பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

வேங்கடம் முதல் குமரி வரை

அழகான குமரியாக, நின்று தவம் செய்து அருள் புரிகிறாள். அவள் அப்படி தவம் செய்யும் தலமே கன்னியாகுமரி. அந்தக் குமரிமுனைக்கே செல்கிறோம் நாம் இன்று.

கன்னியாகுமரி செல்வதற்கு, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலை விட்டு இறங்கி, கிட்டதட்ட ஐம்பத்திரண்டு மைல் காரிலோ, பஸ்ஸிலோ போக வேணும். காரிலே போனாலும், பஸ்ஸலேபோனாலும், நேரே குமரிக்குச் செல்ல வழியுண்டு. இல்லாவிட்டால் நாகர்கோவில் போய் அங்கிருந்து செல்லலாம். ஊருக்கு வடபுறம் மேடான பிரதேசத்தில் கார் நின்று விடும்; அதன்பின் சரிவாக இறங்கும் பாதை வழியாகத்தான் கன்னிக்குமரியின் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம்செய் குமரி எல்லை

என்று பாரதி பாடிய பாட்டு அப்போது ஞாபகத்துக்கு வரும். தமிழ் நாட்டின், ஏன், இந்திய நாட்டின் தெற்கெல்லையே இக்குமரிமுனைதானே? ஆதலால் நேரே அக்குமரி முனைக்கே செல்லலாம். அங்கு அரபிக்கடல், வங்காளக்குடாக் கடல், இந்து மகா சமுத்திரம் மூன்றும் சேர்ந்து அலை வீசிக்கொண்டிருக்கும். சாதாரண நாளானால் அம்முனையில் நின்றே காலையில் சூரியன் கடலில் இருந்த எழுகின்ற காட்சியைக் காணலாம். அது போலவே மாலையில் சூரியன் கடலில் குளிப்பதைக் கண்டு மகிழலாம்.

நீங்கள் அதிஷ்டக்காரர்களாக இருந்து, நீங்கள் செல்லும் தினம் பௌர்ணமியாக இருந்து விட்டாலோ, சூரியாஸ்தமனத்தையும் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் காணும் பேறு பெறலாம். இந்தக் காட்சிகளைக் காண்பதற்கென்றே கன்னியாகுமரிக்கு ஒரு நடை நடக்கலாம். ஆனால் நாமோ நமது க்ஷேத்திராடனத்தில், குமரி முனையில் இருந்து தவம் செய்யும் பகவதியம்மையைக் கண்டு தரிசிக்க வந்தவர்கள் ஆயிற்றே! ஆதலால் கோயிலை நோக்கியே நடக்கலாம். கோயிலுள் செல்லுமுன் இந்த அம்மை இங்கு தவம் செய்வதைப் பற்றி நாட்டில் எழுந்திருக்கும் பல கதைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கதை; பரத கண்டத்தை ஆண்ட ஆதிப்பரத மன்னனது புதல்வர் எட்டுப்பேர்; ஆனால் குமரி என்று ஒரே புதல்வி. ஏழு