உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பா முதல் பாட்டி வரை/006-024

விக்கிமூலம் இலிருந்து

குழந்தை வளர்ப்பு

குழந்தை தாயின் கருப்பையிலிருந்து, வெளியே, புதியதோர் இடத்துக்கு வருகின்றது. அது இதுவரை, இருளும், வெப்பமும் உள்ள இடத்தில் வாழ்ந்து வந்தது. அதனால் குழந்தை பிறந்ததும், அழ ஆரம்பிக்கிறது. அதை நன்றாகப் போர்த்தி இருட்டான அறையில் படுக்க வைக்க வேண்டும்.

குழந்தை பிறந்து, இரண்டு மூன்று மணிநேரம் சென்றதும், அதைக் குளிப்பாட்டுவார்கள். அதன்பின் அதை 24 மணிப்பொழுது, கால் பக்கத்தை விடத் தலைப்பக்கம் 3-4 அங்குலம் தாழ்ந்ததாகப் படுக்க வைப்பார்கள். இப்படிச் செய்தால் குழந்தை பிறக்கும்போது ஏதேனும் நீரோ, சளியோ குரல் வளையினுள் சேர்ந்திருந்தால் வெளியே வந்துவிடும்.

குழந்தையை நாள்தோறும் குளிப்பாட்ட வேண்டும். குளிர்ந்த காற்றுப் படாமல் காக்கவேண்டும். குழந்தை இருக்குமிடம் எப்போதும், நல்ல காற்று உலவுவதாக இருக்க வேண்டும். குழந்தையைக் கொசுக்கள் கடிக்கா வண்ணம் கவனித்துக்கட்கொள்ள வேண்டும். குழந்தை உறங்கும்போது, கொசுவலை போடுவது நல்லது.

குழந்தையின் உடம்பில் சிறிது நேரம் இளவெயில் படும்படி செய்தல் நல்லது. சூரியனுடைய புற ஊதாக் கதிர்கள், குழந்தையிடம் கணைநோய் வராமல் பாதுகாக்கும், வந்தாலும் குணப்படுத்தும்.

பிறந்த குழந்தை, பெரும் பகுதிப்பொழுது உறங்கும். உணவு உண்ணுவதற்காக மட்டுமே விழிக்கும். நாள் ஆக ஆக அதிகப்பொழுது விழித்திருக்கும். ஓராண்டு நிறையும் வரை, இரண்டு தடவை பகலில் உறங்கும். அதன் பின் ஒரு தடவையே உறங்கும். குழந்தையை உறங்கப் பண்ணத் தொட்டிலிலிட்டு ஆட்டுவது தேவையில்லை. குறிப்பிட்ட பொழுதில் உறங்கப் பழக்கிவிட்டால் போதும். பொதுவாகச் சிறு குழந்தைகள் பால் உண்ணும்போதே உறங்கிவிடும். அது நல்லதே.

குழந்தைக்கு உடை குறைவாகப் பயன்படுத்வதே நல்லது. குளிர் தாக்காமலிருக்கும்பொருட்டு மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெப்ப நாட்களில், உடையில்லாமல் இருப்பது நலம். குளிர் காலத்திலும், உரோமத்தாலான துணிகள் குழந்தைக்கு நல்லதில்லை. அத் துணி குழந்தையின் மெல்லிய தோலை உறுத்தும். குழந்தையின் துணிகளை வெளுக்கக் காரம் மிகுந்த சோப்புக்களைப் பயன்படுத்தலாகாது.

குழந்தை பிறந்த சில நாட்கள் வரை, பெரும் பகுதியான பொழுது உறங்கும். குளிப்பாட்டவும் பால் கொடுக்கவும் மட்டும் அதை எழுப்ப வேண்டும். நாள்தோறும் மூன்று தடவை தாய்ப்பால் கொடுக்கலாம். இந்த நாட்களில், மலப்போக்கு மருந்து தர வேண்டியதில்லை. இடையிடையே பருக நீர் கொடுத்தால் போதுமானது. இவ்வாறு குழந்தை, தாயின் வயிற்றுக்கு வெளியே சுவாசிக்கப் பழகிய பின்னர், பால் பருகப் பழகும். பசி எழும்போது குழந்தை வீரிட்டு அழும் உடனே எடுத்துத் தாய்ப்பால் கொடுத்தால், குழந்தை உண்ணத் தொடங்கும். அப்போது அது பசித்துன்பம் நீங்கப்பெறும் உணர்ச்சியை அறிந்துகொள்கிறது. இவ்வாறு சில நாட்கள் நடந்தபின் 3-4 மணிக்கு ஒரு தடவை பாலூட்ட வேண்டும்.

குழந்தைக்குத் தாய்ப் பாலைப் போல் நல்ல உணவு கிடையாது. அதுவே இயற்கை விதிக்கும் உணவு. ஏனைய உணவுகளை விட மிகுந்த தூய்மை உடையது. தாய்ப்பால் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாதிருப்பது அரிது. தாய்ப்பால் போல எதுவும் குழந்தைக்கு ஊட்டமளிப்பதும், எளிதில் சீரணமாவதும் இல்லை. தாய்ப்பாலில் உள்ள வைட்டமின்கள், பிற குழந்தை உணவுகளில் இல்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்குத் தாயிடமிருந்து, அந்தப்பாலுடன், பாதுகாப்புப் பொருள்களும் வந்து சேர்கின்றன. கொள்ளைநோய்க் காலங்களில், தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் இறப்பதை விடப் பதின்மடங்கு, தாய்ப்பால் குடியாது வளரும் குழந்தைகள் இறக்கின்றன. தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிப்பதால், குழந்தையின் பற்கள் வளர்ச்சி நன்கு நடைபெற ஏதுவாகின்றது. அது மூக்கடிச் சதை, தொண்டைச் சதை நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகின்றது. குழந்தைக்குப் பால் கொடுப்பதால், தாய்க்கும் நன்மை உண்டாகிறது. தாய்ப்பால் தரும் தாயின் வயிற்றுறுப்புக்கள் விரைவில் பழைய நிலை அடைகின்றன. அவளுடைய உருவமும் சீர்பெறும்.

ஆனால் தாய்ப்பால் தரும் தாய், நல்ல சத்தான உணவு உண்ணவேண்டும். ஒத்துக்கொள்ளாத உணவுகளை நீக்கி விடவேண்டும். நீர் நிறையக் குடிக்க வேண்டும். பால் கொடுக்கும் நேரத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன், ஒரு குவளை நீர் பருகுதல் நல்லது. தாய் தனக்கு மலச்சிக்கல் இல்லாமலும் கவனித்துக்கொள்ள வேண்டும். பேதி மருந்துகள் பாலைக் கெடுத்துவிடும். மலச்சிக்கல் போக்க, நிலவாகை முதலியன உண்டால், குழந்தைக்கு வயிற்று நோவும், வயிற்று போக்கும் உண்டாகலாம். ஏதேனும் மலமிளக்கி சாப்பிடவேண்டி நேர்ந்தால், பாரபின் (Paraffing) எண்ணெய் மட்டுமே சாப்பிடலாம்.

குழந்தைக்குப் பால் கொடுக்கும் வேளைக்குமுன், தாய் ஐந்து நிமிட நேரம் ஓய்வாக இருக்க வேண்டும். தாய் பகலில் ஒரு மணி நேரம் ஓய்வு கொள்ளுதல் நல்லது. நள்தோறும் சிறிது தூரம் உலவுவதும் நல்லது.

குழந்தை பிறந்த முதல் நாள் 6 மணி நேரத்துக்கு ஒரு தடவை, 5 நிமிஷ நேரம் தாயிடம் பால் குடிக்க வைக்க வேண்டும். இரண்டாம் நாள் முதல் 4 மணி நேரத்துக்கு ஒரு தடவை குடிக்க வைக்க வேண்டும். தாயிடம் முதலில் சீம்பால் ஒரு சிறிதே உண்டாகின்றது. ஆனால், அது குழந்தையின் பசியைத் தணிக்கக் கூடிய அளவினதாக இல்லை. அதனால் குழந்தை பலமாக உறிஞ்சுகிறது. இப்படிச் செய்து, தாயிடம் பால் உண்டாகும்படி செய்கிறது. பால் தராத வேளைகளில், குழந்தைக்குத் தாகமிருப்பதாகத் தெரிந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற்றி இளஞ்சூட்டில் தரலாம். வேறு எதுவும் தரலாகாது.

இரண்டாவது நாளிலிருந்து 3 அல்லது 4 மணிக்கு ஒரு தடவை தாயிடம் பால் கொடுக்கும்போது, குழந்தையை 10 நிமிஷ நேரம் குடிக்க விட வேண்டும். சில குழந்தைகள் 5-6 நிமிஷத்தில் தனக்கு வேண்டிய அளவு குடித்துவிடும். சில குழந்தைகளுக்கு 15-20 நிமிஷ நேரம் செல்லும். எதுவாயினும் 20 நிமிஷ நேரத்துக்கு அதிகமாகக் குடிக்கவிடலாகாது. ஒவ்வொரு தடவையும், ஒரு தனத்தில் மட்டும் குடிக்கவிட வேண்டுமா, இரண்டு தனங்களிலும் குடிக்க விடலாமா, என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எப்படிக் கொடுத்தாலும் குடிக்கத் தொடங்கிய தனத்தில் கொஞ்சமும் பால் எஞ்சா வண்ணம் குடிக்க விடுதலே நல்லது. இவ்வாறு செய்யாமல் குழந்தை ஒவ்வொரு தனத்திலும் பால் எஞ்சிவிடும்படி இரண்டு தனங்களையும் ஒரே தடவையில் குடிக்குமாயின், தாயின் தனங்களில் பால் சுரப்பது குன்றிவிடும்.

தாயிடம், தொடக்கத்தில் சிறிதளவு பாலே உண்டாகுமாயின், குழந்தையை இரண்டு தனங்களிலும் குடிக்கவிட வேண்டியதே. தாயிடம் தொடக்கத்தில் ஒவ்வொரு தனத்தில் பால் அதிகமாக உண்டாகுமாயின், அப்பாலில் சிறிதளவு, கையால் பீச்சி விட்டுப் பின்னர் ஒரு தனத்திலுள்ள பால் முழுவதையும் குடிக்குமாறு செய்ய வேண்டும். எவ்வளவு பால் பீச்சவேண்டும் என்பது இரண்டொரு நாள் பழக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பால் தரும்போது, தாயும் குழந்தையும் வசதியான முறையில் இருந்து கொள்ள வேண்டும். தாய்குழந்தை பெற்ற பின்னர் படுத்திருந்தால், அவள் ஒருபக்கமாகச் சாய்ந்துகொண்டு, குழந்தைக்குப் பால் தரவேண்டும். அப்போது, தாய் குழந்தையை ஒரு தலையணையுடன் சேர்த்துத் தன்னுடன் அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், குழந்தை மூச்சுவிடக், கஷ்டப்படுமாறு அதிக நெருக்கமாக அணைத்துவிடலாகாது. நெருக்கமாக அணைத்துவிட்டால், குழந்தை பால் குடிப்பதை விட்டுவிட்டு வாயினால் மூச்சிழுக்கத் தொடங்கிக் காற்றை வாயினால் விழுங்கும், பழக்கமுடையதாகிவிடும். அது வாந்தி உண்டாக்க ஏதுவாகும்.

எல்லோர்க்கும் வயிற்றில் சீரணம் நடைபெறும் போது வாயுக்கள் உண்டாகும். அந்த வாயுக்கள், நாமறியாமலே வாய்வழியாக வெளியேறி விடும். குழந்தையிடம் இவ்விதம் நடைபெறாது. குழந்தையின் வயிற்றிலுள்ள வாயுவுடன், சீரணமாகி கொண்டிருக்கும் பாலும் வாயினால் வெளியாகும். அதனால் குழந்தை எடை பெருகாது தடைபடும். குழந்தை இடைவிடாமல் பசித்து அழும். வெளிவந்த பால் வழிந்து, குழந்தையின் உடை அசுத்தமாக ஆகிடும். இவ்வாறு நேராமல் இருப்பதற்காகத் தாய் குழந்தைக்குப் பால் தரும் போது, குழந்தை பாதியளவு பால் குடித்ததும், குழந்தையைத் தூக்கித் தோளில் சார்த்தி வைத்துக் கொண்டு வாயு வெளியேறும் ஒலி கேட்கும் வரை மெதுவாக அதன் முதுகில் தட்டவேண்டும்.

குழந்தைக்குப் பால் தரும்முன் தாய் தன்னுடைய கைகளைக் கழுவவேண்டும். கொதித்து ஆறிய நீரில் தோய்த்த பஞ்சு கொண்டு, தனக்காம்புகளைத் துடைத்துக் கொள்ளவேண்டும். பால் கொடுத்த பின்பும் இவ்வாறு துடைத்துப் பின், காம்பு உலர்ந்ததும் அதன் மீது வெண் வாசிலின் தடவ வேண்டும்.

குழந்தைக்குப் பால் தரும்போது குழந்தையை அதிக விரைவாகக் குடிக்க இடந்தரலாகாது. குடிக்கும் போது உறங்கிவிடவும் இடந்தரலாகாது.

குழந்தை போதுமான ஊட்டம் பெற்று வருகிறதா என்று அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக வாரந்தோறும் குழந்தையை நிறுக்க வேண்டும். முதல் வாரத்தில் எடை குறையும் என்று கண்டோம். இரண்டாம் வாரத்தில்ருந்து ஒரு வாரத்துக்கு 4 அவுன்ஸ் வீதம் ஒழுங்காக எடை கூடிக்கொண்டு வரவேண்டும். எடை ஒழுங்காகக் கூடிவராதிருந்தால், குழந்தையின் உடல் நலமாயில்லை என்று தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தையின் எடை ஆறுமாதத்தில், பிறந்த பொழுது இருந்த எடைபோல் இரண்டு மடங்காகவும், ஓர் ஆண்டில் மூன்று மடங்காகவும் ஆகுமானால், குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகக் கருதலாம்.

தாயிடம் பால் சுரப்பு மெதுவாக நடைபெறுமாயின், நாள்தோறும் இரண்டு மூன்று தடவை தனங்களைக் குளிர்ந்த நீராலும், சுடுநீராலும், மாறி மாறிக் கழுவவும், மெதுவாகப் பிடித்து விடவும் (Massage) வேண்டும். தனங்களில் பால் அதிகமாகச் சுரக்குமாயின், ஒரு பகுதியைப் பீச்சி எடுத்துவிட வேண்டும், அல்லது நீர் குடிப்பதைத் குறைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை நலமாகவும், பலமாகவுமிருந்தால், 4 மணிக்கு ஒரு தடவை வீதம் பால் கொடுத்தலே நல்லது. அப்படிச் செய்தால், நல்ல பசி உண்டாகும். நீண்ட நேரம் உறங்கும். தனங்களில் நன்றாக உறிஞ்சிக் குடிக்கும்.

குழந்தை பலமில்லாததாக இருப்பின், மூன்று மணிக்கு ஒரு தடவை விதம் பால் கொடுப்பதே நல்லது.அப்போதுதான் அது நலம்பெற ஏதுவாகும். நான்காவது தினங்களில் 4 மணிக்கு ஒரு தடவை வீதம் மாற்றவேண்டும். 4 மணிக்கு ஒரு தடவை வீதம் கொடுப்பதாயின் காலை 6 மணி, 10 மணி, 2 மணி, மாலை 6 மணி, இரவு 10 மணி ஆகிய 5 தடவைகளில் கொடுக்க வேண்டும். மூன்று மணிக்கு ஒரு தடவையோ, நான்கு மணிக்கு ஒரு தடவையோ, எதுவாயினும், பால் கொடுக்கத் தொடங்குவது காலை 6 மணி, முடிப்பது இரவு 10 மணி.

எத்தனை மணிக்கு ஒரு தடவை கொடுக்க முடிவு செய்யப்படுகிறதோ, அதன்படியே நடக்க வேண்டும். சிறிதும் ஒழுங்கு தவறலாகாது. அப்படியானால்தான் பாலும் தனத்தில் தயாராகச் சுரந்து நிற்கும் : குழந்தையும் பாலை சீரணிக்கத் தக்க நிலையில் இருக்கும்.

இவ்வாறு கொடுத்து வந்தால் இரண்டு மூன்று வாரங்களானதும், குழந்தை தானாகக், குறிப்பிட்ட மணி நேரத்தில் விழித்துப் பால் கேட்கும். விழிக்காமல் உறங்கினால், விழிக்கச்செய்து பால் தரவேண்டும். உறங்குகிறது என சும்மா இருந்துவிடக் கூடாது. அழுகிறது என்று பால் தரவும் கூடாது. இரண்டும் குழந்தைக்கு நல்லதல்ல.

இரவில் 10 மணிக்குப் பின் பால் தரலாகாது. நீண்ட நேரம் குழந்தை உறங்குவது, குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது. முதலில் சில நாட்களில் இரவு 2 மணிக்குக் குழந்தை விழித்து அழக்கூடும். அப்போது துணியை மாற்ற வேண்டியிருந்தால், மாற்றிவிட்டுக் கொதித்து ஆறிய இளஞ்சுடாகவுள்ள நீரைத் தர வேண்டும். நீரில் சர்க்கரை இடலாகாது. நீரைத்தந்து படுக்க வைத்துவிட வேண்டும். இவ்வாறு சில நாட்கள் செய்துவந்தால், பின்னர் இரவு 10 மணிக்குப் பால் குடித்துப் படுத்து உறங்கும் குழந்தை, காலை 6 மணிக்கே விழிக்கும். இரவில் 2 மணிக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டால், பிறகு ஒவ்வொரு இரவிலும் விழித்துக்கொள்ளும். அது பின்னர் இரவில் நன்றாக உறங்காத வழக்கம் உடையதாக ஆகிவிடும்.

சில பெண்களின் தனங்களில், போதுமான அளவு பால் உண்டாவதில்லை. அத்தகைய வேளைகளில் எவ்வளவு பால் சுரப்பது, எவ்வளவு பால் தேவை என்று கணித்து, தாய்ப்பால் கொடுத்தவுடன், பசுப்பால் கொடுக்க வேண்டும். இரண்டு பாலும் ஒரே வேளையில் கொடுப்பதால் எவ்விதத் தீங்கும் உண்டாகாது.

குழந்தைக்குத் தாய்ப்பால் 9 திங்கள் கொடுத்த பின்னரே, தாய்ப்பால் குடிப்பதை மறக்கச் செய்ய வேண்டும். அதுவும் திடீரென்று நடைபெறலாகாது. நாலைந்து வாரங்கள் தாய்ப்பால் தருவதைச் சிறிது சிறிதாகக் குறைத்து வரவேண்டும். அப்பொழுது குழந்தையின் இரைப்பை வேறு உணவைச் சீரணிக்கத் தக்க பலம் பெற்றுவிடும். அப்பொழுதுதான் குழந்தைக்கு சீரணக் கோளாறுகள் உண்டாகா. தாய்க்கும் பால் சிறிது சிறிதாகக் குறைந்து வந்து, பிறகு சுரப்பது நின்றால் தான் துன்பமில்லமலிருக்கும். சிறிதாகக் குறைந்து வந்து பால் தருவதை நிறுத்திய பின்னரும் தாயிடம் பால் மிகுதியாகச் சுரக்குமாயின், தாய் நீர் குடிப்பதைக் குறைக்கவும், காலையில் சிறிதளவு உப்புக்கள் உண்ணவும், தனங்களைத் துணியால் இறுக்கிக் கட்டவும் வேண்டும். சிலர்க்குத் தனங்களை அழுத்திப் பாலை எடுக்கவோ அல்லது தனிப்பம்பு (Breast Pump) கொண்டு பாலை எடுக்கவோ வேண்டி ஏற்படலாம்.

தாய்க்கு க்ஷயநோய் போன்ற கொடிய நோய் கண்டால் அல்லது அவள் மீண்டும் கற்ப்ப முற்றுவிட்டால், அப்போது பால் கொடுப்பதை விரைவில், அதாவது இரண்டு வாரத்தில் குறைத்து வந்து, அடியோடு நிறுத்தி விடவேண்டும். அப்படிச் செய்வதுதான் தாய்க்கு நல்லது.

பால் கொடுப்பதை நிறுத்துவதற்காகப் (Weaning) பகல் 2 மணிக்கு இரண்டு தேக்கரண்டி பசும்பால் தந்து விட்டுப் பின்னரே தாய்ப்பால் தரவேண்டும். பசும்பாலை அப்படியே தரலாகாது. 10.அவுன்சு பசுப்பாலுடன் 1அவுன்சு பாலேடு (Cream) 1அவுன்சு சர்க்கரை சேர்த்து 20 அவுன்சு ஆக வருமளவு நீர் சேர்க்கவேண்டும். நீர் சேர்க்குமுன் 1 அவுன்சு சுண்ணாம்புத் தெளிநீரும் சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. இந்த விதத்தில் தயார் செய்த பாலையே தரவேண்டும். சிறிது சிறிதாக இந்தப் பாலின் அளவைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

முதலில் பகல் 2 மணிகுப் பசுப்பால் கொடுக்க வேண்டும். பிறகு இரவு 10 மணி, காலை 10 மணி, மாலை 6 மணி, காலை 6 மணி என்று, இந்த வரிசையில் படிப்படியாகப் பசுப்பால் கொடுத்தும் வரவேண்டும். நாலைந்து வாரங்களில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திப் பசும்பாலையே தரவேண்டும். அப்போது முன்கூறியபடி தயாரித்த பசும்பால், ஒவ்வொரு தடவையிலும் 8 அவுன்சு கொடுக்கலாம். இந்தப் பாலைப் புட்டியில் விட்டுக் கொடுக்காமல் கரண்டியில் எடுத்துக் கொடுப்பதே நல்லது. சிறு குவளையிலிருந்து குடிக்குமாறு குழந்தையைப் பழக்க வேண்டும்.

தாயிடம் பால் குடிக்க வைக்க முடியாத வேளையில், குழந்தைக்குப் புட்டிப் பால் தரலாம். அப் புட்டியில் தருவதற்கு, மேலே கூறியவாறு தயார் செய்த பாலே ஏற்றது.

புட்டியில் கொடுத்தால், குழந்தை பால் குடித்தவுடன், புட்டியையும், அதிலுள்ள காம்பையும் (Teat) முதலில் குளிர்ந்த நீரிலும், பிறகு மிகுந்த சூடுள்ள நீரிலும் கழுவ வேண்டும். காம்பின் உட்புறத்தை வெளியாக்கி, கறி உப்பால் தேய்த்துக் கழுவ வேண்டும். நாடோறும் ஒரு தடவை புட்டியையும் காம்பையும் வெந்நீரில் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். எப்போதும் அவற்றைக் கழுவி எடுத்தபின் மறுபடியும் பயன்படுத்தும் வேளைவரை குளிர்ந்த நீரிலிட்டு வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்ட அளவு பால் சரியாக அளந்தே தரவேண்டும். புட்டியில் குடியாமல் எஞ்சிவிட்டால், அதை மறுபடியும் பயன்படுத்தலாகாது. பால் கொடுக்க வேண்டிய பொழுதுகள் தாய்ப்பாலுக்குக் கூறியனவே ஆகும். குழந்தையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டே பால் கொடுக்க வேண்டும். குழந்தை கட்டிலிலுள்ளவாறே, அதற்குப் புட்டிப்பால் தரலாகாது.

புட்டிப்பால் தரவேண்டிய நேரங்களும், பாலின் அளவுகளும் கீழே தரப்பட்டுள்ளன.


வயது எத்தனை தடவை தடவைக்குத் தரும் பாலின் அளவு நாள் ஒன்றுக்கு மொத்தம்
3 நாள் 6 1 அவுன்ஸ் 6 அவுன்ஸ்
4 நாள் 6 1½ அவுன்ஸ் 9 அவுன்ஸ்
5 நாள் 6 2 அவுன்ஸ் 12 அவுன்ஸ்
10 நாள் 6 2½ அவுன்ஸ் 15 அவுன்ஸ்
3 வாரம் 6 3 அவுன்ஸ் 18 அவுன்ஸ்
2 மாதம் 6 3½ அவுன்ஸ் 21 அவுன்ஸ்
3 மாதம் 6 4 அவுன்ஸ் 24 அவுன்ஸ்
4 மாதம் 6 4½ அவுன்ஸ் 27 அவுன்ஸ்
5 மாதம் 5 6 அவுன்ஸ் 30 அவுன்ஸ்
6 மாதம் 5 6½ அவுன்ஸ் 32½ அவுன்ஸ்
7 மாதம் 5 7 அவுன்ஸ் 35 அவுன்ஸ்
8 மாதம் 5 7 அவுன்ஸ் 35 அவுன்ஸ்
9 மாதம் 4 8 அவுன்ஸ் 32 அவுன்ஸ்

புட்டிப்பால் தரும் குழந்தைகட்கு எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி ஆகியவற்றில் ஒன்றின் சாற்றை வடிகட்டிச் சிறிது சர்க்கரையுடனும் கொதிக்க வைத்து, இளஞ்சூடாகவுள்ள நீருடனும் கலந்து, நாள்தோறும் ஒரு தடவை, உணவு கொடுக்கும் வேளைகளுக்கு இடையில், அதாவது மாலை 4 மணிக்குத் தருதல் நல்லது. பழச்சாற்றிலுள்ள வைட்டமின் தேவை. இரண்டு திங்கள் குழந்தைக்கு ½ தேக்கரண்டிச் சாறு, ஆறு திங்கள் குழந்தைக்கு 3 தேக்கரண்டிச் சாறு, ஓராண்டுக் குழந்தைக்கு 6 தேக்கரண்டிச் சாறு வீதம் தர வேண்டும். இவற்றிலுள்ள வைட்டமின் சி குழந்தைக்குப் பல் சரியான விதத்தில் உண்டாவதற்கும் உதவுகிறது.

குழந்தைக்குப் பிறந்தது முதல் மீன் எண்ணெய் தருதல் நல்லது. இதிலுள்ள ‘ஏ’ வைட்டமின் பாதுகாப்பளிக்கும். டீ வைட்டமின் கணைநோய் வராமல் தடுக்கும். குழந்தையின் உடம்பில், இளம் வெயில் சிறிது நேரம் படும்படி செய்தாலும், குழந்தைக்கு டீ வைட்டமின் கிடைக்கும்.

புட்டிப்பால் தரும் குழந்தைகட்குப் பாலை மெதுவாக 3-5 நிமிஷம் கொதிக்க வைக்க வேண்டும். நோய்க் கிருமிகள் பாலில் மிக விரைவில் பரவுவதால், பாலை எப்பொழுதும் குளிர்ந்ததாகவே வைத்திருக்க வேண்டும். பால் உள்ள பாத்திரத்தைப் பனிக்கட்டிப் பாத்திரத்தில் வைத்திருப்பது நல்லது. ஆறு திங்களுக்குப் பின் குழந்தைக்கு உணவு கீழ்க்கண்டவாறு தரவேண்டும்.

குழந்தைக்குச் சிறிது சிறிதாகப் புதிய உண்டிகள் தந்து பழக்குவது நல்லது. உணவு தருவதில் எந்த மாற்றத்தையும் திடீரென்று செய்தலாகாது. ஒரு மாதம் வரை குழந்தையின் இரைப்பை, பாலை மட்டுமே சொறிக்கக் கூடியது. அதுவரை உமிழ்நீர் சுரப்பதில்லை. அதனால் சோறு போன்ற ஸ்டார்ச்சைக் குழந்தை செரிக்க முடியாது. ஸ்டார்ச்சு செரிப்பதற்கு உமிழ்நீர் இன்றியமையாத தேவையாகும்.

ஆறு மாதமாகும் போது, குழந்தைக்குப் பல் முளைக்கத் தொடங்கும். குழந்தை அதிகமாக வேலை செய்யும். அதனால் அதன் செரிப்பு ஆற்றல் பெருகும்.

பன்னிரண்டு மாதமாகும் போது, அவ் வயதுக்கு ஏற்ற கட்டியான உணவுகளை உண்ணத்தர வேண்டும். ஒரு நாளைக்கு 3-4 தடவைகளே தரலாம். நாள்தோறும் குழந்தை, ஒரு பைன்டுப் பசும்பால் பருகவேண்டும். உணவு வேளைகளுக்கு இடையே நீர் பருகவேண்டுமேயன்றி வேறு எதுவும் உண்ணலாகாது.

புதிதாக எந்த உணவைக் கொடுத்கத் தொடங்கினாலும், அதைச் சிறிய அளவிலேயே தரவேண்டும். குழந்தை அதை விரும்பாவிட்டாலும், அல்லது அது குழந்தையின் உடலுக்கு ஒத்து வராவிட்டாலும் அதைத் தரலாகாது.

நன்றாக மென்று விழுங்கக்கூடிய உணவுகளைத் தருவதே நல்லது. மிருதுவான உணவுகள் தருவதைக் குறைக்க வேண்டும். மென்று விழுங்குவது, சீரணத்துக்கும், நல்ல பல் உண்டாவதற்கும் நல்லது. இரண்டு வயதாகும் வரை, இறைச்சி தரலாகாது. அதற்கு முன் இறைச்சியை சீரணிப்பது கடினம். இது போல், முற்றிலும் விலக்க வேண்டிய உணவுகள் தேநீர், காப்பி, எண்ணெய் அல்லது நெய்யில் வெந்தவை, தித்திப்புப் பலகாரங்கள், மசாலாப் பொருள்கள் என்பன. தித்திப்புக் பண்டங்கள் சீரணத்துக்கும், பல் வளர்ச்சிக்கும் ஊறு செய்வன.

குழந்தை உணவு உண்ணும்போது, போதும் என்று கூறியதும் நிறுத்தி விட வேண்டும், உண்ணுமாறு வற்புறுத்தலாகாது. வற்புறுத்தினால் சீரணம் கெடும், நோய் வரும், குழந்தையின் உயரமும் எடையும் ஒழுங்காகக் கூடிவருமாயின், குழந்தையுண்ணும் உணவின் அளவைப் பற்றித் தாய் கவலை கொள்ளலாகாது.

கழிவுமுறைப் பயிற்சி : குழந்தைக்குக் குறிப்பிட்ட வேளையில் ஒழுங்கான உணவு கொடுப்பது எத்துணை அவசியமோ, அத்துணை குழந்தைக்கு மலமும், மூத்திரமும் ஒழுங்காகக் கழிக்குமாறு பயிற்று வித்தலும் அவசியமாகும்.

குழந்தை பிறந்து சில நாட்கள் ஆயினும், அரைத் துணியைக் குறித்த வேளைகளில் அவிழ்த்துவிட்டு, அதைக் கால்களுக்கிடையில் பிடித்தால் அது மலங்கழிக்கும் பழக்கத்தைப் பெற்றுவிடும். அவ்விதம் செய்துவந்தால், சில மாத காலத்தில் துணியில் மலம் கழியாதிருந்து விடும்.

குழந்தை துணியில் சிறுநீர் பெய்துவிடாமல் செய்வது கடினமான செயல். பொதுவாகக் குழந்தை விழிக்கும் வேளைகளிலெல்லாம் சிறுநீர் பெய்யும். அதனால், குழந்தை விழிப்பதற்காக நெளியும்போதே, அதை எடுத்து வெளியே பிடித்துவிட்டால் துணி நனையாது.

குழந்தையை எப்போதும் தனியாகவே உறங்கவைக்க வேண்டும். தாயின் பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்ளலாகாது. குழந்தை காற்றோட்டமுள்ள இடத்தில் உறங்கவேண்டும். ஆனால், காற்று அதன் மீது நேராக வந்து படக்கூடாது. குழந்தை உறங்குமிடம் இருட்டாயிருத்தல் நல்லது. குழந்தையின் படுக்கையை நாள்தோறும் நன்றாகக் காற்றில் உலர்த்த வேண்டும். சிறுநீர் பெய்த துணிகளைத் துவைத்துத் தூய்மை செய்யாமல், உலர்த்தி மட்டும் பயன்படுத்திவிடலாகாது. குழந்தைக்காகப் பயன்படுத்தும் எந்தத் துணியும், நன்றாக உலர்ந்ததாக இருக்க வேண்டும். சிறிது கூட ஈரம் இருத்தலாகாது. குழந்தையைப் போர்த்த வேண்டியிருந்தால், குழந்தை புரளத் தக்க வண்ணம், சிறிது தளர்த்தியாகவே போர்த்த வேண்டும் ; இறுக்கமாகப் போர்த்திவிடக் கூடாது.

சூரிய ஒளி குழந்தைக்கு மிகவும் நல்லது. குழந்தைக்கு ஒரு மாதமானதும் ஒளி குழந்தையின் கண்களில் படாமல், உடம்பின்மேல் படுமாறு அதைக் கிடத்தலாம். முதல் நாள் முதுகில் ஒரு நிமிஷப் பொழுதும், மார்பில் ஒரு நிமிஷப் பொழுதும், வெயில் படுமாறு செய்தால் போதுமானது. நாள்தோறும் சிறிதுநேரம் கூட்டி வரலாம். குழந்தை மழைகாலத்தில் பிறந்தால், சூரிய ஒளி கிடைக்கும் நாளில் அது படுமாறு செய்தல் வேண்டும். குழந்தை இவ்வாறு சூரிய ஒளியில் குளித்து வந்தால், எளிதில் சளிப்பும் வராது, தொற்று நோய்களும் வாரா.

குழந்தை அழாமலிருக்கும் பொருட்டுத் தாய்மார்கள் அதன் வாயில் சூப்பான் கொடுக்கிறார்கள். குழந்தை தானாகத் தன் பெருவிரலை வைத்துச் சூப்புவதுண்டு. ஆனால், சூப்பானைக் கொடுப்பதும் குழந்தை விரலைச் சூப்புவதும் தவறு. குழந்தை அதன் இன்பத்தில் ஆழ்ந்து விட்டால், வெளியே கவனித்து அறிவு பெறும் வளர்ச்சி தடைப்பட்டுவிடும். அதனால் சூப்பான் கொடுத்தலாகாது. விரலைச் சூப்பவும் விடலாகாது. விரலைச் சூப்புவதை நிறுத்த வேண்டுமாயின், அதை தொடக்கத்திலேயே தடுத்துவிட வேண்டும். பொதுவாக முதல் மூன்று மாத காலத்தில், குழந்தை வாயில் விரலை விடாது. அந்தக் காலத்தில் அதன் உடையோ அல்லது போர்த்தியுள்ள துணியோ வாயில் அகப்பட்டால், சூப்பத் தொடங்கிவிடும். இவ்வாறு இவ் வழக்கம் உண்டாகாதபடி அதன் துணி எதுவும் வாயில் அகப்படாதபடி, செய்யவேண்டும். குழந்தை விரலை வாயிலிடும்போது முதலிருந்தே தடுக்கவேண்டும். அதற்காகக் குழந்தை விரலை வாயில் வைத்ததும், விரலின் மீது சுண்டினால், அதை எடுத்துவிடும். இவ்வாறு குழந்தை விரலை வாயில் வைக்கும் பொழுதெல்லாம் செய்து வந்தால், அப்பழக்கம் உண்டாகாது.

தாய் குழந்தையின் பக்கத்தில் இருந்துகொண்டு சுண்ட முடியாதிருப்பின் குழந்தை வாயிலிடும் விரலில் ஏதேனும் தூய துணியைச் சுற்றி வைக்கவேண்டும். அப்படிச் செய்தாலும், தாய் பக்கத்திலிருக்கக்கூடிய வேளையில்துணி கட்டாமல் சுண்டியே வரவேண்டும். இவ்வாறு செய்து வந்தால், குழந்தையினிடம் தவறான பழக்கம் உண்டாகாமல் நின்றுவிடும். குழந்தையும் தன்னை அடக்கிக்கொள்ளும் நல்ல பழக்கத்தையும் பெற்றுவிடும்.