உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பா முதல் பாட்டி வரை/011-024

விக்கிமூலம் இலிருந்து

பெண்களே... டென்ஷன் வேண்டாம்

எங்கும் வேகம், எதிலும் வேகம், இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், காலை முதல் மாலை வரை, ஒரே பரபரப்பு. பதற்றம், படபடப்பு. விஞ்ஞானம் வளர, வளர நமது வாழ்க்கை முறையும் (Life Style) அடியோடு மாறிவிட்டது.

வாழ்க்கை முறை மாறியதால், பல புதுப்புது நோய்கள் அழையா விருந்தாளியாக நம் உடம்பில் புகுந்து கொட்டமடிக்கிறன.

பெண்களுக்கு பாதிப்பு: இந்தப் பரபரப்பான வாழ்க்கைச் சூழல், ஆண்களை விடப் பெண்களையே அதிகமாகப் பாதிக்கிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

காலையில் பால்காரர் வராததால் ஏற்படும் டென்ஷன், திடீரென சமையல் காஸ் தீர்ந்துவிடுவது, பள்ளி செல்ல குழந்தை அடம் பிடிப்பது, சாப்பாடு சரியில்லை எனக் கணவர் கோபிப்பது, பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் செல்வது, என்று தொடர்ந்து டென்ஷன், டென்ஷன், டென்ஷன். இதனால் மன உளைச்சல், அழுத்தம் ஏற்பட்டு, நாளாடைவில் அது உடலையும் பாதிக்கிறது.

இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில், ஒன்று குடல் உளைச்சல் நோய் (iritable bowel syndrome) 70 சதவீதப் பெண்கள் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். Hurry (அவசரம்). Worry (கவலை) Curry (மசாலா) ஆகியவை, இந் நோய்க்கு முக்கியக் காரணம். இந் நோய் பாதித்தால், இரைப்பையில் புண் ஏற்படும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி, வீட்டில் உள்ள பெண்களும் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படலாம். ஆனால், பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது.

வயிறு கவ்விப்பிடிக்கும்: பதற்றம் ஏற்பட்டால் வயிறு தொடர்பான உறுப்புகள் பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு நடக்கிறது. அடுத்து நம்மை அழைக்கப் போகிறார்கள் என்ற நிலையில், அடிவயிறு கவ்விப் பிடிக்கும். தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது, மாணவ, மாணவிகளுக்கும், இதே உணர்வு ஏற்படும். இது போன்று நமது அன்றாட வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பதற்றம், படபடப்பு காரணமாக, வயிறு பாதிக்கப்படுகிறது.

பதற்றத்தால் இரைப்பை, குடல் ஆகியவற்றின் செயல் திறன் வேறுபடுகிறது. ரத்த ஒட்டம், சுரப்பிகள் சுரக்கும் நீரின் தன்மை, ஆகியவை மாறுபடுகின்றன. பதற்றம் காரணமாகக் குடலில் புண் ஏற்படுகிறது. இதுவே குடல் உளைச்சல் நோய்.

நோய்க்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் : வயிறு, குடல் சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே, இந்த நோய்க்கும் தெரியவரும். அடி வயிற்றில் வலி இருப்பதால், பலர் குடல் வால் (Apeendix) நோய் என்று நினைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள்.ஆனால் அதன் பின்னரும் வலி இருக்கும். அமீபாக் கிருமி தாக்குதல் என்று நினைத்து, அதற்கு மருத்து சாப்பிடுவார்கள். ஆனாலும், வலி தீராது. பித்தப் பை வியாதி போலவும், அல்சர் வலி-போலவும் தோன்றும்.

அறிகுறிகள் : வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாப்பிட்ட உடனே மலம் களிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழிப்பது, உணவுக் குழாய், நெஞ்சில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது இந் நோய்க்கான அறிகுறிகள்.

கண்டுபிடிப்பது எப்படி ? : இந்நோய் பாதித்துள்ளதை அறிய, சரியான சோதனை முறை தற்போது நடைமுறையில் இல்லை. பெருங்குடல் வியாதிகளுக்கும், இதே அறிகுறி இருக்கும்.

எனவே வயிறு தொடர்பான பிற நோய்கள், இல்லை என்ற உறுதி செய்த பின்னரும், இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், அது குடல் உளைச்சல் நோய் (irrtable Bowel Syndrome) என்று மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

எனவே, குடல் வால் அழற்சி நோய் (அப்பன்டி சைட்டிஸ்) , புற்றுக்கட்டி, அல்சர் போன்ற நோய்களுக்கு உரிய பரிசோதனைகளை முதலில் செய்ய வேண்டும். குடல் உள் நோக்கிக் கருவி மூலம், பெரும்பாலான குடல் நோய்களைக் கண்டுபிடித்து விடலாம். எல்லாம் சரியாக உள்ளது என்று இச் சோதனைகளில் நிரூபிக்கப்பட்டால், அதன் பின்னர், குடல் உளைச்சல் நோய்க்குச் சிகிச்சை அளிக்கப்படும். மற்ற நோய்கள் இருந்தால் குடல் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் குடல் உளைச்சல் நோய் இருந்தால் எந்த பாதிப்பும் தெரியாது.

வேறுபாடு என்ன? : பிற குடல் நோய்களுக்கும், குடல் உளைச்சல் நோய்க்கும், சில வேறுபாடுகள் உள்ளன. அடிக்கடி மலம் கழிக்கும் பழக்கம், குடல் உளைச்சல் நோய்க்கு ஒரு முக்கிய அறிகுறி. ஆனால், பிற குடல் நோய்களுக்கு, இரவில் பாதித் தூக்கத்தில் எழுந்து மலம் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால், குடல் உளைச்சல் நோயால், இரவில் தொந்தரவு இருக்காது. அது போல் அல்சர் இருந்தால், மலத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ரத்தக்கசிவு இருக்கும். இது மலச் சோதனையில் தெரிந்து விடும். ஆனால் குடல் உளைச்சல் நோய் இருந்தால், ரத்தக் கசிவு இருக்காது.

சிகிச்சை என்ன? : குடல் தொடர்பான நோய்கள் (அப்பன்டிசைட்டிஸ், புற்று நோய், அல்சர் இல்லை என்று முதலில், நோயாளிக்கு உறுதிப்படுத்த வேண்டும். இதனால், நமக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்று, அவர் மனத்தில் நம்பிக்கை ஏற்படும். இதுவே நோயின் தீவிரத்தைக் குறைத்துவிடும். பின்னர், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடச் சொல்லலாம். கீரை, பச்சைக் காய்கறிகளில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. அதிகமாக வலி இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனைப் படி, வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடலாம். மன உளைச்சல், அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். மன உளைச்சலால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்தால், மனநல மருத்துவரிடம் நோயாளியை அனுப்பி, ஆலோசனைகளைப் பெற வேண்டும். சிலருக்குத் தொடர்ந்து பேதி, அல்லது மலச்சிக்கல் இருந்தால், அதற்கேற்ப மாத்திரை, மருந்துகளை கொடுக்க வேண்டும்.

சுத்தம் சுகம் தரும் : சுத்தமான காற்று, நீர், சீரிய உடற்பயிற்சி, தியானம் ஆகியவை தான், தற்போதைய அவசர வாழ்க்கை முறைக்குச் சரியான மருந்து. காய்ச்சிய குடிநீர், முடிந்த அளவு சுத்தமான காற்றைச் சுவாசிப்பது, உடற்பயிற்சி, எல்லாவற்றுக்கும் மேலாகத் தியானம் செய்வது மன உளைச்சலையும், அழுத்தத்தையும் குறைக்கும்.