உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 4/026-032

விக்கிமூலம் இலிருந்து

26. ஆழ்வார் திருநகரி ஆழ்வார்

நேபாளத்தில் கபிலவஸ்து என்ற இடத்தில் சுத்தோதனர் என்று ஓர் அரசர் இருந்தார். அவருக்கு மாயாதேவி என்பவள் மளைவி. இவர்களுக்குப் பிள்ளைாகச் சித்தார்த்தர் பிறந்தார். இந்தச் சித்தார்த்தர் யசோதரையை மணந்தார். ராகுலன் என்ற மகனைப் பெற்றார். இல்லறமாம் நல்லநத்திலே வாழ்ந்த இந்த ராஜகுமாரராம் சித்தார்த்தர் உலகிலுள்ள மக்கள் பினி, மூப்பு, சாக்காடு முதலிய துன்பங்களால் துயருறுவதைக் கண்டு மனம் தளர்ந்தார். பிறவிக் கடலைக் கடந்து இத்துன்பங்களினின்றும் நீங்க வழி எது என்று சிந்திக்கலானார். கடைசியில் ஒரு நாள் இரவு மனைவி மக்கள் எல்லாரையும் உதறி விட்டு அரண்மனையிலிருந்து வெளியேறினார். ஆறு ஆண்டுகள் பல இடங்களில் திரிந்தவர் கடைசியாகக் கயாவுக்கு வந்து அங்குள்ள போதி மரத்தடியில் அமர்ந்தார். அங்குதான் அவர் மெய்யறிலைப் பெற்றார். போதி மரத்தடியிலிருந்து ஞானம் பெற்று உலகுய்ய வழிகாட்டிய இந்தப் பெருமகனே புத்தர். அவர் காட்டிய வழி நிற்பவர்களே பௌத்தர்.

இவரைப் போலவே தென் தமிழ் நாட்டில் ஒரு புளிய மரப் பொந்திலிருந்து ஞாலோபேதேசம் செய்த பெருமான்தான் நம்மாழ்வார். தண்பொருநை நதிக்கரையில், முன்பு குருகூர் என்று பெயர் பெற்ற இன்றைய ஆழ்வர் திருநகரி தலத்திலே காரியார் என்ற சிற்றரசருக்கும் உடைய நங்கைக்கும் திருமகனாய்ச் சடகோபர் தோன்றினார். பிறந்ததிலிருந்தே மற்றக் குழந்தைகளைப் போல் பாலுண்ணல், அழுதல் முதலிய செயல்களின்றிக் கண்மூடி மௌனியாக இருந்தார். இது கண்டு வியப்புற்ற பெற்றோர், சில நாட்கள் சென்றபின் பிள்ளையை எடுத்துக் கொண்டு அவ்வூரில் உள்ள ஆதிநாதர் கோயிலுக்குச் சென்றனர். கோயிலுள் சென்றதும் சடகோபர் மெள்ளத் தவழ்ந்து கோயில் பிராகாரத்திலுள்ள புளிய மரத்தடியில் அமர்ந்து கொண்டார். உணவும் நீரும் இன்றி வாழ்ந்தாலும் குழந்தையின் உடல் வளர்ச்சி குன்றவில்லை. பதினாறு பருவங்கள் இப்படியே கடந்தன. இந்த நிலையில் வட நட்டுக்கு யாத்திரை சென்றிருந்த மதுரகவி என்னும் அந்தணர், தென் திசையில் ஒரு பேரொளியைக் சண்டார். அவ்வொளியை நோக்கி நடந்து வந்து புளியமரத்தின் பொந்தில் இருந்த சடகோபரைக் கண்டார். மதுரகவியார் கேட்ட வினாக்களுக்கு இவர் அளித்த பதிலைக் கேட்டு அவரை மகாஞானி என்று உணர்ந்தார். இவரே காலக்கிரமத்தில் திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி என்ற திவ்யப் பிரபந்தங்களைப் பாடி அருளினார். நம்மாழ்வார் என்றும் புகழ் பெற்றவரான இவரே, ஆழ்வார்களுக்குள் தலையாய ஆழ்வாராக விளங்குபவர். இவரே வேதம் தமிழ் செய்த வித்தகர், வகுள பூஷ்ண பாஸ்கரர், நம்மாழ்வார், உலகுய்யத் தோன்றிய குரு மூர்த்திகளுள் முதன்மையானவர். இயல்பாய் மெய்புலர்வு பெற்று எல்லாவற்றுக்கும் அடிப்படையான வித்தினை உணர்ந்தவர். உணர்ந்தவாறே உலகுக்கு உணர்த்தியவரும் கூட. இந்த ஆழ்வார்திருநகரிக்கே ஒரு கவிஞர் வந்திருக்கிறார். அவருக்குத் திருநகரி வந்ததும் ஓர் எக்களிப்பே உண்டாகிறது. அந்த எக்களிப்பில் பாடுகிறார்.

இதுவோ திரு நகரி?
ஈதோ பொருதை?
இதுவோ பரமபதத்து
எல்லை?-இதுவோ தான்
வேதம் பகர்ந்திட்ட
மெய்ப்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்?

என்று. இந்த நம்மாழ்வார் பிறந்து வளர்ந்த காரணமாகவே குருகூர், ஆழ்வார்திருநகரி என்ற பெயரோடு வழங்குகிறது.

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர்
ஆழ்வார் திருநகரி திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலிக்குக் கிழக்கே இருபது மைல் தொலைவில் இருக்கிறது. திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் வழியாகச் சென்று ஆழ்வார் திருநகரி ஸ்டேஷனில் இறங்கலாம் இல்லையென்றால் திருநெல்வேலி-திருச்செந்தூர் ரோடு வழியாக பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். ரோட்டை அடுத்தே கோயில் இருக்கிறது. ஊருக்கு நடுவில் ஆதிநாதர் ஆழ்வார் கோயில் இருக்கிறது. இந்த ஊரிலே தெற்குமாடத் தெருவிலே திருவேங்கடமுடையான் கோயிலும் மேல் புறம் திருவரங்கநாதன் கோயிலும் வடக்குமாடத் தெருவிலே பிள்ளை லோகாச் சாரியார், அழகர், தேசிகர், ஆண்டாள் கோயில்களும் இருக்கின்றன. எல்லோருமே நம்மாழ்வாரைக் காணத்தேடி வந்தவர்கள் போலும். பஸ்ஸில் போனாலும் ரயிலில் போனாலும் நாம் முதலில் சென்று சேர்வது ஆதிநாதர் கோயிலின் சந்நிதி வாயிலில்தான். ஒருநாள் பிரம்மா திருமாலை வைகுந்தத்தில் வனங்க அவர், 'உன்னைப் படைப்பதற்கு முன்னமேயே நாம் தண்பொருநை நதிக்கரையில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை எமது வாசஸ்தலமாகக் கொண்டிருக்கிறோம்.அதனையே ஆதிக்ஷேத்திரமாகக் கொண்டு வழிபடு' என்று உபதேசிக்கிறார். அதன் பிரகாரம் பிரம்மா வந்திருக்கிறார். அப்படி வரும்போது ஆற்றிலே ஒரு வலம்புரிச் சங்கு மிதந்து வந்து திருச்சங்கனித் துறையில் ஏறி, அங்கிருந்த ஆதிநாதரைச் சுற்றி விட்டுச் சென்றிருக்கிறது. இதனைக் கண்டு பிரம்மா இப்படித் திருமால் உகந்து இடம் பிடித்துக் கொண்டு தலத்திலே இருந்த தலத்திலே ஆதிநாதரை ஆராதித்து சத்யலோகம் திரும்பியிருக்கிறார். திருமாலே குருவாக வந்து உபதேசித்த தலமானதால் இத்தலம் குருகர் என்று! பெயர் பெற்றிருக்கிறது.

கோயில் வாயிலின் அழகை, ஸ்ரீ வைகுந்தத்தில் போலவே, ஒரு தகரக்கொட்டகை கெடுக்கிறது. அதைச் சேர்ந்தாற்போல் ஒரு பெரிய மண்டபம், அதில் தான் இராமாயணக் குறடு இருக்கிறது. அதைத் தாண்டி மேற்சென்றால் கோபுர வாயில், அதை அடுத்தே கொங்கணையான் குறடு, கிளிக்குறடு எல்லாம். இவற்றையெல்லாம் கட்டந்தே கருட மண்டபம் வந்து சேரவேனும், இன்னும் நடந்தால் அர்த்த மண்டபம், அங்கு வந்து தான் கருவறையில் உள்ள ஆதிநாதரைத் தரிசிக்க வேணும். இவரும் இவர் பக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி இருவரும் சுதையினாலான வடிவங்களே. இந்த ஆதிநாதருக்கு முன்புதான், உத்சவர் பொலிந்து நின்று பிரான் என்ற பெயரோடு பொலிகிறார். இவரை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

இலிங்கத் திட்ட புராணத்திரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வந்து சொல்வீர்காணும்
மற்றும் நம் தெய்மாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரிவீசும்
திருக் குருகூர் அதனுள்
பொலித்து நின்ற பிரான் கண்டீர்
ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.

என்பது பாசுரம். பொலிந்த நின்ற பிரானைப் பாடியவர் ஆதிப் பிரானை மறந்து விடுவாரா? அவரையுமே பாடி மகிழ்ந்திருக்கிறார்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் -
மற்றும் பாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு
தேவர் உலகோடு உயிர்படைத்தாய்,
குன்றம் போல மணிமாட
நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க
மற்று எத்தெய்வம் நாடுதிரே?

என்பது பாட்டு. பொலிந்து நின்ற பிரான் பக்கத்திலேயே உத்சவர்களாகப் பூதேவி. சீதேவி, நீலாதேவி, மூவரும் நிற்கிறார்கள். இவர்களைத் தவிர இக்கோயிலில் தனிக்கோயில் நாச்சியார்களாக ஆதிநாயகியும், குருகூர் நாயகியும் வேறு இருக்கிறார்கள்.

இத்தலத்தில் வராக நாராயணர் ஞானப் பிரானாக முனிவர்களுக்குக் காட்சி கொடுத்திருக்கிறார். அவரது சந்நிதி தெற்குப் பிராகாரத்தையொட்டிய மேடை மீது இருக்கிறது. இந்தக் குருகூரில், ஆதிநாதரைவிடட் பிரபலமானவர் நம்மாழ்வார்தான். ஆம்! ஊர்ப் பெயரே அவரால் மாறி விட்டதே. ஆழ்வாரது திருநகரியாகத்தானே இன்று விளங்குகிறது. இந்த ஆழ்வார் திருநகரிக் கோயிலிலே தம்மாழ்வார் இருந்த புளியமரமே தலவிருக்ஷம். நம்மாழ்வார் அமர்ந்திருந்த மரத்தின் பாகத்தில் தினமும் திருமஞ்சன வழிபாடு நடக்கிறது. ஒரே மரமாக இருந்த போதிலும் பொந்தாயிரம் புளியாயிரம் என்ற படி பல பொந்துகளோடுதான் விளங்குகிறது. இது ஏழு பிரிவாய்ப் பிரிந்த கோயில் விமானத்தில் எல்லாம் பரவி நிற்கிறது. இம்மரம் காய்த்த போதிலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்துபோய் விடுகிறது. இத்தலத்தைச் சுற்றியுள்ள புளிய மரங்களிலும் பழம் பழுப்பதில்லை . இந்த மரத்தடியிலே தனிக்கோயிலிலேதான் நம்மாழ்வார் சிலை வடிவில் இருக்கிறார். நம்மாழ்வாரது பூத உடலைப் பள்ளிப்படுத்திய இடத்திலேதான் கோயில் அமைத்து ஆழ்வார் உருவைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இத்திருப்புளி ஆழ்வாரைச் சுற்றிய பீடத்தில் மதில் சுவர்களில் நூற்றியெட்டு திருப்பதிப் பெருமான்களும், கீழ் வரிசையில் ஆழ்வாராதியர்களும் அதன் கீழ் வரிசையில் யானை உருவங்களும் அமைக்கப் பட்டிருக்கின்றன. உத்சவ மூர்த்தமான ஆழ்வார் சோபன மண்டபத்துக்கு எதிரே உள்ள பொன் குறட்டில் எழுந்தருளியிருக்கிறார்.

மற்றைய ஆழ்வார்கள் எல்லாம் பெருமாளைப் பாட நம்மாழ்வாரது சிஷ்யராய் அமர்ந்த மதுரகவியாழ்வார் மட்டும் சடகோபனையே பாடியிருக்கிறார். 'கண்ணிநுண்சிறுத் தாம் பினால்' என்று தொடங்கும் பதினொரு பாடல்களும் நம்மாழ்வார் புகழையே பேசுகின்றன.

நன்மையால் மிக்க
நான்மறையாளர்கள்
புன்மையாகக்
கருதுவர் ஆதலின்,

அன்னையாய் அத்தனாய்
என்னை ஆண்டிடும்
தின்மையான்
சடகோபன் என் நம்பியே

என்பது மதுரகவியாழ்வார் பாடல். நம்மாழ்வாரிடத்து ராமானுஜர் ஈடுபாடு எல்லாரும் அறிந்ததே. ராமானுஜர் குருகூருக்கு வரும் வழியில் திருப்புளிங்குடிப் பெருமானைத் தரிசித்து விட்டுத் திரும்பும்போது அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணை, 'இன்னும் குருகூர் எவ்வளவு தூரம் இருக்கும்' என்று கேட்க அவள் 'கூவதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்' என்று ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் போது சொல்லிய வண்ணம் *கூப்பிடு துாரம்' என்று கூறியிருக்கிறாள். சடகோபன் பாசுரத்தை அப்பெண் கூறியதைக் கேட்டு ராமானுஜர் அவளையே ஆழ்வாராக எண்ணித் தரையில் வீழ்ந்து வணங்கியிருக்கிறார் என்பது வரலாறு. கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கும் சடகோபரிடத்து ஈடுபாடு இருந்திருக்கிறது. சடகோபர் அந்தாதியே பாடியிருக்கிறாரே, இராமாவதாரம் பாடுமுன், நம்மாழ்வார் திருவடிகளை நினைத்து வணங்கிருக்கிறார்.

தருகை நீண்ட தயரதன் தாள் தரும்
இருகை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குரைகழல் காப்பதே என்பதுதானே

அவரது பாடலாயிருக்கிறது. விஷ்ணு கோயில்களில் உள்ள ஆழ்வார் சந்நிதிகளிலெல்லாம் நம்மாழ்வார் சிலை வடிவிலும், செப்பு வடித்திலும் காட்சி கொடுப்பதைக் கண்டிருக்கிறீர்கள்! அங்கெல்லாம் கூப்பிய கையராய் இருக்கும் இவர் இந்தக் குருகூர் தலத்தில் மட்டும் உபதேசிக்கும் ஞானமுத்திரையோடு விளங்குகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்கவும்.

குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியை விட்டுக் கிளம்புமுன் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள காந்தீசுவரம் சென்று அங்குள்ள ஏகாந்தலிங்கரையும் வணங்கியே திரும்பலாம். ஆழ்வார் திருநகரியில் ஒன்பது சிவன் கோயில்கள் இருந்தன என்றும். அவற்றை ஒரு சாத்தாதுவர் அழித்து ஆற்றுக்கு அணைகள் கட்டினார் என்றும், அது காரணமாக அவருக்கு வயிற்றில் நோவு உண்டாக, அதற்கு ஒரு பரிகாரமாகவே ஆற்றின் வடகரையில் காந்தீசுவரம் கட்டி ஏகாந்தலிங்கரைப் பிரதிஷ்டை செய்தார் என்பதும் வரலாறு. இந்தக் காந்தீசவரத்தில் கரூர் சித்தர் வாழ்ந்திருக்கிறார் அவரிடம் ஒரு நாய் இருந்திருக்கிறது. அது நாள்தோறும் குருகூர் வீதிகளில் விழும் எச்சிலையே உணவாக அருந்தியிருக்கிறது. ஒரு நாள் குருகூரிலிருந்து நதியைக் கடந்து வரும் போது வெள்ளத்தின் நீர்ச் சுழலில் அகப்பட்டு உயிர் இழந்திருக்கிறது. பின்னர் அதன் உயிர், ஒளி பெற்று விண்ணுலகு எய்திருக்கிறது. இதைக் கண்ட சித்தர்.

வாய்க்கும் குருகைத்
திருவீதி எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய்
அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் பதம் அளித்தால்
பழுதோ? பெருமாள் மகுடம்
சாய்க்கும்படி கவி சொல்லும்
ஞானத் தமிழ்க் கடலே!

என்று பாடி அருள் பெற்றிருக்கிறார். குருகூரை விட்டுக் கிளம்பிக் கிழக்கே இரண்டு மைல் நடந்து மதுரகவி பிறந்த திருக்கோளூர் சென்று அங்கு கிடந்த கோலத்தில் உள்ள வைத்தமாநிதியையும் வணங்கித் திரும்பலாம்.