பாப்பா முதல் பாட்டி வரை/017-024
பிறக்கும் குழந்தைகள் பிறந்தது முதல் 15 வயது வரை உள்ள அனைவருமே குழந்தைகள் தான்.
பிரசவத்தில் ஏற்படும் கோளாறுகள், உறவில் திருமணம், கருவுற்றிருக்கும் போதே, தாய் பல மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுதல், கருவுற்றிருக்கும்போது, எக்ஸ்ரே கதிர்கள் ஊடுருவுதல், பிறவி ஊனங்கள், ஆகிய காரணங்களால், சில குழந்தைகளுக்குப் பிறந்த உடனோ அல்லது 3 வயதுக்குள்ளோ, அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நோய்கள் ஏற்படுகின்றன.
கருவில் குழந்தை இருக்கும்போதே, 6, 7-வது மாதத்தில் பிறக்கும் குழந்தையின் கோளாறை, அல்ட்ரா சோனோகிராம் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். கோளாறு இருந்து அறுவை சிகிச்சை தேவை என்றால், நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்து விடுவது மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை என்றாலே பெற்றோருக்குப் பதற்றமும், பயமும் ஏற்படுகிறது. இது இயல்பு. ஆனால் பயம் தேவையற்ற ஒன்று. ஏனெனில் குழந்தையின் உறுப்புகள் அனைத்தும் புத்தம் புதிதாக இருப்பதால், சுற்றுச்சூழல் மாசு உட்பட, அனைத்து நோய்க் காரணிகள் விரைவாகத் தாக்குதல் நடத்த வாய்பு இல்லை.
ரத்த அழுத்த நோய், சர்க்கரை சோய், புகை பிடித்தல் அல்லது சுற்றுப்புறமாகக் காற்றால், தாக்குதலுகு உள்ளாகும் நுரையீரல்கள், ஆகியவற்றை எல்லாம் உள்ளடக்கியுள்ள பெரியவர்களை விட, இவை ஏதும் இல்லாத குழந்தைகள், அறுவை சிகிச்சைக்கு அதிகம் தகுதியானவர்கள் என்பதே உண்மை. அறுவை சிகிச்சைகளுக்குப் பின்பும் கூட, அதிக வலி தாங்கும் சக்தியாலும், இயல்பான வளர்ச்சியில், விரைவில் ஆறிவிடும் காயங்களாலும், பெரியவர்களை விட குழந்தைகள், மிக விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுவது ஆச்சரியமான உண்மை.
மிகுந்த ஜாக்கிரதை தேவை : குழந்தைகள் அறுவை சிகிச்சை குறித்துப் பெற்றோர் கவலைப்படத் தேவை இல்லை. ஆனால், மருத்துவர்கள் அதிக கவனத்துடன் அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். ஏனெனில் பெரியவர்களுக்கு சிறிய அறுவை சிகிச்சையாக இருந்தால், அறுவை சிகிச்சை செய்யும் பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து (Local Anaesthesia) கொடுக்கப்படுகிறது. ஆனால், குழந்தைகளைப் பொறுத்த வரை, அனைத்து அறுவை சிகிச்சைகளும், முழு மயக்க நிலையிலேயே (General Anaesthesia) செய்யப்படுகின்றன. எனவே, குழந்தை மயக்க மருத்துவரின் பணி, மிகவும் முக்கியப் பங்கை வகிக்கிறது. இதனால் தான் குழந்தைகள் அறுவைசிகிச்சை அனைத்துமே ‘மேஜர் சர்ஜரி’ ஆகும்.
உணவுக் குழல் அடைப்பு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சையே தீர்வு. இந் நோய்கள் வருவதற்கான காரணங்கள், இவை தான் என உறுதியாகக் கூற முடியவில்லை. அறிவியல் பூர்வமாகக் காரணங்களைக் கண்டுபிடித்துவிட்டால், நோய் வரும் முன்பே தடுத்து விடலாம். குழந்தைகளுக்கு வரும் பெரும்பாலான நோய்கள், கருவிலிருந்து ஆரம்பிக்கின்றன. காரணம் தெரியாமல் இருப்பதால், தடுக்க முடிவதில்லை. மேலும், பிறவிக் குறைகள் தனித்து ஒரு உறுப்பை மட்டும் பாதிப்பதில்லை. மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.
உணவுக் குழாய் அடைப்பு : வாய்க்கும், வயிற்றுக்கும் நடுவில் உணவுக்குழாய் உள்ளது. பிறக்கும் குழந்தைக்கு இதில் அடைப்பு ஏற்பட்டால், எச்சில் விழுங்க முடியாது. பிறந்த உடனேயே, வாய்க்கு வெளியே எச்சில் வழிவதே இதன் அறிகுறி. மருத்துவர்கள் ஒரு சிறிய குழாயை வாய் வழியே செலுத்தி, அடைப்பைக் கண்டு பிடித்து விடுவார்கள். அறுவை சிகிச்சை மூலம் அடைப்பை நீக்கி விடலாம். இரண்டு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
கருவில் குழந்தை இருக்கும்போதே உணவுக்குழாய் அடைப்பைக் கண்டு பிடிக்க முடியும். பனிக்குட நீர் எவ்வளவு இருக்க வேண்டும் என்று, நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது. பனிக்குட நீர் அதிகம் இருந்தாலே கருவின் உணவுக் குழாயில் அடைப்பு உள்ளதோ என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு எழ வேண்டும். பனிக்குட நீர் குறைவாக இருந்தால் சிறுநீர்ப் பாதையில் கோளாறு உள்ளதா என்று பார்க்க வேண்டும். பனிக்குட நீரைப் பொறுத்தே, கர்ப்பிணியின் வயிறு உப்பும் அளவு வெளிப்படுகிறது. எனவே, வயிறு அதிகமாக உப்பியிருந்தால், ‘பெண் குழந்தை’ என்று சொல்வது தவறான கருத்தாகும். ‘அல்ட்ரா சவுண்ட்’ செய்து, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிப்பதே நல்லது.
சில குழந்தைகளக்கு உணவுக்குழாய், வயிறு, சிறு குடல், பெருங்குடல், ஆசனவாயிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சிறு குடலில் அடைப்பு இருந்தால், பித்த நீர் மஞ்சளாக, வாந்தியாக வெளியேறும். இந்த அடைப்புகளையும், அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். இதுபோன்ற அடைப்புக் கோளாறு 5000 குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது.
மலச்சிக்கல் : பிறந்த குழந்தை தொடக்கத்தில் எட்டு தடவை மலம் கழிக்கும். வளர, வளர ஒரு வயதில் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை மலம் கழிக்கும்.
உணவுப் பழக்கம் காரணமாகவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. குடல் இயக்கம் சரியாக இல்லாமல் போனாலோ, அல்லது குடலை இயக்குகிற நரம்புகளில் கோளாறு இருந்தாலோ, மலச்சிக்கல் ஏற்படும். மிகவும் முயற்சி செய்து மலம் போவதும் மலச்சிக்கலின் ஆரம்பம் தான். எனவே, மலச்சிக்கலை அலட்சியப்படுத்தக்கூடாது.
குறிப்பாக 8, 9 மாதக் குழந்தைக்குப் பால், பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட மாவு உணவுப் பொருள்களை மட்டுமே கொடுப்பதால் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கீரை, கேரட், பீன்ஸ் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளையும், பழங்களையும் கொடுத்தால் மலச்சிக்கல் வராது. குழந்தைக்கு நான்கு மாதம் முதலே கேரட் போன்ற காய்கறிகளை வேக வைத்துக் கொடுக்க வேண்டும்.
விளக்கெண்ணெய் கொடுப்பது, ஆசன வாயில் வெற்றிலைக் காம்பு, சோப்பு, புகையிலைத் துண்டை வைப்பது ஆகியவை மூலம், மலம் கழிக்கச் செய்வது தவறானது. இந்த முறைகள், ஆசன வாயில் புண்ணை ஏற்படுத்தி விடும். வலி அதிகமாகி மலச்சிக்கல் பிரச்சினை தீவிரமாகவும் வாய்ப்புகள் உண்டு. வயிறும் பெரிதாகி விடும்.
‘ஹிா்ஷ்ப்ரங்’நோய்: (HIRSCHSPRUNG’s DISEASE)
குடல் தசைகளை இயக்கும் நரம்பணுக்களின் (Ganglia) குறைபாட்டால் மலச்சிக்கல் ஏற்படலாம். இவ் வகைக் குறைபாடு ‘ஹிர்ஷ்ப்ரங்’ நோய் எனப்படும். பேரியம் எனிமா எனும் எக்ஸ்ரே படங்களாலும், பயாப்ஸி சோதனைகளாலும் இந் நோயை அறியமுடியும். அறுவை சிகிச்சை மூலம் நரம்பணுக்கள் இல்லாத அல்லது குறைவாக உள்ள குடல் பகுதியை நீக்கினால் மட்டுமே, இவ்வகை மலச்சிக்கல் குணமாகும். 5 ஆயிரம் குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு இந் நோய் உள்ளது.
‘பைல்ஸ்’ எனும் மூல வியாதி, குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை. ஆனால், ஆசன வாயில் ரத்தம் வெளியேறினால், பெருங்குடலிலோ, அல்லது அதன் முடிவுப் பகுதியிலோ, ஏதேனும் கட்டிகள் (Polyp Rectum) இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இது புற்றுநோய் அல்ல.
சிறுநீர் பிரச்சினை : சிறுநீரை அடக்கும் சக்தியும், நினைத்தபோது வெளியேற்றும் சக்தியும், குழந்தைகளுக்கு 3 வயதுக்குள் வந்து விடுகிறது. 3 வயது வரை குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. மூன்று வயதுக்குப் பிறகும் இரவு நேரத்தில் கட்டுப்பாடு இல்லாமல், படுக்கையிலேயே குழந்தை சிறுநீர் கழித்தால், முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை அவசியம் செய்ய வேண்டும்.
நரம்புக் கோளாறுகள் காரணமாகச் சில குழந்தைகளுக்கு, கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். ‘மெனிங்கோசில்’ (Meningocele) என்ற முதுகுக் கட்டியால், நரம்புகள் பாதிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிப்பது கடினம். எனினும், பல அறுவை சிகிச்சைகள் மூலம், இந் நோயைக் குணப்படுத்த முடியும்.
சுய நினைவின்றி பகல் நேரத்திலேயே சிறுநீர் வடிதல், இரவு நேரங்களில் படுக்கைகளை நனைத்து விடுதல், ஆகிய குறைபாடுகள், இன்றைய நாகரிகத்தின் பயனாகப் பள்ளிக்கூடம், மற்றும் இல்லங்களில், குழந்கைளுக்கு ஏற்படும் மனச் சுமையின் வெளிப்பாடுகளாகவும், இருக்கலாம். மனவியல் நிபுணர்கள் துணையுடன், இந்த அச்சங்கள், குழந்தையின் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும். குழந்தையும் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.
சிறுநீர் பாதையில் அடைப்பு : கருவில் குழந்தை இருக்கும்போது, அதன் சிறுநீரகங்களும், சிறுநீர்ப் பாதையும் நன்றாக உள்ளதா என அல்ட்ரா சோனோகிராம் மூலம் சோதித்து விடலாம். சிறுநீர்ப் பாதையில் சவ்வு போன்ற அடைப்பு இருந்தால், பிறந்தவுடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சவ்வு போன்ற அடைப்பு முழுமையாக இல்லாமல் இருந்தால், பிறந்தவுடன் பிரச்சினை தீவிரமாக இருக்காது. எனினும், பிறந்த உடனேயே ‘சிஸ்டாஸ்கோப்’ என்ற மிக மெல்லிய குழாய் போன்ற லென்ஸ் பொருத்தப்பட்ட கருவி மூலம், அறுவை சிகிச்சை செய்து, அடைப்பை நீக்கி விடலாம். இந்த அறுவை சிகிச்சைக்கு அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும்.
குழந்தைக்கு ஹெர்னியா வருமா? : விரைப்பையில் திரவம் நிரம்பியிருந்தால், பிறந்த குழந்தையின் விரைப்பை ஒரு பக்கம் வீங்கும். அல்லது குடலின் ஒரு பகுதி விரைப் பைக்குள் இறங்கி விடுவதால், குடல் இறக்கம் (ஹெர்னியா) ஏற்படுகிறது.
குழந்தை இருமும் போது, அழும்போது, விரை வீக்கம் பெரிதாகுமானால், குழந்தைக்குக் குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு அறுவை சிகிச்சையே தீர்வு.
காரணம் : கருவிலேயே விரைப்பைக்கும் வயிற்றுக்கும் இடையே, குழாய் போன்ற தொடர்பு இருக்கும். குழந்தை பிறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர், இந்தக் குழாய் மறைந்து விடும். சில குழந்தைகளுக்கு இது மறையாமல் இருப்பதால் தான் குடல் இறக்கப் பிரச்சினை ஏற்படுகிறது.
குடல் இறக்கம் காரணமாக, வயிற்றில் வலி இருந்தால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். குடல் இறங்குவதற்குப் பதிலாக, விரைப்பை நீர் காரணமாக வீக்கம் இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் குழாய்த் தொடர்பைத் துண்டித்து நீரை வெளியேற்றி விடலாம். பெரியவர்களுக்கு வருவது போன்ற ‘ஃபேலேரியல் ஹைட்ரோசீல்’ (Filarial Hydrocele) நோய் குழந்தைகளுக்கு வருவதில்லை.
சிறுநீர் கழிக்கும் துவாரம் சிறியதாகவே இருத்தல் : சிறுநீர் வெளியேறும் துவாரத்தைத் தோல் அதிக அளவு மூடியிருத்தல் காரணமாக ‘ஃபேமோஸிஸ்’ (Phimosis) எனப்படும் இப் பிரச்சினை ஏற்படுகிறது. உள்ளாடையிலேயே குழந்தை சிறுநீர் கழித்து, ஆடை மாற்றப்படாததால் அந்த ஈரம் சிறுநீர்த் துவாரத்தின் மீது பட்டுக் கொண்டே இருப்பதால், தோலில் அழற்சி ஏற்படுகிறது. மேலும், பிறந்தது முதல் தோலில் ஏற்படும் சிறு கீறல்கள் வடுக்களாகி, சிறுநீர்த் துவாரத்தை மேலும் சிறிதாக்கி விடுகின்றன. இதனால் தோல் விரிவடையாத நிலை ஏற்படுகிறது.
இப் பிரச்சினை ஏற்படும் குழந்தைகள், சிறுநீர் கழிக்க முடியாமல் துடிக்கும். அழுதுகொண்டே சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் கழிக்கும். மூத்திரத் தண்டின் முனை வீங்கும்.
மருத்துமனைக்குக் குழந்தையை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, சிறுநீர் வெளியேறும் இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றினால், நிவாரணம் கிடைக்கும். பாரசிட்டமால் மருந்துகளைக் கொடுத்து குழந்தையைத் துங்க வைக்கலாம்.
வலி அதிகமாக இருக்கும் நிலையில் , அறுவை சிகிச்சை செய்து, தோலை நீக்கி விட்டால், சரியாகி விடும். இந்த அறுவைசிகிச்சைக்கு ‘சர்கம்சிஷன்’ (Circumcision) என்று பெயர். 500 குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு இப் பிரச்சினை ஏற்படுகிறது. சிறுநீர்ப் பாதையில் கற்கள் இருந்தாலும், இதேபோன்று பிரச்சினை ஏற்படும் என்பதால் முதலில் அல்ட்ரா சோனோகிராம் செய்து கற்கள் குறித்து உறுதி செய்துகொண்டு சர்கம்சிஷன் அறுவை சிகிச்சை செய்வது நல்லது. ஏனெனில், சர்கம்சிஷன் செய்து தீர்வு கிடைக்காவிட்டால், கற்களை அகற்ற மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும்.
சிறுநீரகப் பாதையில் கற்கள் : சில குழந்தைகளுக்குச் சிறுநீரகப் பாதையில் கற்கள் இருந்தால், சிறு நீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படும். கற்கள் சிறு நீரகத்தில் இருக்கலாம். சிறு நீரகத்திலிருந்து மூத்திரப் பைக்குச்செல்லும் இடத்தில் இருக்கலாம். மூத்திரப் பையிலிருந்து வெளியேறும் தாரையில் இருக்கலாம். கற்கள் இருந்தால், சிறு நீர் கழிக்கும் போது வலி இருக்கும். சில நேரங்களில் சிறுநீரில் ரத்தம் வரும்.
பெற்றோரே, திட்டாதீர் : சிறுநீர்ப் பையில் கற்கள் இருந்தால், வலியைச் சொல்லத் தெரியாமல், குழந்தைகள் தங்களது சிறு நீர் வெளியேறும் உறுப்புகளை அவ்வப்போது கைகளால் பிசையும் , அல்லது சுவரின் மீது அடிக்கடி உறுப்புகளைத் தேய்க்கும். குப்புறப்படுத்துக் கொண்டு, உறுப்புகளைத் தேய்க்கும். வலியின் காரணமாகவே, குழந்தைகள் இவ்வாறு செய்கின்றன. ‘கையை எடு’ என்று பெற்றோர் திட்டக் கூடாது. பதிலாக மருத்துவரிடம் உடனடியாகச் செல்வது நல்லது. அல்ட்ரா சோனோ கிராம் மூலம், சிறுநீர்ப் பையில் கற்கள் இருக்கிறதா என்று சோதித்துவிடலாம்.
சிறிய கற்களாக இருந்தால், சிறு நீரில் தாமாகவே வெளியேறிவிடும். பெரிய கற்களாக இருந்தால் அறுவை சிகிச்சை அவசியம்.
விரைப்பையில் விரைகள் இல்லையா?: ஆண் குழந்தையின் விரைகள், கருவில் உள்ள குழந்தையின் வயிற்றுப் பகுதியில் தான் முதலில் தோன்றுகின்றன. கருவின் வளர்ச்சியின் போது, அவை கீழிறங்கி விரைப்பைகளை அடைகின்றன. (வயிற்றுக்கும் விரைப் பைக்கும் இடையே உள்ள இணைப்பு பற்றி ஏற்கனெவே சொல்லப்பட்டுள்ளது) விரை இறங்கும் பாதையில் ஏதேனும் தடை இருந்தாலோ அல்லது பாதை மாறிப் போவதாலோ, விரைகள் விரைப் பையில் இறங்காமல் இருக்கலாம். இக் குறை ஒருபுறமோ அல்லது இரு புறத்திலுமோ ஏற்படலாம். 2 வயது அளவில் அறுவை சிகிச்சை மூலம் விரைகளை, அவற்றின் சரியான இடமான விரைப் பைகளில் பொருத்துவது அவசியம்.
ஏனெனில் வேறு இடத்தில் இருக்கும் விரையின் வளர்ச்சியும், செயல்பாடும் பாதிக்கப்படும். 20-30வது வயதில் புற்றுநோயும் ஏற்படலாம். இரு புறமும் பாதிக்கப்பட்டால், மலட்டுத் தன்மை உண்டாகவும் வாய்ப்பு உண்டு. எனவே, குழந்தைக்கு விரைப் பைகளில் விதைகள் இல்லையெனில், அறுவைசிகிச்சை நிபுணரை உடனடியாகச் சந்தித்து ஆலோசனை கேட்பது அவசியமாகும்.
‘டான்சில்’ பிரச்சினை : தண்ணீர், காற்று, உணவு வழியாக உடலுக்குள் நுழையும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைத் தடுக்க, தொண்டையில் உள்ள சதை உதவுகிறது. கிருமிகள் நுரையீரலுக்குள் சென்றுவிடாமல் இச் சதை தடுக்கிறது. நோயை எதிர்க்கும் லட்சக்கணக்கான வெள்ளை அணுக்கள், இச்சதையில் உள்ளன. நான்கு வயது வரை இத் தொண்டைச் சதை, ஒரு அரண் போல் பாதுகாப்பு அளிக்கிறது.
3 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் பெரும்பாலும், இத் தொண்டைச் சதையில் நோய்த் தொற்று ஏற்படுகிறது. ஒத்துக் கொள்ளாத ஐஸ்கிரீம், குளிர்பானங்களைக் குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதால், சளி, காய்ச்சல் அடிக்கடி வந்து, தொண்டைச் சதையில் நோய்த் தொற்று ஏற்படுகிறது. நோய்த் தொற்று தீவிரமாகும் நிலையில், காதுக்குப் பரவாமல் தடுப்பதைத் தவிர்க்க, அறுவைசிகிச்சை செய்து, தொண்டைச் சதையை அகற்றி விடுவதே நல்லது.