உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 4/025-032

விக்கிமூலம் இலிருந்து

25. ஸ்ரீ வைகுந்தத்துக் கள்ளப்பிரான்

காதல் வயப்பட்ட பெண் தன் காதலனுக்குத் தூது அனுப்புவது இயற்கை. அப்படியே ஒரு பெண் திருவரங்கநாதனிடமே காதல் கொள்கிறாள். அவனோ உதாசீனமாக இருக்கிறான். ஆதலால் தூதனுப்ப விரைகிறாள். சாதாரணமாகத் தோழியரையோ, கிளிகளையோ, அன்னங்களையோ, வண்டுகளையோ, தூதனுப்பவது தானே வழக்கம். இவள் நினைக்கிறாள், இவர்களையெல்லாம் அனுப்பினால் அவர்கள் இவளை வஞ்சிக்கமாட்டார்கள் என்பது என்ன உறுதி? ஆதலால் தனக்கு உற்ற துணையாக இருக்கும் நெஞ்சையே தூது அனுப்புகிறாள். ஆனால் நடந்தது என்ன? சென்ற நெஞ்சு திருவரங்கனை வணங்கி, தூது சொல்லிவிட்டுத் திரும்பாமல் அவன் அகன்ற மார்பின் அழகிலே லயிக்கிறது. கடைசியாகத் தான் வந்த காரியத்தை மறக்கிறது. ஏன், தன்னையுமே மறந்து விடுகிறது. அப்புறம் எப்படித் தூது சொல்லி மீளுவது? இப்படித் தன் உள்ளங்கவர்ந்த கள்வனாம் அரங்கனது காதலை வெளியிடுகிறாள் பெண் ஒரு பாட்டிலே, பாடியவர் திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். பாடல் இதுதாள். தோழியிடம் கூறுவதாகப் பாவனை.

நீர் இருக்க, மடமங்கைமீர்! கிளிகள்
தாமிருக்க, மதுகரம் எல்லாம்
நிறைந்திருக்க, மட அன்னம் முன்னம் நிரை
யாயிருக்க, உரையாமல் யான்
ஆரிருக்கினும் என் நெஞ்சம் அல்லது ஒரு
வஞ்சமற்ற துனை இல்லை என்று
ஆதரத்தினோடு தூது விட்ட பிழை
யாரிடத்து உரை செய்து ஆறுகேன்

சீரிருக்கும் மறைமுடிவு தேடரிய :திருவரங்கரை வணங்கிடே
திருத்துழாய்தரின் விரும்பியே கொடு
திரும்பியே வருதல் இன்றியே
வாரிருக்கு முலை மலர் மடந்தை உறை
மார்பிலே பெரிய தோளிலே
மயங்கி, இன்புற முயங்கி என்ளையும்
மறந்து தன்னையும் மறந்ததே.

இப்படி உள்ளங் கவர்ந்த கள்வன் அரங்கநாதன் மட்டும் அல்ல, சைவ உலகிலும் சீர்காழித் தோணியப்பர். பிள்ளைப் பிராயமே உள்ள ஞானசம்பந்தனது 'உள்ளங் கவர் கள்கூ'னாக இருந்ததையும் தான் அவர் முதற் பாட்டிலேயே படித்திருக்கிறோமே. ஆனால் இப்படி உள்ளங்கவர் கள்வனான பெருமாள் உண்மையாகவே ஒரு கள்வனுக்கு அவன் தொழிற்பட உதவியதோடு அவனுடைய உருவையே தாங்கி அரசன் முன் வந்திருக்கிறார் என்றால் அதிசயம்தானே. ஒரு காட்டிலே காலதூடகன் என்று ஒரு கள்ளர் தலைவன் இருக்கிறான், அவனும் அவன் சகாக்களும் திருடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவன் நல்லவர்களை நெருங்குவதில்லை. தீயவர்களையே தேடிச் சென்று திருடி வருகிறவன். திருட்டில் கிடைத்த பொருளில் பாதியைப் பரந்தாமனுக்கே கொடுத்துவிடுகிறான். மீதத்திலும் தன் வாழ்க்கைக்கு வேண்டியது போக மிச்சம் இருப்பதை ஏழைகளுக்குப் பகிர்ந்து அளித்து விடுகிறான். இப்படிப்பட்ட கள்ளனைப் பரந்தாமன் கைவிட்டுவிட முடியுமா என்ன? எப்படியோ ஒரு நாள் அரசகாவலர் இவனது சகாக்களைப் பிடித்து வருகின்றனர். இவன் மட்டும் தப்பித்து வந்து பரந்தாமனின் திருவடிகளில் விழுகிறான். பக்தனைக் காக்கும் பரம தயாளன் ஆயிற்றே அவர், ஆதலால் அவரே காலதூடகன் வேடத்தில் அரசனிடம் சென்று தம்மை ஒப்புவித்துக் கொள்கிறார். தம் உண்மை வடிவினையும் காட்டுகிறார். 'தருமம் செய்யப் பெறாத பொருள்கள் அழியும், அதனையே அரசர் கைப்பற்றுவர், திருடர் கவர்வர் என்ற உண்மையை உனக்கு அறிவிக்கவே காலதூடகனைத் தோற்றுவித்தோம். அவனுக்குத் துணை நின்றோம்' என்று தம் செயல் விளக்குகிறார். பரந்தாமனது திவ்ய தரிசனம் பெற்ற அரசன், 'ஐயா கள்ளப்பிரானே! உம் திருவருள் வழியே நானும் நிற்பேன்' என்று அவர் திருப்படிகளில் விழுந்து வணங்குகிறான். இப்படித்தான் உள்ளங்கவர் கள்வனான பரந்தாமன் கள்ளப்பிரானாகலம் நின்றிருக்கிறார். இந்தக் கள்ளப்பிரான் கோயில் கொண்டிருக்கும் தலமே ஸ்ரீ வைகுந்தம் அந்த ஸ்ரீ வைகுந்தத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

பரம பதத்திலுள்ள ஸ்ரீ வைகுந்தத்துக்கோ கைலாயத்துக்கோ நம்மால் போக முடிகிறதோ என்னவோ, ஆனால் பூமியிலுள்ள ஸ்ரீ வைகுந்தத்துக்கு ரயிலிலே போகலாம், காரில் போகலாம், பஸ்ஸிலேயும் போய் சேரலாம், சென்று திரும்பவும் செய்யலாம். ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலிக்கு நேர் கிழக்கே பதினேழு மைவில் உள்ள சிறிய ஊர். ஒரு தாலுகாவின் தலைநகரம். தண்பொருநை நதியின் வடகரையில் கள்ளப்பிரான் கோயில் இருக்கிறது. திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் மார்க்கத்தில் சென்று ஸ்ரீ வைகுண்டம் ஸ்டேஷனில் இறங்கி, தாமிரபருணி ஆற்றில் கட்டியிருக்கும் அணையோடு கூடிய பாலத்தையும் கடந்து நாலு பர்லாங்கு சென்றால், கள்ளப்பிரான் கோயில் வாயில் வந்து சேரலாம். பாலத்தின் மீது நடக்கும் போதே தூற்றுப் பத்தடி உயரம் வளர்ந்துள்ள கோயில் கோபுரம் தெரியும்.

கோயிலும் பெரிய கோயில்தான். 580 அடி நீளமும் 396 அடி அகலமும் உள்ள மதிலால் சூழப்பட்டிருக்கும் கோயில் என்றால் கேட்கவா வேணும்? கோயில் வாயிலில் ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கோயிலின் பார்வை அழகைக் கெடுத்திருக்கிறார்கள். அதனை அடுத்து இருப்பதே ராமாயணக் குறடு உடைய மண்டபம். அதன் பின்னரே கோபுர வாசல். அந்த வாயில் வழியாகவே உள்ளே செல்ல வேணும். நாமோ கள்ளப்பிரானைக் காணும் ஆவலோடு வந்தவர்கள். ஆதலால் கொடிமர மண்டபம். இடைநிலைக் கோபுர வாயில், கருட மண்டபம், மணி மண்டபம் எல்லாம் கடந்து அர்த்த மண்டபத்துக்கே போய்விடலாம். அங்கே தான் தங்க மஞ்சத்திலே திருமகளும் நிலமகளும் இருபுறமும் இருக்கக் கள்ளப்பிரான் கையில் கதையுடன் நிற்கின்றார். நல்ல தங்கக் கவசம் அணிந்திருக்கிறார். அதைவிட அழகான திருமேனி உடையவர் அவர். அவரைச் சமைக்க சிற்பி அவரது திருமேனி அழகினால் கொள்ளை கொள்ளப்பட்டு மெய்மறந்து அவருடைய கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினான் என்றும், அப்படி அவன் தொட்டுக் கொஞ்சிய இடம் கன்னத்தில் பதிந்திருக்கிறது என்றும் சொல்வார்.

இந்த அர்த்த மண்டபத்துக்கும் அப்பால் உள்ள கருவறையிலேதான் வைகுந்த நாதர் நல்ல சிலை வடிவிலே நின்று கொண்டிருக்கிறார். சோமுகாசுரன், பிரம்மாவிடத்திலிருந்து நான்கு வேதங்களையும் பிடுங்கிச் செல்ல, அதற்காக வருந்தி பிரமன்தவம் செய்ய, வைகுந்தநாதன் பிரம்மனது தவத்துக்கு இரங்கிக் கருடன்மீது ஏறிவந்து சோமுகாசுரனை வென்று மறைகளை மீட்டுப் பிரம்மாவிடம் கொடுத்திருக்கிறார். கருவறையில் அந்த அரங்கநாதனைப்போல, ஸ்ரீதேவி பூதேவி எல்லாம் இல்லாமல் தனித்தே இருக்கிறார் வைகுந்தநாதர். பிரம்மனுக்காக அவசரமாக எழுந்தருளிய காரணத்தால் தன்னந்தனியே வந்திருக்கிறார் போலும். இவரையே பால் பாண்டியன் என்றும் அழைக்கிறார்கள். அன்று நான்முகன் பூசித்த வைகுந்த நாதர், சிலகாலம் மன்துக்குள்ளேயே மறைந்திருக்கிறார், அப்படி மறைந்திருந்த இடத்தில் அங்குள்ள பசுக்களெல்லாம் பால் சோரிய, அதை அரசனிடம் கோவலர்கள் அறிலித்திருக்கிறார்கள். அந்த இடத்துக்கு மன்னன் வந்து வெட்டிப் பார்த்து வைகுந்தநாதனை வெளிக் கொணர்ந்திருக்கிறான். இது காரணமாகவே இவருக்கு நாள்தோறும் பால் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பாற்கடலிலே பள்ளிகொள்ளும் பரந்தாமன் பால் திருமஞ்சனம் பெறுவதும் அதனால் பால் பாண்டியன் என்று பெயர் சூட்டப்படுவதும் அதிசயமில்லைதானே.

இந்த வைகுந்தநாதனை வருஷத்துக்கு இரண்டு முறை சூரியன் வழிபாடு செய்கிறான். சித்திரை மாதம் ஆறாம் தேதி, ஐப்பசி மாதம் ஆறாம் தேதி இரண்டு நாட்களும் இளஞ்சூரியனது கிரணங்கள் கோபுர வாயில், மண்டபம் எல்லாம் கடந்து வந்து வாலகுந்தன் மேனியைப் பொன்னிற மாக்குகின்றன. இந்தச் சூரிய பூசனை பரந்தாமனுக்கு நடப்பது இத்தலம் ஒன்றிலே தான் என்று அறிகிறோம்.

இனி வெளியே வந்து வலமாகச் சுற்றினால், கன்னி மூலையில் வைகுண்டநாயகி, அதற்கு எதிர்த்த திசையில் சோரநாத நாயகியுடன் தனித்தனிக் கோயிலில் கொலுவிருப்பதைக் காணலாம். சோரநாத நாயகி சந்நிதி மண்டபத்தைக் கடந்து வந்தால் பரமபத வாசலைக் காண்போம். அது ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மாத்திரமே திறக்கப்படும். அதன் பக்கத்திலேயே மணவாள மாமுனிகள் சந்நிதி இருக்கிறது. அங்கும் வணக்கம் செலுத்திவிட்டு மேலும் நடந்தால், சிலை உருவில் தசாவதாரக் காட்சியைக் காண்போம். இந்த வடிவங்களெல்லாம் எண்ணெய்ப் பசை ஏறி உருமழுங்கி நிற்கின்றன. இதற்கு எதிர்த்திசையில் தென்கிழக்கு மூலையில் யோக நரசிம்மர், சிலை உருவில் தனிச் கோயிலில் இருக்கிறார். அவர் முன்பு லக்ஷ்மி நரசிம்மர் செப்புச் சிலை உருவில் அழகிய வடிலில் அமர்ந்திருக்கிறார். இச்சந்நிதியில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை இரவிலும் சிறப்பான பூசை நடக்கிறது.

இவர்களையெல்லாம் கண்டு வணங்கிவிட்டு வெளிவந்தால் பலிபீடம், கண்ணன் குறடு, இவற்றுக்கு வடபுறம் ஒரு பெரிய மண்டபம் தோன்றும். அங்குதான் திருவேங்கட முடையான் சந்நிதி இருக்கிறது. இக்கோயிலின் சிற்பச் சிறப்பெல்லாம் இம்மண்டபத்தில்தான். வரிசைக்கு ஒன்பது சிங்கப் போதிகையோடு கூடிய யாளிகள் இருக்கின்றன. யானைமேல் யாளியும், யானையின்மேல் சிங்கமும் அதன்மேல் யாளியும் உள்ள தூண்கள் அவை. தெற்கேயிருந்து மூன்றாவது தரணில் யாளிகள் வாயில் அனுமார் நிற்கிறார். இங்குள்ள ஒவ்வொரு தூணின் மேலும் அனுமார் பலப்பல உருவங்களில் இருக்கிறார். ஆழ்வாராதியாகளும்



ஸ்ரீ வைகுண்டம் சுக்ரீவ சக்யம்
இருக்கிறார்கள். மண்டபத்தில் முகப்பில் உள்ள தூண் ஒன்றில் அகோர வீரபத்திரன் காட்சி கொடுப்பார். இவைகளையெல்லாம் விடச் சிறந்த வடிவங்கள் இரண்டு இம்மண்டப முகப்பில் உண்டு. ஒன்று ராமன் சீதாப்பிராட்டி சகிதனாகத் தனது இலங்கைப் படையெடுப்புக்கு உதலிய சுரீவனை அணைத்து அருள்பாலிப்பது. சுக்ரீவ ஸக்யம் இதிகாசப் பிரசித்த உடைய வரலாறு ஆயிற்றே. அதைக் கல்லில் காட்டும் காவியமாகச் சிற்பி வடித்தெடுத்து நிறுத்தியிருக்கிறான், ராமன் சக்ரீவனுக்கு அருள்பாலிக்கும்போதே லக்ஷமணனும் அங்கதனையும் அனுமனையும் அணைத்துக்கொண்டு நிற்கிறார். இப்படி, வானர வீரர்களை ராமனும் லக்ஷமன்னும் அணைத்துக் கொண்டு நிற்கும் காட்சி சிற்ப உலகிலே அவூர்வமானவைதாமே.

இத்தலமும் இதனை அடுத்துள்ள எட்டுத் தலங்களும் நம்மாழ்வார் பாடிய நவ திருப்பதிகள். அவைகளில் பொருநைபாற்றின் தென் கரையில் இருப்பவை நம்மாழ்வார் கோயில் கொண்டிருக்கும் ஆழ்வார் திருநகரி என்னும் குருகூரும், நம்மாழ்வாரது சிஷ்யரான மதுரகவியாழ்வார் பிறந்த திருக்கோகரும், மகரநெடுங்குழைக்காதர் கோயில் கொண்டுள்ள தென் திருப்பேறையும் ஆகும். மற்றவை ஸ்ரீ வைகுந்தம், நந்தம் என்னும் வரகுணமங்கை, திருப்புளிங்குடி, பெருங்குளம். இரட்டைத் திருப்பதி என்னும் தொலைவில்லிமங்கலம் ஆகும். நவ திருப்பதிகளையும் நம்மாழ்வார் பாடியிருக்கிறார். அதில் பிரபலமான பாட்டு ஒன்றில் புளிங்குடி, வரகுணமங்கை வைகுந்தத்திலுள்ள மூவரையும் சேர்த்தே பாடியிருக்கிறார்.

புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை
இருந்து, வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
என்னை ஆள்வாய், எனக்கருளி

நளிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்பு
நாங்கள் கூத்தாடீ நின்று ஆர்ப்ப
பரிங்கு நீர் முசிலின் பவம்போல் கனிவாய்
சிவப்ப நீ காலாவாராயே!

என்பது பாசுரம்.

இக்கண்ணபிரான் கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஒன்று தேவர் பிரான் நாதருக்குக் கோனேரி மேல் கொண்டான் வல்லநாட்டில் ஐந்து மாநிலம் மடப்புற இறையிலியாக் கொடுத்ததைக் குறிக்கிறது. திருவரங்கப் பெருமான் பல்லவராயர் பிரதிஷ்டை பண்ணியவர் வைகுந்தவல்லி என்ற தகவலும் கிடைக்கிறது. சடாவர்மன், குலசேகரர் கோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர் முதலியோர் செய்த திருப்பணி விவரங்கள் கிடைக்கின்றன. இத்தலத்தில்தான் குமரகுருபர அடிகள் பிறந்து வளர்ந்தார் என்பதும் யாவரும் அறிந்ததொன்றே.

வைகுந்தம் வரை வந்துவிட்டோமே, திருக்கயிலாயம் இங்கிருந்து மிகவும் தூரமோ என்று சைவ அன்பர்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது. இல்லை, வைகுந்தத்திலிருந்து கூப்பிடு தூரமே கைலாயம் என்பதையும் இத்தலத்திலேயே தெரிந்து கொள்ளலாம். இந்தக் கள்ளப்பிரான் கோயிலிலிருந்து கூப்பிடு தூரத்திலேயே கைலாசநாதர் கோயில் இருக்கிறது. அங்கும் சிறு சிறு சிற்ப வடிவங்கள் நிறைய உண்டு. கள்ளப் பிரானைத் தரிசித்த கண் கொண்டே கைலாயநாதரையும் தரிசித்துத் திரும்பலாம்.