபோன் செய்தாள் சுமதி. மேரி உடனே வருவதாகப் பதில் சொன்னாள். சுமதியின் மனத்தில் என்னவோ அந்தக் கணமே தன்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் சினிமா உலகின் ஒளிமிக்க புதிய ஜொலிப்பு வாழ்க்கை ஆரம்பமாவதாகவும் தோன்றியது. அவள் கனவுகளில் மூழ்கியபடியே அப்படி நினைத்தாள். கன்னையா துக்கம் விழித்துச் சோம்பல் முறித்தபடி அறையிலிருந்து வெளியே வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/16&oldid=1146928" இலிருந்து மீள்விக்கப்பட்டது