உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பா முதல் பாட்டி வரை/007-024

விக்கிமூலம் இலிருந்து

கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதம்

ருத்துவத்துறையில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது, ஸ்கேன் (scan) ‘ஸ்கேன்’ இல்லையெனில், இன்றைய மருத்துவத் துறையே ஸ்தம்பித்துவிடும். எளியோர் முதல் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர் வரை, அனைவருக்கும் ஸ்கேன் என்ற சொல் பரிச்சயமாகிவிட்டது.

நோய், அதன் வீரியம் ஆகியவற்றை மருத்துவர் தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க, ஸ்கேன் கருவி உதவியாக உள்ளது. குறிப்பாக பிள்ளைப் பேற்றில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனரின் (Ultra sound scaner) பங்கு அளவிட முடியாதது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதனால் ‘பிள்ளைப் பெறும் பெண்களுக்கு மறுபிறவி’ என்பதெல்லாம் பழங்கதையாகி விட்டது. இக் கருவி மூலம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களை முன் கூட்டியயே அறிந்து, அவற்றுக்குத் தீர்வு சொல்வதால், பிரசவத்தில் உயிர் இழப்பு 99 சதவீதம் குறைந்துவிட்டது.

காதில் கேட்க முடியாத ஒலி அலைகளை (Ultra Sound) உடலில் செலுத்தி, அதைக்கொண்டு உள்உறுப்புகளின் நிலையைத் தெரிந்து கொள்வது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். 50 ஆண்டுகளாகப் பரிசோதனையில் இருந்த ஸ்கேன், கடந்த 20 அல்லது 25 ஆண்டுகளாக முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வலி கிடையாது : குடல் வியாதி, நுரையீரல் குறைகள், எலும்புக்குள்ளே உள்ள பிரச்சினைகளைத் தவிர, அனைத்து நோய்களையும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இக் கருவியைப் பயன்படுத்தும் போது நோயாளிக்குச் சிறிதளவும் இம்சையோ, வலியோ ஏற்படுவதில்லை. நோயாளியின் படுக்கைக்கே எடுத்துச் செல்லும் வசதி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் மட்டுமே உள்ளது. முன்பெல்லாம் தீராத வயிற்றுவலி என்று வந்தால் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, அதன் பின்னர் தான் பிரச்சினை என்ன என்று கண்டுபிடிக்க முடியும். ஸ்கேன் வந்த பின்னர், நோயை அறிந்து கொள்ள அறுவை சிகிச்சை தேவை இல்லை. ரத்த ஓட்டம், ரத்தக்குழாயில் உறைவு, கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளின் குறைகளைக் கண்டுபிடிக்க முடியும்.

வகைகள்: அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனைப் பொருத்தவரை 2டி அல்ட்ரா சவுண்ட். கலர் டாப்ளர்(Colour Doppler), 3டி எக்கோ என்பவை முக்கிய மூன்று வகைகள். இதில் 2டி ஸ்கேன், கறுப்பு - வெள்ளைப் படம் பார்ப்பது போல் தெரியும். கலர் டாப்ளர் ஸ்கேனில், உடலில் ஓடும் ரத்தக்குழாய் துல்லியமாகத் தெரியும். 3டி எக்கோ ஸ்கேனில், முப்பரிமாணமும் தெரியும். அதாவது உடலின் உறுப்பை முழுப் பரிமாணத்தில் பார்க்க முடியும். இது தவிர என்டாஸ்கோப் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளது. இதை உடலின் உள்ளே செலுத்தி, வயிற்றுக் கட்டி மற்றும் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்குபோது, வயிற்றில் இருக்கும் கட்டி எவ்வளவு தூரம் விரிந்திருக்கிறது. அதன் பருமன் என்ன என்பதைக் கண்டறிந்து மருத்துவருக்குத் தெரிவிக்க, இன்ட்ரா ஆப்ரேட்டிவ் அல்ட்ரா சவுண்ட் கருவி உள்ளது. குழந்தையின் தலைப் பகுதியை, ஸ்கேன் செய்ய (cranial) ஸ்கேன், பார்வைக் கோளாறுகளைக் கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களும் உள்ளன. கைகால்கள் மூட்டுகள் விலகி இருந்தால் ஸ்கேன் மூலம் கண்டு பிடித்து செய்ய முடியும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உள்காயம் ஏதும் உள்ளதா எனக் கண்டுபிடிக்கலாம்.

கர்ப்ப காலத்தில்: கர்ப்ப காலத்தை முதல் மூன்றுமாதம், மத்திய மூன்று மாதம், இறுதி மூன்று மாதம் எனப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறையும் ஸ்கேன் எடுப்பது நல்லது. ஸ்கேன் எடுப்பதால் கர்ப்பப் பையில் உள்ள குழந்தைக்குக் கதிர்வீச்சுப் பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து உள்ளது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எந்தப் பாதிப்பும் கிடையாது.

கருவின் இடத்தை உறுதி செய்ய : முதல் மூன்று மாதங்களுக்குள் ஸ்கேன் எடுப்பதால், கரு எங்கே உருவாகி உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். சில நேரங்களில், கர்ப்பக் குழாய்களில் கரு உருவாகி, வளர்ந்து வரும். இதைத் துவக்கத்திலேயே கண்டு பிடிக்காவிட்டால், கர்ப்பக்குழாய் வெடித்து, தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். கர்ப்பம் தரித்த சில வாரங்களிலே ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்து விட்டால் குழாய் வெடித்து ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கலாம். ஸ்கேன் பரிசோதனை முழு அளவில் வருவதற்கு முன்பு, கர்ப்பக்குழாய் வெடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கருத்தரித்த 5-வது வாரத்திலேயே, குழந்தையின் இதயத்துடிப்பையும் கண்டுபிடித்து விடலாம்.

முத்துப்பிள்ளை : மரபணுக்களின் குறைபாடுகளால் உருவாவதுதான் முத்துப்பிள்ளை. முத்துப்பிள்ளை உருவானால், கர்ப்பிணிப் பெண்ணைப் போல், எல்லா அறிகுறிகளும் இருக்கும். மாத விலக்கு நின்றுவிடும். வாந்தி இருக்கும். குழந்தை உருவாகி வளர்ந்து வருகிறது என்று பலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள். சில மாதங்கள், இன்னும் சொல்லப்போனால் 10 மாதங்களுக்குப் பின்னர், பிரசவத்தின்போது தான் அது, முத்துப்பிள்ளை என்று தெரியவரும். அப்போதுதான் அத் தாயின் மனது படும் வேதனையைச் சொல்ல மாளாது. சில நேரங்களில் முத்துப்பிள்ளை புற்றுநோயாக மாறி, தாயின் உயிருக்கே ஆபத்தாக முடித்துவிடும். ஸ்கேன் வந்த பின்னர், இரண்டு அல்லது மூன்று மாதத்திலேயே முத்துப்பிள்ளையாக இருக்க வேண்டுமேயொழிய முத்துப்பிள்ளையாக இருக்கக் கூடாது.

தலை இல்லாமல் பிறக்கும் குழந்தைகளையும் முதல் மூன்று மாதங்களில் கண்டுபிடித்து விடலாம். 10 வாரத்தில் கண்டுபிடித்து அகற்ற வேண்டியதை, அறியாமையால் 10 மாதம் சுமந்து, சிசேரியன் அருவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். விரைவில் ஸ்கேன் செய்தால் இதையெல்லாம் தவிர்க்கலாம். மரபணுக் கோளாறால் குழந்தையின் கழுத்தில் கட்டி இருக்கும். குழந்தை, வளர்ச்சி குறைந்து சிறிதாக இருக்கும். இதையெல்லாம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் முன்பே பார்த்துச் சிகிச்சை பெறலாம்.

குறைவுள்ள குழந்தை : மத்திய மூன்று மாத காலத்தில்தான் (4 முதல் 6 மாத காலம்) குழந்தைக்குக் கை, கால், ஆகியவை முழு வளர்ச்சி அடையும். எனவே இக் காலக் கட்டத்தில் குழந்தைகளின் குறைகளை, ஸ்கேன் மூலம் கருவிலேயே கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்க முடியும். சில குழந்தைகளுக்குச் சிறுநீரகம் இருக்காது. சில குழந்தைகளுக்கு வயிற்றின் மேல் தோல் இருக்காது. கை, கால்களில் குறை இருக்கும். குறையோடு வாழமுடியும் என்ற நிலையில் உள்ள குழந்தைகள், நிச்சயமாக வாழவே முடியாது என்ற நிலையில் உள்ள குழந்தைகள், என இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்கின்றோம். குறை இருந்தாலும் வாழமுடியும் என்ற குழந்தைகளுக்கு, அக் குறையைப் போக்க, கருவிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிச்சயமாக வாழ முடியாது என்ற நிலையில் உள்ள குழந்தைகளைக் கருவிலேயே அழித்துவிடலாம்.

குழந்தையின் தலை வீங்கி, பெரிதாக இருந்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும். இதை இறுதி மூன்று மாத காலத்தில் ஸ்கேன் எடுப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பப் பையில் குழந்தையைச் சுற்றி நீர் குறைந்து விட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து. இதை உடனடியாகத் தெரிந்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். கர்ப்பப் பையில் குழந்தை சரியான நிலையில் உள்ளதா? தலைகீழாக உள்ளதா? குறுக்குவாட்டில் உள்ளதா? என்று கண்டுபிடித்து, அதற்கேற்றாற்போல் உரிய நட வடிக்கைகளை எடுக்கலாம். குழந்தை குறுக்குவாட்டில் இருந்தால் பிரசவம் சிரமம். சிசேரியன் தேவையா என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடலாம்.

நஞ்சு பிரிதல் : தாயையும், குழந்தையையும் இணைக்கும் நஞ்சுக் கொடி, கர்ப்பப் பையின் வாய்ப் பகுதிக்குச் சென்றுவிட்டால் குழந்தையை வெளியே வரவிடாமல் அடைத்துக் கொள்ளும். இதனால் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு, தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். குழந்தைக்குக் கீழே நஞ்சுக்கொடி வந்துவிட்டால், உதிரப்போக்கு மட்டுமே இருக்கும். வலி இருக்காது. நஞ்சுக் கொடி தனியாகப் பிரிந்து விட்டாலும், தாயின் உயிருக்கு ஆபத்து. நஞ்சுக்கொடி சரியான இடத்தில், சரியான நிலையில் உள்ளதா என்பதை முன்கூட்டியே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து, சரியாக இல்லை என்றால் சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் தாயையும் குழந்தை யையும் காப்பாற்றி விடலாம். எனவே உதிரப்போக்கு ஏற்பட்டால், உடனே டாக்டரை அணுகி உரிய சிச்சை பெறவேண்டும். ரத்த அழுத்தம் அதிகமாக உள்ள பெண்களுக்கு நஞ்சுக்கொடி பிரிய அதிகவாய்ப்புள்ளது.

கருக் குழந்தைகளுக்கு மார்க் இருக்கு : அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சோதனையில் கருக் குழந்தையின் மூச்சு விடும் தன்மை. கையை மூடி விரித்தல், இதயத் துடிப்பு, குழந்தையைச் சுற்றியுள்ள நீரின் அளவு, குழந்தையின் அசைவு, ஆகியவை சரியாக இருந்தால், 10 புள்ளிகள் வழங்கப்படும். அக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. 2 புள்ளிகள் குறைந்தாலும் என்ன குறை என்று பார்த்து உடனே சிகிச்சை செய்யவேண்டும்.

முதல் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருந்தால், அடுத்த குழந்தைக்கும் அதுபோன்ற குறைபாடு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, ஸ்கேன் மூலம் அதைக் கண்டுபிடித்து, முன் கூட்டியே சிகிச்சை பெறுவது நல்லது.

அடிக்கடி கருச்சிதைவு : கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். கர்ப்பப் பையின் உள்வாய் திறந்திருந்தாலும், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். கருவைத் தாங்கும் சக்தி, கர்ப்பப் பைக்கு இருக்காது. இக் குறையை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து, கருத்தரித்த சில வாரங்களில் உள்வாயைத் தைத்து விடுவார்கள். பின்னர் கடைசி மாதத்தில் அத் தையலைப் பிரித்துவிடலாம்.

குவா குவா இல்லாதவர்களுக்கு : குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மிகவும் உதவும். பெண்களின் கர்ப்பப் பையில் கருமுட்டை எப்போது உருவாகிறது, முட்டை எப்போது வெடித்து வெளியேறுகிறது என்பதை எல்லாம் ஸ்கேன் மூலம் அறிந்து, அந்த நேரத்தில் இயற்கை முறையிலோ அல்லது செயற்கை முறையிலோ, கருத்தரிக்கச் செய்யலாம். சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு ஸ்கேன் உதவும்.

மாதவிலக்கு நின்ற பின்னர் : பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பின்னர், கர்ப்பப் பையைச் சோதிப்பது அவசியம். ஏனெனில் இறுதி மாதவிடாய்க்குப் பின்னர் கருவகங்கள் (ovaries) சுருங்கி இருக்க வேண்டும். அதுபோன்ற நேரங்களில் கருவகங்களில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. அதைத் துவக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டால், சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடலாம். ஆனால், நோய் முற்றிய பின்னரே பலர் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதைத் தவிர்க்க, மாதவிலக்கு முடிந்த பின்னர், ஆண்டுக்கு ஒரு முறை கருவகங்களை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்ப்பது அவசியம்.

ஆணா, பெண்ணா? : ஸ்கேன் வந்த புதிதில், பல இடங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவியை, ஆணா, பெண்ணா எனப் பார்க்கும் கருவி என்று சொல்வார்கள். கருத்தரித்த 3 மாதத்தில் இருந்து 4 மாத காலத்துக்குள் ஆணா,பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கு முன்பே கூட வேறு வழிகளில் கண்டு பிடிக்கலாம். குழந்தையைச் சுற்றியுள்ள நீரை எடுத்து கல்ச்சர் பண்ணி எக்ஸ் மரபணு ஒய் மரபணுக்களைக் கொண்டும் சொல்லலாம்.

ஆனால், தாய், மற்றும் குழந்தையின் குறை நிறைகளைக் கண்டுபிடிக்கவே, ஸ்கேனைப் பயன்படுத்த வேண்டும். அக் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில், என்ன குழந்தை என்று சொல்லுமாறு வற்புறுத்துவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கேட்காவிட்டாலும், அவர்களது மாமியார் வந்து கேட்பார். ஆனால் மனித நேய அடிப்படையிலும், அரசு சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டும், என்ன குழந்தை என்று சொல்லக்கூடாது. ஆண் குழந்தையை விரும்பும் பெண்ணிடம், பெண் குழந்தை என்று 3 மாதத்திலேயே சொன்னால், மனரீதியாக அப்பெண் பாதிப்படைவார். அது அக்குழந்தையைப் பாதிக்கும். சிலர் கருவை அழிக்க முற்படுவர். முறையற்ற சிகிச்சை முறைகளைக் கையாண்டு கருச்சிதைவு செய்ய முற்படும் போது, தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். எனவே எக்காரணத்தையும் கொண்டும். என்ன குழந்தை என்று முன்கூட்டியே சொல்லக்கூடாது. மேலும், குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது ஆண்கள் தான். ஏனெனில், குழந்தையின் பாலினத்தை ஆணின் குரோமோசோம் தான் தீர்மானிக்கிறது. இதை மாமியார்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

குடும்ப நலனை காக்க : பொதுவாகப் பெண்கள் தங்கள் உடல்நிலையில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. குழந்தைகளுக்காக, கணவனுக்காக தியாகம் செய்வதே தங்கள் கடமை என்று நினைக்கின்றனர். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். தாயின் உடல் நலம் நன்றாக இருந்தால்தான், அக் குடும்பத்தின் நலமும் நன்றாக இருக்கும். பெண்கள் வழக்கமாக நோய்களை முற்றவிட்டுத் தங்களை வருத்திக் கொண்டு தங்கள் உறவினரையும் துன்பத்துக்கு உள்ளாக்குவார்கள். இதைத் தவிர்க்க, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் நோயை முன்கூட்டியே கண்டுபிடித்து, உரிய நேரத்தில் சிகிச்சை பெறவேண்டும்.