உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

இங்கு மொத்தம் 36 ஸ்நானம் செய்ய வேண்டுமென்பது விதி அதற்கு ஒரு மாதம் தங்க வேண்டும், அது எல்லாம் நம்மால் முடிகிற காரியமா என்ன? ஆதலால் ஒரே நாளிலேயே முப்பத்தாக முழுக்குகள் போட்டு மேலே சொல்லிய ஸ்தான பலன்களையெல்லாம் ஒரேயடியாகப் பெற்றுவிட வேண்டியதுதான், தனுஷ்கோடியிலே தீர்த்தமாடிய பின்னரே ராமலிங்கரைத் தரிசிக்க வேண்டும் என்றும் கூறுவர். எது வசதியோ அப்படிச் செய்து கொள்ளலாம். நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைபவராயிற்றே இறைவன் ராமலிங்கர் அகில இந்தியப் பிரசித்தியுடையவர். இமசேது பரியந்தம் அவர் புகழ் பரவிக் கிடக்கிறது. இங்கு வரும் வடநாட்டு யாத்திரிகர்களின் எண்ணிக்கை சொல்லில் அடங்காது. வடக்கையும் தெற்கையும் இணைப்பதில் வெற்றி கண்டவர் இந்த ராமலிங்கர். அதுவே அவருக்குப் பெரிய புகழைத் தேடித் தந்திருக்கிறது.

தனுஷ்கோடியிலும் ராமேசுவரத்திலும் ஸ்நானம் பிராத்தனை எல்லாம் முடித்துக் கொண்டே இராமநாதபுரம் போய் அங்கிருந்த தர்ப்ப சயனம் (திருப்புல்லாணி) சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பர். புண்ணிய சேதுவை நினைக்கும் போதெல்லாம் சேது காவலர்களான சேதுபதிகளும் நம் நினைவுக்கு வருவார்கள், அவர்கள் குகனுடைய பரம்பரை என்று வழக்கு. முதல் சேதுபதியாகிய குகனுக்கு ராமர் பட்டம் கட்டியதைக் குறிப்பிடும் கல் ஒன்று இராமநாதபுரம் அரண்மனையில் இராமலிங்க விலாஸ் என்ற இடத்தில் இருக்கிறது. சேது காவலர்கள் ராமேச்சுரம் கோயிலில் செய்த திருப்பணிகள் அனந்தம். சடைக்கத் தேவர் உடையார் சேதுபதி முதல் பரம்பரையாக வந்த சேதுபதிகள் எல்லாம் பல நிபந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் கடைசியில் இருந்த பாஸ்கர சேதுபதியின் தான தருமம் உலகப் பிரசித்தம்.