உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 4/003-032

விக்கிமூலம் இலிருந்து

3. திருமெய்யம் சத்தியமூர்த்தி

சந்தியசந்தனான அரிச்சந்திரன் கதை பிரசித்தமானது. அயோத்தி மன்னனாக இருந்த அரிச்சந்திரன் விசுவாமித்திரரால் கடுஞ்சோதனைக்கு உள்ளாகிறான். சொன்ன சொல்லைக் காப்பாற்ற நாட்டைத் துறந்து புறப்படுகிறான். மனைவியைப் பிறன் ஒருவனுக்கு அடிமையாக்குகிறான்; மகனை விற்கிறான். மேலும் மேலும் துன்பங்கள் வளருகின்றன. தன் மகன் பாம்பு கடித்து இறந்த போதும் காசி மன்னன் மகனைக் கொன்றதாகத் தன் மனைவி குற்றம் சாட்டப்பட்ட போதும் மனம் கலங்காமலேயே இருந்தான். பின்னர் தன்னை அடிமை கொண்ட வீரபாகுவின் ஆணைப்படி தன் மனைவியையே வெட்ட வாளை ஓங்கியபோதும்

பதி இழந்தனம் பாலனை
இழந்தனம், படைத்த
நிதி இழந்தனம் நமக்கு
உளதென நினைக்கும்
கதி இழக்கினும்
கட்டுரை இழக்கிலம்

என்ற உறுதிப் பாட்டில் நிலைத்து நின்றிருக்கிறான். அதனால் அவன் வெட்டிய வெட்டே மாலையாக விழுந்திருக்கிறது அவன் மனைவியின் கழுத்தில். சத்தியம் தலைகாக்கும், 'சத்யமேவ ஜயதே' என்ற உண்மையும் நிலைத்திருக்கிறது. இந்த சத்யகீர்த்தியின் சரித்திரம் தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஓர் அதிசயம். இப்படி வட நாட்டு அயோத்தி மன்னன்தான் புகழ் பெற்றான் என்றில்லை. தென் தமிழ் நாட்டிலும் ஓர் ஊர் சத்தியத்துக்கு உறைவிடமாக விளங்கியிருக்கிறது. அந்த ஊரில்தாள்: சத்தியமூர்த்தியாம் விஷ்ணுவும் சத்திய கிரீசுவரராம் சிவனும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மலை சத்யகிரி.; ஊரின் பெயரே - திருமெய்யம், அந்தத் திருமெய்யத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமெய்யம், தொண்டைமான் புதுக்கோட்டைக்குத் தெற்கே பதின்மூன்று மைல் தொலைவில் உள்ள ஒரு தாலுகாவின் தலைநகர். இதனை இன்று திருமயம் என்றே அழைக்கின்றனர், சத்யகிரீசுவரரும், சத்யமூர்த்தியும் வந்து தங்கியிருக்கிற தலம் திருமெய்யமாக இருப்பதில் விசேஷ மில்லைதான். என்றாலும் திருமெய்யமே நாளடைவில் திருமய்யம் எனத் திரிந்து, பின்னர் திருமயம் என்று குறுகியிருக்கிறது. வடக்கேயிருந்து காரிலோ, பஸ்ஸிலோ வருகிறவர் ஊர்ப்பக்கத்துக்கு வந்ததும் கோட்டைச் சுவரில் இருக்கும் பைரவரை வணங்கித்தான் ஊர் புகவேண்டும், அவ்வழியே செல்லும் பஸ்காரர்கள் கூட அந்த இடத்துக்கு வந்ததும் பஸ்ஸை நிறுத்தி, சிதறுகாய் ஒன்றைப் போட்டுவிட்டுத்தானே நகருகிறார்கள். நாமும் அப்படியே செய்யலாம். இந்தப் பைரவரை 'அவாய்டு' பண்ணிக்கொண்டுவர விரும்பினால் புதுக்கோட்டை மானாமதுரை லயனில் திருமயம் ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கெட் வாங்கி அங்கு இறங்கி மேற்கு நோக்கி நாலுபர்லாங்கு குளக்கரை வழியாக நடந்தால் ஊர் வந்து சேருவோம்.

ஊரைச் சுற்றி ஒரு பெரிய கோட்டை இருந்திருக்க வேணும், அதன் சிதைந்த சின்னங்கள் இன்னும் தெரிகின்றன. ஊருக்குள் நுழைந்ததும் நம் கண் முன் தெரிவது ஒரு சிறிய குன்றும் அதன் மேல் உள்ள கோட்டையும்தான். மலைமேலே ஏறுவது எளிது. ஆனால் அங்குள்ள காவல்காரனைத்தேடிப் பிடித்து அவனையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. ஏனென்றால் மலை மீதுள்ள கோட்டைச் சுவரிலுள்ள வாயிலைக் கதவிட்டுப் பூட்டி வைத்திருப்பார்கள். அதைத் திறக்கும் திறவு கோல் அக்காவல்காரனிடம் தானே இருக்கிறது. மலை ஏறி உச்சிக்குச் சென்றால் அங்குள்ள மேட்டில் பழைய பீரங்கி ஒன்றிருக்கும். அதன் பக்கத்தில் ஏறி நின்று வடபுறம் உள்ள ஏரி குளம் நெல் வயல் எல்லாவற்றையும் பார்த்தால் மனதுக்கு ரம்மியமாக இருக்கும். கோட்டையில் பார்க்கவேண்டியவை வேறு ஒன்றும் இல்லைதான். பின்னர் கீழே இறங்கி ஊரைச் சுற்றிக் கொண்டு வந்தால் முதலில் சத்தியமூர்த்தியாம் பெருமாள் கோயிலைப் பார்ப்போம். அதற்குக் கீழ்ப் பக்கத்தில் தான் சத்ய தீர்த்தம் என்னும் சிறு குளம் இருக்கும், இந்தச் சத்திய மூர்த்தியின் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தலம் ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக கருதப்படுகிறது. ஆதிரங்கம் என்றே அழைக்கிறார்கள். கோயில் வாயிலை ஓர் அழகிய கோபுரம் அணி செய்கிறது. கோயில் வாயிலைக் கடந்து சென்றால் ஒரு பெரிய மண்டபத்திடையே வந்து சேருவோம். தூண்களில் எல்லாம் நல்ல சிற்ப வடிவங்கள். இந்த மண்டபத்திலேயே ஆண்டாள் கண்ணன், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. வலப்புறத்தில் நரசிம்மருக்கு ஒரு சந்நிதி.

இந்த மண்டபத்தையும் அதை அடுத்த மண்டபத்தையும் கடந்துதான் தாயார் சந்நிதிக்கு வரவேணும். தாயார் திருநாமம் உஜ்ஜீவனத்தாயார். அங்குள்ள ஆழ்வார் ஆச்சார்யர் சந்நிதிக்குப் பின்னால் தான் மகாமண்டபம் இருக்கிறது. அம்மண்டபத்தில் சந்நிதியை நோக்கியவண்ணம் கருடாழ்வார் நிற்கிறார். இதை அடுத்தே சுந்தரபாண்டியன் குறடு. அதன் வழியாகச் சத்தியமூர்த்தி சந்நிதிக்குச் செல்ல வேணும். சத்தியமூர்த்தியின் கருவறை மலைச் சரிவை ஒட்டியிருக்கிறது. தூண்களில் எல்லாம் புஷ்பப் போதிகைகள், தாமரை மொட்டுகள் எல்லாம் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சத்தியமூர்த்தியினை மங்கை மன்னன் மங்களா சாசனம் செய்திருக்கிறான்.

மையார் தடங்கடலும்
மணிவரையும் மாமுவிலும்
கொய்யார் குவளையும்
காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய
மலையானை, சாக்கேந்தும்
கையானைக் கைதொழாக்
கையல்ல கண்டோமே

என்ற பாடல் மிக நல்ல பாட்டாயிற்றே. இந்த மெய்யனையே சத்தியமூர்த்தி, சத்திய நாராயணர் என்றெல்லாம் அழைக்கிறார்கள், 'மொய் வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்தும் மெய் வண்ணம் நினைந்தார்க்கு மெய் நின்ற வித்தகன்' என்றே பாராட்டப்பட்டவன் இவன். இமயமலையிலிருந்து தவம் செய்த முனிவர் சத்தியரே இங்கு எழுந்தருளி இப்பெருமானைப் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு. கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கி இருந்தாலும் இவர் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கின்றார்.

இந்தச் சந்நிதிக்கு மேற்கேதான் பாறையில் குடைந் தெடுக்கப்பட்ட குடைவரையுள்ளது. அக்குடைவரையின் உள்ளேயே போகசயனமூர்த்தியும் இருக்கிறார். இங்கு இவருடைய அனந்தசயனக் கோலம் எல்லாம் மலையைக் குடைந்து அமைத்தது. பாம்பணையனாக இருக்கும் ஆதிசேஷன் பெருமானுக்குக் குடை பிடிக்கிறான், பெருமானுக்கு ஸ்ரீ ரங்கத்தில் இருப்பது போலவே இரண்டு திருக்கரங்கள்தாம். ஒன்று ஆதிசேஷனுக்கு அருளுவது போல் உயர்ந்திருக்கிறது, மற்றொரு கை, வக்ஷ ஸ்தலத்தில் இருக்கும் லக்ஷ்மியைப் பாதுகாக்கும் நிலையில் இருக்கிறது. சயனமூர்த்தியைச் சுற்றிக் கருடன், சித்திரகுப்தன், மார்க்கண்டேயர்; பிரமன் எல்லாரும் இருக்கிறார்கள். வான வீதியிலே தேவர்களும் கின்னரர்களும் விரைந்து செல்லும் காட்சி மற்றத் தலங்களிலும் காணக்கிடையாததொன்று. பெருமானின் காலடியில் மதுகைடபர் என்ற அசுரரும், பூமி தேவியும் இருக்கிறார்கள், அன்று பூமிதேவியை மதுகைடபர் தூக்கிச் சென்றபோது ஆதிசேஷன் தன் விஷத்தை அவர்கள் மீது கக்கியிருக்கிறான். அவர்கள் பஸ்மீகரமாகி யிருக்கிறார்கள். பரந்தாமனது கட்டளை இல்லாமலேயே ஆதிசேஷன் தானாகவே விஷம் கக்கியதற்கு வருந்தியிருக்கிறான். அதனாலேயே! அவனைச் சாந்தி செய்யும் கோலத்தில் இந்த அனந்தசயனர் கிடக்கிறார் என்பது புராணக்கதை, இங்குள்ள பெருமாளும் மாமல்லபுரத்து தலசயனப் பெருமாளும் ஒரே கோலத்தவர். ஆம்! மெய்யத்துக் குடைவரையும் மாமல்லபுரத்தைப் போல் பல்லவர் பணிதானே.

இந்த மெய்யத்துப் பெருமானை வணங்கிய பின் மேலே நடந்து அடுத்த கோயிலான சத்தியகிரீசுவரர் கோயிலுக்கு வரலாம். நிரம்ப நடக்க வேண்டியதில்லை. ஒரு சிறு தெருவைத்தான் கடக்க வேணும். இந்தக் கோயிலையும் ஒரு சிறு கோபுரம் அழகு செய்யும். வாயிலைக் கடந்தால் முன் மண்டபத்தில் பானு உமாபதீசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கியபடி இருக்கும். இவற்றைக் கீழைக் கோயில் என்பார்கள். இங்கேயே ராஜ ராஜேஸ்வரி தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறாள். இதற்குக் கொஞ்சம் மேலேதான் வேணுவன ஈசுவரி கோயில், இதையும் கடந்துதான் சத்தியகிரி ஈசுவரர் சந்நிதி இருவருமே குடைவரையுள் இருப்பவர்தான். பெருமாளைக் குடைந்தெடுத்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனே சத்தியகிரியாரையும் குடைந்து அமைத்திருக்கிறான். குடைவரையில் மேல் கோடியில் லிங்கம் இருக்கிறது. மலையைக் குடைந்து நிர்மாணிக்கப்பட்டவரே இவர். இவரது கருவறை, அதற்கு முன்னுள்ள அர்த்தமண்டபம், அங்குள்ள நந்தி எல்லாம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டவை. இங்குள்ள தூண்கள் அடியில் உருளையாகவும் நடுவில் எட்டுப் பட்டை போட்டவையாகவும் இருக்கும். பல்லவர்காலக் குடைவரைதான் என்பதற்கு இது ஒரு சான்று. இங்குள்ள துவாரபாலகர்களுக்கு எல்லாம் இரண்டே கைகள் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. வலம்புரி விநாயகர் வேறே இங்கு உருவாகியிருக்கிறார். முன்னர் குடுமியான் மலையில் கண்டது போல் இங்கே சங்கீத வின்னியாசக் கல்வெட்டு ஒன்று உண்டு, ஆனால் அவையெல்லாம் சிதைந்துபோய்விட்டன. இங்கு சோழர் காலத்துச் செப்புப் படிமங்கள் பல இருக்கின்றன.

வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயான நாயகர் ஆவார் தோழி!
தாமரைக் கண்கள் இருந்தவாறு

என்று மங்கை மன்னர் சத்தியமூர்த்தியையே பாடியிருந்தாலும், தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெறாத சத்திய கிரீசுவரருக்குமே இப்பாடலை ஏற்றலாம். ஏற்றித் துதித்து வணங்கித் திரும்பலாம்.

இக்கோயிலில் கல்வெட்டுகள் நிரம்ப இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது குடுமியான் மலையில் உள்ளதுபோல் சங்கீத வின்னியாசத்தைப் பற்றியது. ஆனால் இந்தக் கல்வெட்டின் மேலேயே வெட்டிய கல்வெட்டு குடைவரை அமைப்பு முதலிய சான்றுகளைக் கொண்டு இக்கோயில் மகேந்திரவர்ம பல்லவனே கட்டியிருக்க வேண்டும் என்று கருத இடம் இருக்கிறது. சத்திய மூர்த்தியின் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றின் மூலம் சாத்தன் மாறன் இக்கோயிலைப் புதுப்பித்தான் என்றும் தெரிகிறது. அவன் தாயான பெருந்தேவி நிலமான்யம் நிரம்ப அளித்திருக்கிறாள் என்றும் தெரிகிறது. சாத்தன் மாறன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன். அதன் பிறகு விஜயாலய சோழன் சந்ததியினரே இந்த நாட்டை ஆண்டிருக்கின்றனர். அவர்களின் பிரதிநிதியான அப்பண்ண தண்ட நாயகன் ராமேசுவரத்திலிருந்து திரும்பி வரும்போது இத்தலத்தில் தங்கி இங்குள்ள இரண்டு கோயில் தர்மகர்த்தாக்களுக்குள், ஏற்பட்டிருந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்திருக்கிறான். இத்தண்ட நாயகன் ஹொய்சள தளகர்த்தன். இவன் சிவவிஷ்ணு ஆலயங்களுக்கு இடையே ஒரு சுவர் நிரந்தரமாக எழுப்பியிருக்கிறான். இதை ஒரு கல்வெட்டில் குறித்திருக்கிறான்.

இந்தக் கல்வெட்டு கி.பி. 1245-இல் பொறிக்கப்பட்டது என்றும் தெரிகிறது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்த வட்டாரம் சேதுபதியின் ஆளுகையில் இருந்திருக்கிறது. அவர்களில் விஜய ரகுநாத ராயர் என்பவர் இந்தப் பிரதேசத்தைப் புதுக்கோட்டை தொண்டைமான்களுக்குக் கொடுத்திருக்கிறார். பின்னர் தஞ்சாவூரிலிருந்து ஆனந்தராவ் புதுக்கோட்டை மீது படையெடுத்து வந்தபோது விஜய ரகுநாதத் தொண்டைமான் இத்திருமெய்யம் கோட்டையிலேயே வந்து ஒளிந்து கொண்டிருந்திருக்கிறான். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான கட்டபொம்மனும் ஊமைத்துரையும் இந்தக் கோட்டையில் வந்து ஒளிந்திருந்தார்கள் என்பதும் கர்ண பரம்பரை. இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் கோட்டை பிந்திக் கட்டப்பட்ட தொன்று என்றும், கோயில் மகேந்திரவர்மன் காலத்தே வெட்டப்பட்டது என்பதும் விளக்கமுறும். திருமெய்யத்து இன்னமுதன் என்று பெரிய திருமடலிலேயே திருமங்கை மன்னனால் பாராட்டப்பட்டவன் அல்லவா இந்தச் சத்தியமூர்த்தி?