பாப்பா முதல் பாட்டி வரை/009-024
கர்ப்ப காலத்தில் குழந்தையைச் சுமத்தல் என்பது ஒரு சுகமான சுமை. குழந்தையின் கர்ப்பக்கிரகமான கர்ப்பப் பையில், உயிருக்கு ஆபத்தான கட்டிகளும் தோன்றுகின்றன என்பது வேதனைக்குரியது.
வயிற்றின் அடிப்பகுதியில் சிறநீர்ப் பைக்கும், மலக்குடலுக்கும் நடுவில், கர்ப்பப் பை உள்ளது. இளவயதில் 4 செ.மீட்டராக இருக்கும் இக் கர்ப்பப்பை, வயதுக்கு வந்த பின்னர், ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜோஸ்டிரான் ஆகிய ஹார்மோன்கள் உற்பத்தியாவதால், சுமார் 9 செ.மீட்டர் அளவுக்கு விரிவடைகிறது.
கர்ப்பப் பை வளர்வதற்குக் கரு முட்டையின் வளர்ச்சியும் முக்கியக் காரணம். குழந்தையைச் சுமக்கும் காலத்தில் 30 செ.மீ வரை இது விரிவடைகிறது.
கர்ப்பப் பையின் பாகங்கள் : உடல், வாய், குழாய் என மூன்று பகுதிகளைக் கொண்டது. கர்ப்பப் பை வாயில் நீர் கோர்த்த கட்டிகள் (congeitalcyst) வரும். ஹார்மோன்கள் மாற்றத்தால் ரத்த ஓட்டம் அதிகமாகி கர்ப்பப் பையின் உடல் பகுதியில் வருவது கர்ப்பப் பை தசைக்கட்டி (fibroid). இது எந்த வயதிலும் வரலாம். குடும்பப் பாரம்பரியமாகவும் 30 வயது முதல் 50 வயது வரையிலும் இக்கட்டி வர அதிக வாய்புள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கும், ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கும், அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்பவர்களுக்கும் இக் கட்டி வரக்கூடும். நெல்லிக்காய் அளவில் உருவாகும் இக் கட்டி சுமார் 3 கிலோ வரை வளரும்.
அறிகுறிகள் என்ன? : அடிவயிற்றில் கனமான உணர்வு இருத்தல், மாதவிடாயின்போது வலியுடன் கூடிய அதிக ரத்தப்போக்கு, அதன் காரணமாக ரத்த சோகை ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
கர்ப்பப் பையின் உடல் பகுதியில் வரும் மற்றொரு கட்டியை Adenomyosis என்று சொல்வார்கள். இது பெரிதாக வளராது என்றாலும், வயிற்று வலியும் ரத்தப்போக்கும், கீழ் முதுகு வலியும் இருக்கும். 3 அல்லது 4 குழந்தைகள் உள்ளவர்களுக்கும் 40 வயதுக்கு மேலானவர்களுக்கும் இக்கட்டி வர வாய்ப்புள்ளது.
கர்ப்பக் குழாயில் அதிகமாக நோய்க்கிருமிகள் தாக்கினாலும், சீழ் பிடித்து கட்டிகள் உருவாகலாம். தொடர்ந்து ஆராேக்கியமற்ற முறையில் கருச்சிதைவு செய்பவர்களுக்கு, இக் கட்டி வரலாம். சுமார் 20 முதல் 40 வயது வரை இந்த கட்டிகள் வரக்கூடும்.
புற்றுநோய்க் கட்டிகள் : பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 80 சதவீதம் கர்ப்பப் பையில் தான் ஏற்படுகிறது. இளம் வயதில் திருமணம் செய்தல், அதிகக் குழந்தைகளைப் பெறுதல், அடிக்கடி கருவுறுதல், ஆகியவற்றால் கர்ப்பப்பை வாயின் உட்புறமும், வெளிப்புறமும் புற்றுநோய் ஏற்படுகிறது. கிராமங்களில் இப்பாதிப்பு அதிமாகவுள்ளது.
இதில் அதிவேகமாக வளரும் வகை Anaplastic எனப்படும். மெதுவாக வளரும் வகை squamous cell carcinoma என்றழைக்கப்படுகிறது. இக் கட்டியானது 45 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் வரும். மாதவிடாய் நின்ற பிறகு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெள்ளைபடுதல், விட்டு விட்டு வரும் மாதவிடாய், முதுகுவலி ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும்.
இப் புற்றுநோயை 0-4 கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரம்பத்தில் (0 - நிலையில்) கண்டுபிடித்தால், எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். சிகிச்சை காலதாமதமானால், அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.
வேகமாக வளரும் கர்ப்பப் பை புற்று நோயானது, அருகில் உள்ள உறுப்புகளையும் பாதிக்கும். கர்ப்பப் பையின் உடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகள், மகப்பேறு தொடர்பானவை. இதற்கு chonocarcinoma என்று பெயர். கர்ப்பப் பையில் முத்துப்பிள்ளை உண்டானவர்களுக்கு, இந்தக் கட்டிவர 40 சதவீத வாய்ப்புள்ளது.
இக் கட்டி உள்ளவர்களுக்குக் குழந்தை உண்டாயிருத்தல் போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், குழந்தையின் அசைவு இருக்காது. இதை ஸ்கேன் மூலம் 10 வாரத்துக்குள் கண்டுபிடித்து விடலாம்.
இக் கட்டி ஏற்பட்டவர்களுக்குக் கல்லீரல், நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இக் கட்டியை மருத்து மூலமாகக் குணமாக்கலாம். தெற்காசிய நாட்டிலுள்ளவர்களுக்கு, இக் கட்டி அதிகமாக வருகிறது. 20 வயது முதல் 35 வயதுக்குள்ளானவர்களுக்கு, இக் கட்டியின் தாக்குதல் ஏற்படுகிறது.
புற்றுநோயாக மாறும் கட்டிகள் : சதைக்கட்டிகள் நாளடைவில் புற்றுநோய்க் கட்டிகளாக (Sarcoma) மாற வாய்புள்ளது. கர்ப்பப் பையின் உட்புறப் பகுதியிலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை இல்லாதவர்கள், அதிக எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இக் கட்டி வரலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது வரக்கூடும்.
கர்ப்பப் பைக் குழாயில் புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் 0.3 சதம் மட்டுமே. கர்ப்பப் பையில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளால் உயிருக்கு ஆபத்து. சாராரணக் கட்டிகள் பக்க உறுப்புகளைப் பாதித்து, அதனால் சாவு ஏற்படும்.
கண்டுபிடித்தல் : டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையின் போதே, 50 சதவீத நோயைக் கண்டுபிடித்து விடலாம். 40 வயதுக்கு மேலான பெண்கள், Pap smear சோதனை (கர்ப்பப் பை வாய்ச் சோதனை) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், புற்றுநோயின் துவக்கத் கட்டத்தைக் கண்டுபிடித்து விடலாம். அடுத்து, திசு பரிசோதனை (பயாப்சி) செய்தாலும் கர்ப்பப் பையில் ஏற்படும் கட்டிகள் குறித்துக் கண்டுபிடித்து விடலாம்.
ஸ்கேன் பரிசோதனையின் மூலம் கட்டி குறித்து அறியலாம். லேப்ராஸ்கோப்பி மூலமாகக் கட்டியை நேரடியாகப் பார்த்து, அதில் பயாப்சி எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்தலாம். கர்ப்பப் பை உள்ளே வளரும் கட்டியை, ஹிஸ்ட்தோஸிகோபி கருவி மூலம் அறிய முடியும். சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
சிகிச்சை : பெண்ணின் வயது, குழந்தை நிலை, குழந்தைகள் எண்ணிக்கை, நோயின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம், கட்டி மட்டுமே அகற்றப்படுகிறது. கர்ப்பப் பை அகற்றப்பட மாட்டாது. ஆனால், குழந்தை இருந்தாலும், இல்லா விட்டாலும், புற்றுநோய் இருந்தால், கர்ப்பப்பையும் அதைச் சார்ந்த பகுதியும் அகற்றுவது அவசியம்.
புற்றுநோய் இல்லையெனில், லேப்ராஸ்கோப்பி மூலம் கட்டியின் அளவைப் பொறுத்து அகற்றி விடலாம். கர்ப்பப் பை வாயில் ஏற்படும் புற்று நோயைக் கதிர் வீச்சு மூலம் அகற்றலாம். மூன்றாவது கட்ட நிலையிலுள்ள புற்றுநோய்க்குக் கதிர்வீச்சு மூலம் சிகிச்சையளிப்பது நல்லது. இதனால் ரத்தக்கசிவும், வலியும் குறைய வாய்புள்ளது. ஆனால், 0.2 நிலையிலுள்ள புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்த பின்பு, கதிர்வீச்சு அளிப்பது நல்லது.
இதைத்தவிர மருந்துகள் மூலமாகவும் (ஹீமோதெரப்) சிகிச்சையளிக்கத் தற்போது வசதிகள் உள்ளன. பெரிய அளவிலான கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அகற்றமுடியும். முத்துப்பிள்ளை தொடர்பாக ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளை, மருந்துகள் மூலமாகக் கரைக்க முடியும்.
தடுப்பு முறை : கர்ப்பப் பைக் கட்டி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. டாக்டர்கள் அனுமதியில்லாமல், ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. வெள்ளைபடுதல் பிரச்சனை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனை பெற்று ஆண்டுதோறும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
எப்போது திருமணம் : 18 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு குழந்தைகளுக்கு நடுவில், மூன்று ஆண்டு இடைவெளி தேவை. இடையில் கருவுற்றால் கருக்கலைப்புக் கூடாது. 40 வயதுக்கு மேலான பெண்கள், ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆக, கர்ப்பப் பையில் நோய் வராமல் காத்துக் கொள்வது ஒவ்வொரு பெண்ணின் கையில் உள்ளது.