உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பா முதல் பாட்டி வரை/010-024

விக்கிமூலம் இலிருந்து

கருமுட்டை தானம் குழந்தை கொடுக்கும்

ம் நாட்டின் மக்கள் தொகை, நூறு கோடியை எட்டும் நிலையில், ஒரு குழந்தை கூட இல்லையே என ஏங்கும் தம்பதியரும் இலட்சக்கணக்கில் உள்ளனர். குழந்தைக்காக முயற்சிக்கும் 4 கோடிப் பேரில், 40 லட்சம் பேருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை. குழந்தைப் பேற்றை அடையாத தாய்மார்கள், பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லத் தயங்கும் நிலை உள்ளது.

ஆண் மலட்டுத் தன்மை : தற்போது ஆண்களில் மலட்டுத் தன்மை மிக அதிகமாகக் காணப்படுகிறது. அணுக்கள் குறைவு. வீரியக் குறைவு, வீரியமின்மை போன்றவை, அதிகமாகக் காணப்படுகிறது. இவற்றை எளிய சிசிச்சை முறையில் சரிசெய்வது கடினம்.

இக்ஸி முறை : இயற்கையான கருத்தரிப்பு மற்றும் சோதனைக் குழாய்க் குழந்தை போன்றவற்றுக்கு, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உயிரணுக்கள் தேவைப்படும். ஆனால் இக்ஸி (Intra Cytoplasmic Spem Injection) முறையில் ஒரேயொரு நுண் உயிரணுவை, மிக நுண்ணிய ஊசியில் எடுத்து, கம்ப்யூட்டர் உதவியுடன் ஒரு கருமுட்டையின் சைட்டோபிளாஸம் பகுதியில் செலுத்தி, கருத்தரிக்கச் செய்யப்படும்.

மருந்து மற்றும் ஊசி மூலம், பெண்ணின் முட்டைப் பையை ஊக்குவித்து, ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை வரவழைத்து, முட்டையின் வளர்ச்சியை ஸ்கேன் மூலம் கண்டறிந்து, குறித்த நேரத்தில் பெண் உறுப்பில் ஸ்கேன் உதவியுடன் நுண்ணிய ஊசியைக் செலுத்தி முட்டைகளைச் சேகரிக்க வேண்டும்.

பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட முட்டையை, ஒரு கண்ணாடித் தட்டில் இக்ஸி மைக்ராஸ்கோப்பில் வைக்க வேண்டும். ஊசி மூலம் உறிஞ்சப்பட்ட ஒரேயொரு ஆண் உயிரணு, இந்த முட்டையினுள் செலுத்தப்படுகிறது. பிறகு இது பதனப்பெட்டியில் வைக்கப்பட்டு, 48 மணிநேரத்தில் கருவாக மாறிய நிலையில், பெண்ணின் கருப்பையினுள் செலுத்தப்படும்.

யார் யாருக்கு இக்ஸி முறை உதவும்: விந்துவில் வீரியம் இல்லாத ஆண்கள். எண்ணிக்கை குறைந்த உயிரணுக்கள் உள்ளவர்கள், அடைப்பினால் விந்துவில் உயிரணுக்கள் இல்லாதவர்கள் (இவர்களுக்கு விரையில் உயிரணுக்கள் இருக்கும். அதை எடுத்துப் பெண்ணின் மும்டையினுள் செலுத்த வேண்டும்.) ஆண் உயிரணுவின் வளர்ச்சி தடைபடுவதால், விந்துவில் உயிரணுக்கள் இல்லாதவர்கள் (இவர்களுக்கு விதையில் இருந்து ஊசி மூலம் கதைப்பகுதியை எடுத்து, அதிலுள்ள உயிரணுக்களைப் பிரித்தெடுத்து, இக்ஸி முறைக்குப் பயன்படுத்துதல்), சோதனைக்குழாயின் சிகிச்சை முறைக்கு உள்பட்டுத் தோல்வி கண்டவர்கள் ஆகியோருக்கு இக்ஸி சிகிச்சை முறை தேவைப்படும். உயிரணுக் குறைபாடு இருந்தும், இக்ஸி முறையைக் கையாள்வதால், 60 முதல் 80 சதவீதம் வரை பெண்ணின் சினை முட்டைகளைக் கருவுறச் செய்ய முடியும்.

சோதனைக்குழாய் குழந்தை : இம் முறையில் பெண்ணின் முட்டைப் பை ஊக்குவிக்கப்படும். பின்னர் சேகரித்த முட்டைகள், தரமான ஆண் உயிரணுக்களுடன் சேர்த்துப் பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. சுமார் 24 முதல் 48 மணி நேரத்தில், முட்டையும், உயிரணுவும் இணைந்து, கரு வளர ஆரம்பிக்கும். நன்கு வளர்ந்த தரமான கரு, ஊசி மூலம் கருப்பையினுள் செலுத்தப்படுகிறது.

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பின்னர் மீண்டும் குழந்தை வேண்டுமென வரும் பெண்கள், பலமுறை, ஊசிமூலம் தரமான விந்து ஏற்றியும், கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு இந்த முறை உகந்தது.

சோதனைக்குழாய், இக்ஸி முறைகளில், 80 சதவீத முட்டைகள் கருவாக மாறுகின்றன. இதில் 30 சதவீதம் கருதான் கருப்பையில் தொடர்ந்து வளர ஆரம்பிக்கிறது. இதில் நவீனமான பிளாஸ்டோசிஸ்ட் ( blostocyst Culture) மற்றும் அஸிஸ்டட் ஹேச்சிங் (Assisted Hatching) முறைகளில் செயற்கைக் கருவுறுதலில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டோசிஸ்ட் கல்ச்சர் முறை : எவ்விதக் குறையும் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்கும் தம்பதிகளுக்கு, இயற்கையில் பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும், கருப்பைக் குழாயில் சந்தித்துக் கரு உருவாகிறது. இக் கரு, 4-5 நாள்களில் கருப்பைக் குழாயில், பல செல்களாக வளர்ச்சி அடைந்த பிளாஸ்டோசிஸ்ட் நிலையில் தான் கருப்பையைச் சென்றடைந்து வளர்கிறது.

பிளாஸ்டோ சிஸ்ட் கல்ச்சர் முறையில், பதனப்பெட்டியில் 4, 5 நாள்கள் வரை மாறுபட்ட சூழ்நிலையில் வைத்து, 64 செல்கள் வரை உருவான பிளால்டோசிஸ்ட் நிலையில், கர்ப்பப் பையில் கரு செலுத்தப்படுகிறது.

சோதனைக் குழாய், மற்றும் இக்ஸி முறையில், 2 நாள் கரு, கருப்பையில் செலுத்தப்டுகிறது. இதைவிட, 4 - 5 நாளில், நன்றாக வளர்ச்சி அடைந்த கரு செலுத்தப்படுவதால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதே பிளாஸ்டோசிஸ்ட் கல்ச்சர் முறையின் சிறப்பு.

சில ரசாயனங்கள் அல்லது லேசரின் உதவி கொண்டு, கருவைச் சுற்றியுள்ள ஒட்டில் விரிசலை ஏற்படுத்தி, கருவானது கருப்பையில் எளிதாக ஒட்டி வளர ஏதுவான நிலையை, உருவாக்குவது அஸிட்டட் ஹேட்சிங் முறையாகும்.

கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் : சோதனைக் குழாய், இக்ஸி முறைகளில் 30 சதவீதம் கருத்தரிக்க வாய்ப்புள்ள நிலையில், பிளாஸ்டோசிஸ்ட், கல்ச்சர், அசிஸ்டன் ஹேட்சிங் முறைகளில் 50 முதல் 60 சதவீதம் வரை கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

முட்டை தானம் (Ovum Donation) என்றால் என்ன : சோதனைக் குழாய், இக்ஸி முறைகளில் பெண்களிடம் இருந்து பெறப்படும் முட்டைகள், தரமானதாகவும், அதிக எண்ணிக்கையிலும் இருக்க வேண்டியது அவசியம் சிலருக்கு ஹார்மோன் ஊசிகளால், முட்டைப் பையை ஊக்குவித்தாலும், முட்டை உற்பத்தி சரிவர அமைவதில்லை.

இத்தகைய பெண்களுக்கு, நெருங்கிய ஆரோக்கியமான பெண் உறவினர்களிடம் இருந்தோ, அல்லது பிற பெண்களிடம் இருந்தோ, கரு முட்டையைத் தானமாகப் பெற்று, குழந்தை பெற விரும்பும் பெண்ணின் கணவரின் விந்துவுடன் (உயிரணுவுடன்) இணைத்து சோதனைக் குழாய் முறையில் கருவை உருவாக்கி, அதைப் பெண்ணின் கருப்பையில் செலுத்தி, குழந்தை பெறச் செய்வதே முட்டை தானம் எனப்படுகிறது.

முட்டை தானம் ஏன்? : தற்போதைய சூழலில், ஏராளமான பெண்கள், உயர்கல்வி படித்து பணிக்குச் செல்கின்றனர். இவர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை அமைந்து, திருமணம் நடைபெற 30, 32 வயது ஆகிறது. இத்தகையோர் 2, 3 ஆண்டுகள், குழந்தைக்கு முயற்சி செய்வதில், 35 வயது தாண்டி விடுகிறது. இந்த வயதில், பெண்களுக்கு உருவாகும் சினை முட்டைகளுக்கு வலிமை குறைவதால், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைகிறது. 38-40 வயதில் கருத்தரிப்போருக்குக் கருக் கலைப்பு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.

வயதான பின்னரும், சில பெண்கள் பருவம் எய்தாமல் இருப்பர். இவர்களுக்குக் கர்ப்பப் பை இருக்கும். ஆனால், முட்டைப் (Ovary) இருக்காது. முட்டைப் பை இருக்க வேண்டிய இடத்தில், ரேகை போன்ற கோடு இருக்கும். இவர்களுக்கு முட்டை வளர்ச்சி இருக்காது.

இவர்களுக்கு ஹார்மோன் கொடுத்து, கருப்பையை வளர்த்து, பிற பெண்களின் முட்டையை வாங்கி, சோதனைக் குழாய் குழந்தையை உண்டாக்க முடியும்.

முட்டை தானம் யாருக்கெல்லாம் உதவும் : மாதவிடாய் நின்ற வயதான பெண்கள், 40 வயதுக்கு மேற்பட்ட மாதவிடாய் நிற்காத பெண்கள், கட்டிகள், அறுவை சிகிச்சை காரணமாக முட்டைப் பைசிதிலமடைந்தவர்கள், முட்டைப் பை, மற்றும் கருப்பை வளர்ச்சி குன்றி, சிறுவயதிலேயே மாதவிடாய்நின்ற பெண்கள், மரபணுக் குறை பாடுள்ளவர்கள், சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சை முறைக்கு முட்டைப்பையை ஊக்குவித்தும், முட்டைகள் வராதவர்கள், பிறவி முதலே முட்டைப் பை இல்லாதவர்கள், “கரு முட்டை தானம்” மூலம் கருவுறும் வாய்ப்புள்ளது.

நல்ல உடல் நலத்தோடு இருந்தால், 45 முதல் 50 வயது வரை குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அதிக பருமன் உள்ள பெண்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 50 வயதுக்கு மிகுந்தவர்கள், இம் முறையில் குழந்த பெற முனைவது, சில நேரங்களில் தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

தானத்துக்கான தகுதிகள் : கரு முட்டையைத் தானம் செய்யும் பெண்கள், ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும். 37 வயதுக்கு உள்பட்டவர்களாக இருந்தால் நல்லது. குழந்தை இருப்பவர்கள், குடும்பக் கட்டுப்பாடு செய்தவர்கள், குடும்பக் கட்டுப்பாடு செய்யாதவர்கள், கருமுட்டை தானம் செய்யலாம்.

குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? : சோதனைக் குழாய், இக்ஸி, முட்டை தானம் போன்ற செயற்கை முறையில் பிறக்கும் குழந்தைகள், ஆரோக்கியமாக இருக்குமா? என்பதில் சமுதாயத்தில் பலத்த சந்தேகம் உள்ளது. இதற்குப்பதில், ஆரோக்கியமாக இருக்கும் என்பதே எந்த முறையில் குழந்தை பிறந்தாலும், வித்தியாசம் ஏதேதும் இருக்காது. எனினும், இந்த முறைகள் யாவும், செலவு மிகுந்தவை. இதனால் இவற்றைக் கையாளுவதற்கு முன், வேறு சில எளிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.

ஆண்களின் குறைபாடுகளுக்கு எளிய சிகிச்சைகள் : ஆண்களின் ஹார்மோன் குறைகளாலும், vericocele காரணமாகவும், அணுக்கள் குறைபாடு, மற்றும் வீரியமின்மை ஏற்படும். ஹார்மோன் குறைபாட்டை, ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, நிவர்த்தி செய்யலாம்.

விரையில் உள்ள, விரிவடைந்த ரத்த நாளங்களால், வெப்பம் அதிகரித்து, உயிரணு உற்பத்தியில் எண்ணிக்கையும் தரமும், பாதிக்கப்படுவதையே, vericocele என்கிறோம். இதனைக் கலர் டாப்ளர் ஸ்கேன் மூலம் அறிந்து, லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கை, வீரியம் அதிகரித்து, குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்தச் சிகிச்சையின் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தும், பெண்ணின் கருமுட்டை உற்பத்தியாகும் சமயத்தில், ஆணின் விந்துவைப் பெற்று, அதில் சில ரசாயனங்களைச் சேர்த்துத் தரமான வீரியமுள்ள அணுக்களைப் பிரித்தெடுத்து கருப்பையில் செலுத்தலாம். கருப்பையினுள் விந்தினை ஏற்றும் இம் முறையைச் செயல்படுத்த, கருப்பைக் குழாயில் அடைப்பு இல்லாமல் இருத்தல் மிக அவசியம்.

பெண்களின் குறைபாடுகள் : ஹார்மோன் குறைபாடு, முட்டை உற்பத்தியில் குறைபாடு, கருக் குழாய் அடைப்பு, கருப்பையில் பிறவிக் குறைபாடு, கருப்பையில் கட்டி, முட்டைப் பையில் கட்டி, போன்றவை குழந்தைப் பேறின்மைக்கு வழிவகுக்கின்றன.

ஹார்மோன் குறைபாட்டை ரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து, தகுந்த சிகிச்சையின் மூலம் சரி செய்யலாம்.

முட்டை உற்பத்தியில் குறைபாடு : 30 சதவீதப் பெண்களுக்கு முட்டை சரியான காலகட்டத்தில் உற்பத்தி ஆகாததால் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. இவர்களுக்கு முட்டைப் பையை ஊக்குவிக்க, மாத்திரை அல்லது ஹார்மோன் ஊசிகள் அளித்து, முட்டை உற்பத்தியைக் கருவக ஆய்வு (ovulation Study) மூலம் அறிந்து பையினுள் விந்த ஏற்துதல் மூலம் கருவுறச் செய்யலாம்.

கருக்குழாய் அடைப்பு : பெண்களின் பேறின்மைக்கு, இது முக்கியமான காரணமாகும். இதைக் கருப்பை எக்ஸ்ரே, லேப்ராஸ்கோப்பி மூலம் அறியலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருப்பைக் குழாய் அடைப்புள்ள பெண்களுக்கு அறுவை சிகிச்சை (Tuboplasty) செய்து வந்தனர். ஆனால், தற்போது, லேப்ராஸ்கோப்பி மூலம் அடைப்பைக் கண்டறிந்து நீக்க வழியுள்ளது. லேப்ராஸ்கோப்பி செய்யும் போது, பெண் உறுப்பின் வழியாக ஹிஸ்டெரோஸ்கோபியை, கருப்பையின் உள்பாகத்தில் செலுத்தி ஒரு நுண்ணிய (catheter)-ஐ கருக் குழாயின் துவாரத்துக்குள் செலுத்தி அடைப்பை நீக்கலாம். இதன் மூலம் 75 சதவீத பெண்களுக்கு அடைப்பை நீக்க முடிகிறது. இம் முறையால், அடைப்பை நீக்க முடியாதவர்களுக்கு, சோதனைக் குழாய் முறையைக் கையாள்வது நல்லது.

கருப்பையில் பிறவிக் கோளாறு : சில பெண்களுக்குப் பிறவியிலேயே ஒருவித சதை வளர்ச்சியால், கர்ப்பப்பை இரண்டாக இருக்கும். இது அடிக்கடி கருச்சிதைவு ஏற்படக் காரணமாகிறது. இதை அறுவை சிகிச்சையின்றி ஹிஸ்டெரோ ஸ்கோப்பி மூலம் பார்த்து, சதையை அகற்றலாம்.

கருப்பையில் கட்டி : கருப்பையில் இருக்கும் பைப்ராய்டு கட்டி, குழந்தைப் பேறின்மைக்குக் காரணமாக அமைகிறது. கட்டிகளின் எண்ணிக்கை, அளவு, எங்குள்ளது என்பதைக் பொருத்து, இதற்கான சிகிச்சை மாறுபடும். கருப்பையின் மேற்புறம் கட்டி இருப்பின், லேப்ராஸ்கோப்பி மூலமாகவும், உள் புறத்தில் இருப்பின் ஹிஸ்டெரோஸ்கோப்பி மூலமாகவும் அகற்றலாம்.

முட்டைப் பையில் கட்டி : சினைப்பையில் சாதாரண நீர்க் கட்டிகள் முதல், பல வகைக் கட்டிகள் ஏற்படலாம். இவற்றை ஸ்கேன் மூலம் அறியலாம். மிகச் சிறிய நீர்க்கட்டிகள், சிகிச்சையின்றி கரையக் கூடும். பெரிதாக உள்ள நீர்க்கட்டிகளை ஸ்கேன் உதவியுடன், பெண்ணுறுப்பு வழியே ஒரு ஊசியைச் செலுத்தி, நீரை எடுத்து விடுதவதன் மூலம் கரைக்கலாம். மிகப்பெரிய நீர்க் கட்டிகள், சாக்லேட் சிஸ்ட், டெர்மாய்ட் கட்டிகளை, லேப்ராஸ்கோப்பி வழியாக அகற்றலாம். 80 சதவீதக் கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. இந்தக் கட்டிகளைப் பெரும்பாலும், லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றுவதே சிறந்தது. தக்க சமயத்தில் அகற்றுவதன் மூலம் குழந்தைப் பேறின்மையை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.