உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/வீராதி வீரன் மிலோ

விக்கிமூலம் இலிருந்து



18. வீராதி வீரன் மிலோ


பாரதக் கதையிலே வரும் கதாநாயகர்களில் வலிமைக்குப் புகழ் பெற்றவன் பீமன், அவன் உண்ணும் உணவையும், பண்ணிய யுத்தங்களையும் பார்க்கும்பொழுது, நம்மையறியாமலேயே ஒரு வீர எழுச்சியினைப் பெறுவதும் உண்டு.

வண்டி வண்டியாக சோற்றை உண்டு, குடங்குடமாகப் பால் தயிர் குடித்து, மரங்களைப் பிடுங்கி, மலைகளைக் கிள்ளி பகாசுரனோடு சண்டைபோட்டான் என்று படிக்கும்பொழுது, இப்படியும் ஒரு மனிதனா என்று எண்ணுகிறோம். புராணக் கதையின் புகழ் பெற்ற வீரனான பீமன், பலவான் என்கிற பெரும் புகழ் பெற்றவனாக இன்றும் மிளிர்கிறான்.

அதேபோல, இராமாயணத்தில் வரும் அனுமனின் ஆற்றலும் அளவிடற்கரியதாகும். சஞ்சீவி மலையையே கையால் பெயர்த்தெடுத்துச் சென்றதும், இலங்கைக்குச் செல்லக் கடலைத் தாண்டிச் சென்றதும் எல்லாம் அனுமனின் வீரதீர நிகழ்ச்சிகளாகும்.

உண்மையாக நடந்ததென்று உலகிலே பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும் பழைய ஒலிம்பிக் பந்தயங்களிலே, பீமனையும் அனுமனையும் மிஞ்சுகின்ற அதிக சாதகங்கள் புரிகின்ற ஒரு வீரனாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறான். வருணிக்கப்பட்டிருக்கிறான் இந்த மிலோ.

அவன் வீரக் கதையைப் படியுங்கள்.

கிராட்டன் (Croton) எனும் நகரத்தைச் சேர்ந்தவன் மிலோ, இந்தக் கிராட்டன் நகரம் தென் இத்தாலியில் உள்ளது. கீர்த்தி மிக்க வீரர்களை கிரேக்கத்தின் ஒலிம்பிக் பந்தயங்களுக்குப் பலமுறை அனுப்பி, வெற்றி பெறச் செய்து, புகழ் பெற்று விளங்கிய நகரம்தான் கிராட்டன். என்றாலும், மிலோ திறமை மிக்க வீரனாக வந்து, ஒலிம்பிக் பந்தயங்களில் பல முறை வெற்றிகளைப் பெறத் தொடங்கியதும்தான், கிராட்டன் நகரம் பெரும் புகழ் பெற்றது என்கிற அளவுக்கு மிலோவின் வெற்றிப் பட்டியல் நீண்டு சென்றது. நிலைத்து நின்றது.

கி.மு. 576ஆம் ஆண்டு கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கு, கிராட்டனிலிருந்து 6 வீரர்கள் சென்றனர். அவர்கள் 6 பேரும் ஓட்டப் பந்தயத்தில் முதலாவது வந்த ஏழு பேர்களில் இடம் பெற்று இருந்தனர் என்பது வரலாறு, இதுபோன்ற வெற்றி மிகுந்த வீர சாதனை, இன்றைய முன்னணி நாடுகளான ரஷ்யாவும், அமெரிக்காவும் தங்கள் வீரர்களை அனுப்பிக் கூட செய்ததில்லை எனவும் பல வரலாற்றாசிரியர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.

அத்தகைய ஆற்றல் மிக்க வீரர்களை ஆதரித்து, ஆளாக்கி அனுப்பி வைத்து, அரும்பெரும் வெற்றிகளை ஈட்டிய இந்த கிராட்டன் நகரத்திலேதான் வீரன் மிலோவும் தோன்றினான். ஏற்கனவே புகழ் பெற்ற கிராட்டன் நகரத்தவன் மிலோ என்ற புகழைப் பெறாமல், மிலோ பிறந்த பூமி கிராட்டன் என்று புகழப்படும் அளவுக்கு பராக்கிரமம் மிக்கவனாகத் திகழ்ந்தான்.

நான்காண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒலிம்பிக் பந்தயங்கள் நடக்கும். அதற்கிடையே ஆங்காங்கே பிதியன் பந்தயங்கள் (Pythian Games); இஸ்த்மியான் பந்தயங்கள் (lsthmian Games);நிமியன் பந்தயங்கள் (Nemean Games); என்கின்ற பெயர்களிலும் சிறப்புற பந்தயங்கள் நடந்து வரும்.

மிலோ மல்யுத்தத்தில் கெட்டிக்காரன், அவன் மாணவர்களுக்காக (Boys) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில்தான் முதன் முதல் பங்கு பெற்றான். அந்த ஆண்டு கி.மு. 540. அதன் பின், மனிதர்களுக்கான (Men) மல்யுத்தப்போட்டியில் 5 ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறான். அதாவது 20 ஆண்டுகள் தொடர்ந்தாற் போல் (கி.மு. 540 லிருந்து கி.மு. 520 வரை) அவனே வெற்றி பெற்றிருக்கிறான். அவனை வெல்ல யாருமே இல்லை என்ற வல்லமை மிக்க வீரனாகவே விளங்கி இருக்கிறான்.

இதற்கிடையிலே நடைபெற்ற பிதியன் பந்தயங்களில் 6 முறையும், இஸ்த்மியான் பந்தயங்களில் 10 முறையும், நிமியன் பந்தயங்களில் 9 முறையும், வெற்றி பெற்று சிறந்த வீரனாகவே விளங்கியிருக்கிறான் மிலோ.

இவ்வாறு 6 முறை ஒலிம்பிக் பந்தயங்களில் மல்யுத்தத்தில் வெற்றி பெற்ற வீரன் மிலோ, ஏழாவது தடவை ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டபோது டிமாஸ்தியஸ் என்ற ஒரு வீரனிடம் தோற்றுப்போனான்.

ஒரு மனிதன் குறைந்தது ஏழு அல்லது எட்டு ஆண்டுகள்தான் தன் உடலில் ஆற்றலில், குறையாமல் வைத்திருந்து திறம்பட செயல்பட முடியும். அதற்கு மேல் ஆற்றல் வரவரக் குறைந்து போய்விடும் என்று தற்போதைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுகின்றனர்.

நான்காண்டுகளுக்குள்ளே ஒரு மனிதனின் ஆற்றலும் ஆண்மையும் முன்பிருந்ததைவிட நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே வருகின்றது என்கின்ற தத்துவத்தினைக் கொண்டுதான். நான்காண்டுகளுக்கு ஒரு முறை பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்தப் பெற்றன என்பதற்கும் ஒரு கதை கிரேக்கத்தில் உண்டு.

நம் நாட்டிலே சிவபெருமானைப் போல, சகல விதங்களிலும் தலைமை பீடம் ஏற்றிருக்கும் கடவுளாக சியஸ் என்ற கடவுள் பெருமைப்படுத்தப்படுகிறார். அங்கே சீயஸ். என்ற கடவுளுக்கும், கரானாஸ் என்ற கடவுளுக்கும் தலைமை பதவி காரணமாகப் பெரும் சண்டை ஏற்பட்டதாம். அந்தப் போரில், தன் பகைவனான கரானாசைக் கொன்று வெற்றி பெற்றதற்காக, இம்மாபெரும் விளையாட்டுப் பந்தயங்களைத் தொடங்கி வைத்தாராம் என்று ஒரு கிரேக்க புராணம் கூறுகிறது.

இதோ இன்னொரு புராணக்கதை, கடவுளை பற்றிய நிகழ்ச்சிகள்தான் என்றாலும், அவைகளுக்கும் காலவரையரையும் வைத்திருக்கின்றார்கள்.

சுமார் கி.மு. 1253ம் ஆண்டு தலைமைக் கடவுளின் தாங்கொணா கோபத்திற்கு ஆளாகி, சாபத்தை ஏற்றுக் கொள்கிறான் ஹிராகிலிஸ் என்பவன், கடவுளுக்கு வந்தது கோபம். அவரிட்ட கட்டளையோ மிகவும் மட்டமானதாக இருந்தது. கிரேக்கத்திலுள்ள எலிஸ் என்ற இடத்திற்குச் சென்று, தவறுக்குரிய தண்டனையை அனுபவி என்பதுதான் அவரது கட்டளை.

சீற்றத்தால் எழுந்த தண்டனையை சிரமேற் கொண்டு, சொல்லொணா சோகத்துடன், எலிஸ் நகரம் செல்லுகிறான். அந்த நாட்டை ஆளும் அகஸ் என்ற மன்னனைக் காணுகின்றான். வரவேற்ற மன்னன் தந்த வேலையோ... வெட்கம்! வெட்கம்! வீரன் ஒருவன் செய்யக்கூடிய வேலையா?

மந்தை மந்தையாகக் கட்டியிருக்கும் அரண்மனைக் குதிரைலாயத்தை சுத்தம் செய்கின்ற பணி, ஹிராகிலிஸ் மனம் நொந்து போனான். கேவலமான பணிதான். கடவுளுக்குப் பணிந்தாக வேண்டுமே? என்ன செய்வது! ஒப்புக் கொண்டான். அந்தப் பணியை சிறப்பாகச் செய்ய முடியாது என்பது அரசனின் வாதம். செய்து முடித்துவிடுவேன் என்பது ஹிராகிலிசின் எதிர்வாதம். முடிவு!

இருவருக்கும் போட்டியே வந்து விட்டது. ஹிராகிலிஸ் குதிரை லாயத்தை ஒழுங்காகக் கழுவித் தூய்மைப் படுத்தி விட்டால், மொத்த மந்தையில் பத்தில் ஒரு பகுதியை ஹிராகிலிசுக்கு மன்னன் தந்து விட வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. ஹிராகிலிசால் முடியாது என்ற நம்பிக்கையில் மன்னன் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். பணி தொடங்கிவிட்டது.

ஹிராகிலிசுக்கும் தேவ வல்லமை உண்டல்லவா? ஆகவே, அவன் ஒரு சாரியத்தைக் குறுக்கு வழியில் ஆற்றத் தொடங்கினான். வேறொன்றுமில்லை. எலிஸ் நகரத்திலே ஓடுகின்ற ஆல்பியஸ் என்ற ஆற்றைத் திருப்பிக் குதிரை லாயத்தில் விட்டு சுத்தமாகக் கழுவி, சுருக்கமாகத் தன் பணியை முடித்துக்கொண்டான்.

எவ்வளவு பெரிய குதிரைக் கொட்டில்! எத்தகைய மாபெரும் வேலை? இவ்வளவு எளிதாக ஆற்றைத் திருப்பிவிட்டு, காரியத்தை முடித்துக் கொண்டானே என்ற கோபம் ஒரு பக்கம்! போட்டியின் நிபந்தனையின் படி, பத்தில் ஒரு பாகம் மந்தைகளைப் பிரித்துத் தர வேண்டுமே என்ற பேரிடி இன்னொரு பக்கம். அரசனாயிற்றே! அநியாயமாக விவாதம் செய்தால் ஆதரிக்க ஆள் இல்லாமலா போகும்!

மன்னன் மறுத்தான், ஹிராகிலிஸ் செய்தது தவறு என்று ஆரவாரம் செய்தான். அங்கு வந்த ஆல்பியஸ் ஆற்றினால் குதிரை லாயம் முழுவதும் நனைந்து, சேறும் சகதியும் போல மாறிவிட்டது. செய்த முறை தவறு. இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை அள்ளிக் கொட்டினான். வேலை செய்த வீரனால் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோபத்தின் சிகரமானான்.

வீரனும் மன்னனும் சண்டையில் இறங்கிவிட்டனர். பலவான் யார் என்ற போட்டிச் சண்டையிலே மன்னன் அகசை, மாவீரன் ஹிராகிலிஸ் கொன்று விட்டான். மந்தைகள் முழுவதையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அதோடு மட்டுமல்ல, மாபெரும் புகழ் வாய்ந்த மணி நாடாகிய எலிஸ் நாட்டிற்கும் தானே மன்னன் என்ற ஓர் அறிக்கையை விடுவித்து, மகுடத்தையும் சூட்டிக்கொண்டான்.

தவறு செய்யப்போய், தண்டனை பெற்றுத்தானே மண்ணுலகத்திற்கு வர நேர்ந்தது! வந்த இடத்திலே இன்னொரு குற்றம். குற்றத்திற்குத்தண்டனை குதிரை லாயம் கழுவுவது. இன்னொரு குற்றத்திற்கு ஏற்றமிகு மன்னன் பதவி, அவனால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை, அவனுக்கென்று மனசாட்சி ஒன்று இருக்கிறதே! குத்திக் காட்ட ஆரம்பித்துவிட்டது.

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும்! மனதுக்குள்ளே இடிக்கும் மனச் சான்றுக்கு அமைதி கொள்ளுமாறு காரியம் செய்ய வேண்டும்! அதே நேரத்தில் தான் பெற்ற பெற்றியை, தலைமைப் பேற்றைத் தரணிக்கும் உணர்த்தவேண்டுமே! எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து ஒரு பணியைத் தொடங்கினான். அந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமாய், அமைந்ததுதான் இந்த ஒலிம்பிக் பந்தயம். ஆகவே ஒலிம்பிக் பந்தயம் ஹிராகிலிஸ் என்பவனால், தன் தந்தை சீயஸ் கடவுளுக்கு, ஒலிம்பியா என்ற இடத்திலேகோயில் கட்டி, தொடங்கப்பெற்றது என்பது புராணக்கதை. கேட்க சுவையாக இருக்கிறதல்லவா?

பல்வேறு புராணக் கதைகள் படிக்கவும் கேட்கவும் சுவையாக இருந்தாலும், உலகத்தில் ஒலிம்பிக் பந்தயம் என்ற ஒன்று இருந்தது, நடந்தது என்ற உண்மையை உலகினர் ஒத்துக்கொண்டார்கள். நான்காண்டகளுக்கு ஒரு முறைதான் அப் பந்தயங்களும் நடந்தன என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தாமல், நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஏன் நடத்தப்பெற்றது? என்று உங்களைப் போலவே எல்லோரும் கேட்கின்றனர். அதற்கும் ஒரு கதையை ஆதாரமாக வைத்திருக்கின்றனர். அந்தக் கதையையும் பார்ப்போமா!

தாய்தான் குடும்பத்திற்குத் தலைமைப் பதவி ஏற்று, வழி நடத்திக் கொண்டிருந்த காலம் அதுவாக இருக்கலாம். இல்லையென்றால், ஒரு கூடுடத்திற்கு பெண் ஏன் தலைவியாக இருக்க வேண்டும்? அந்தத் தலைமைப் பதவியை ஏற்பவள் - இரண்டு தகுதிகளில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்று அவள் அந்தக் கூட்டத்தினருக்கான தலைமைப் பெண் பூசாரியாக இருக்க வேண்டும். அல்லது பதவிக்கு வருவதற்கு முன்னர், பெண்களுக்கு என்று நடக்கின்ற புனிதமான பந்தயங்களான ஓட்டப் பந்தயங்களில், அல்லது சில சமயங்களில், மல்யுத்தம் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இப்படியாகத் தலைமைப் பதவிக்கு வந்து ராணியாக முடிசூட்டிக்கொண்டு விடுவாள் ஒரு பெண்.

ராணி என்றால் ராஜா வேண்டுமல்லவா? அவ்வாறு ராணிக்குக் கணவனாக வரத் தகுதியும் யோக்கிதையும் வேண்டாமா அந்தத் தகுதியைத் தந்தது விளையாட்டுப் பந்தயங்களே! மனிதர்களுக்கான ஓட்டப் பந்தயங்களில் வெற்றிபெற்ற முதல் வெற்றி வீரனே கணவனாகவும், மன்னனாகவும் ஆகக்கூடிய மாபெரும் வாய்ப்பைப் பெற்றுவிடுகிறான். விளையாட்டுப் போட்டிகளிலே வெற்றி பெற்ற பெண் ராணியாகவும், ஆண் அரசனாகவும் மாறி, அந்த மக்களை ஆள்கின்றார்கள்.

பெண் என்றால் சகல விதிகளும் பரிந்து பேசுமே! அக்காலத்திலும் அந்த முறைதான் இருந்திருக்கிறது. ஒரு முறைப் பட்டத்திற்கு வந்துவிட்ட ராணி, தன் வாழ்நாள் முழுதும் ராணியாகவே இருப்பாள். இறப்பாள். ஆனால், ராஜாவாக வந்தவனுக்கு? அங்கேதான் ஆண் பட்டவேதனை மலிந்து கிடக்கிறது.

ராஜாவாகப் பதவி ஏற்றவனுக்குரிய காலம். 49 அல்லது 50 முழுநிலாக் காலம். அதாவது, அவன் 50 பௌர்ணமியைப் பார்க்கலாம். அதுவரை அரண்மனையின் சுகத்தை, அழகியின் துணையை, அரச பதவியின் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். சுகிக்கலாம். அந்த காலம் முடிந்த பிறகு, மீண்டும் ஒரு விளையாட்டுப் பந்தயம் நடக்கும். அந்தப் பந்தயத்தில், அரசனும் கலந்துகொள்வான். மற்றக் கட்டிளங் காளையர்களும் பங்கு பெற்றுப் போட்டியிடுவார்கள்.

அந்தப் போட்டியிலே வெற்றி பெறுகின்ற வீரனுக்குக் கிடைக்கக்கூடிய பரிசோ, பெறற்கரிய பரிசுதான். ஆமாம். அந்த வீரனுக்கு அரச பதவியும் கிடைக்கும். அந்தப்புரத்து ராணியும் கிடைப்பாள். என்ன? முன்னே இருந்த மன்னன் என்ன ஆனான்? போட்டியிலே அவன் வெற்றி பெற்றால் மீண்டும் மன்னர் பதவியும், ராணிக்குக் கணவர் என்ற உரிமையும் கிடைக்கும். வெற்றிபெற்றவன் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வான். அந்த வீரனுக்கு ராணி மாலையிடுவாள். மனைவியாவாள், மகுடம் அவன் தலையில் சூட்டப்படும்.

தோற்ற அரசன் கதியோ அதோ கதிதான். தலைமைக் கடவுள் இருக்கும் பீடத்திலே அவன் தலையை வைக்கச் செய்து துண்டித்துவிடுவார்கள். ஆமாம். பலிபீடத்திலே மரணம் அடைவதுதான் தோற்ற அரசனுக்குரிய தண்டனை. சில சமயங்களில், அவனைக் கொண்டுபோய் மலை உச்சியில் நிறுத்திக் கீழே தள்ளி விடுவார்கள். அறிவுள்ள அரசன், தன் முதுகில் பாராசூட்டை யாருக்கும் தெரியாமல் கட்டிக்கொண்டு மலையிலிருந்து கீழே விழும்போது, தப்பித்துக்கொண்டு விடுவான். ஆகவே மரண தண்டனை நிச்சயம் என்று தெரிந்தும் வீரர்கள் போட்டியிட்டனர்.

ஆனால், 49 அல்லது 50 முழு நிலாக் காலத்திற்குப் பிறகு, ராணியானவள் கணவன்மார்களை மாற்றிக் கொண்டேயிருந்தாள். ஆமாம், அவளிருக்கும் காலம் வரை அவளே ராணி. நம் புராணத்தில் கூட, இந்திரனாக யார் வந்தாலும், இந்திராணி ஒருத்தியே இருப்பாள் என்று இருக்கிறதே! அதே போல்தான்.

அந்தக் கால வரையறைதான் (49 அல்லது 50 பௌர்ணமி காலம்) 48 மாதங்கள் கிட்டத்தட்ட ஆகிறது. என்ற அடிப்படையில் நான்காண்டுகள் என்று முடிவு கட்டியிருக்கின்றனர். அத்துடன், நான்கு ஆண்டுகளுக்கு மேல், ஓர் ஆண் மகனால் உடல் திறனை முன்போல கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நம்பிக்கையில்தான், நான் காண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பந்தயம் நடந்திருக்கிறது.

இந்தக் கதை உண்மையோ அல்லது கட்டுக்கதையோ, நமக்குத் தெரியாது. இருந்தாலும், ஒரு மனிதனின் ஆற்றல் நான்காண்டுகள் வரைதான் இருக்கும். இதற்குப் பிறகு குறையும் என்ற உடல் தத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரேக்கர்கள் இந்தப் பந்தயத்தை நடத்தி மகிழ்ந்தனர் என்பது பொருந்தும்.

ஆனால், மிலோவோ, இருபத்தி நான்கு ஆண்டுகள் தன் தேகத்திறனில் கிஞ்சித்தும் குறையாமல், வெஞ்சமர் புரிந்து வெல்லும் அஞ்சா நெஞ்சினனாக, ஆற்றல் மிகுமறவனாக வாழ்ந்திருக்கின்றான். அத்தகைய ஆற்றல் மிகு வீரனைப் பற்றி அற்புதமான பல, கதைகள் அந்நாளில் உலவி வந்திருக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் மறைந்துபோன மல்யுத்த வீரர் கிங்காங் என்பவரை மாமிசமலை என்றே அழைப்பார்கள். அவர் சாப்பிடும் அளவை 100 முட்டை, பத்து கிலோ கறி என்பது போல ஆளுக்கு ஆள் அவ்வளவு இவ்வளவு என்று வித்தியாசமான அளவில் கூறி, மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துவார்கள். நம் காலத்து மல்யுத்த வீரர் நிலையே இப்படி என்றால், பயங்கர மல்யுத்தம் புரிகின்ற ஒலிம்பிக் பந்தய வீரனது உணவு அளவைப் பற்றி எவ்விதம் கூறியிருப்பார்கள் என்பதற்குக் கீழே விளக்கப்பட்டிருக்கும் உணவின் அளவே சான்றாக அமையும்.

வீரன் மிலோவின் அன்றாட உணவானது 20 பவுண்டு கறி, 20 பவுண்டு ரொட்டி. 18 பின்ட் ஒயின் என்பதாகக் குறிப்பிடுகின்றார்கள். அவனுக்கு இருந்தது வயிறா அல்லது ஏற்றம் இறைக்கும் சாலா என்று தான் நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

இதையும் மிஞ்சிவிடுவது போல இன்னொரு உணவின் அளவு பாருங்கள், ஒலிம்பிக் பந்தயம் நடக்கின்ற நாளில், நான்கு வயதுள்ள கன்றுக்குட்டி ஒன்றைத் தோளில் போட்டு சுமந்து கொண்டு, ஒலிம்பியாவில் உள்ள பந்தயம் மைதானம் முழுவதையும் சுற்றித் திரிந்து வருவானாம். பிறகு, அதே நாளில் அதைக் கொன்று, அதை ஒரே நாளில் தின்று தீர்த்து விடுவானாம். அப்படியென்றால் அவன் உணவு உட்கொள்ளும் ஆற்றலையும் சக்தியையும் பாருங்களேன்!

இப்படி உண்பவனுக்கு இராட்சச பலம் இருக்காதா? ஆமாம்! அவனது தேக பலத்தையும் மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகத்தான் கூறியிருக்கின்றார்கள்.

ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, புனித ஆலிவ் மலர் வளையம் பரிசு உண்டு. பாராட்டு உண்டு. புகழ் உண்டு என்று முன் கதையில் விவரித்திருந்தோம் அல்லவா! அதையும் விட, இன்னொரு உரிமையை அந்த வெற்றி வீரர்களுக்கு அளித்திருந்தார்கள். அதாவது தங்களைப் போல சிலை ஒன்றைச் செய்து, ஒலிம்பியா மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம் என்பதுதான்.

சிலை அமைத்துக் கொள்வது என்பது சாதாரண வசதி படைத்தவர்களால் முடியாத காரியம். ஏராளமான நிதி வசதியுள்ளவர்கள் அல்லது அவ்வீரன் வாழ்கின்ற நகரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி உதவி செய்தால்தான் உண்டு. வீரன் மிலோ எவ்வாறோ தன்னைப் போல சிலை ஒன்றை செய்து முடித்து, தன் நகரத்திலிருந்து ஒலிம்பியா மைதானம் வரை தானே தூக்கிச் சென்று வைத்து மகிழ்ந்தானாம். அப்படியென்றால் அவனது ஆற்றலும் மனோதிடமும், எத்தகையதாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

அவன் உடல் வலிமையைப் புகழ்ந்து பேச வேறு பல கதைகளையும் கூறியிருக்கின்றார்கள். அதையும் பார்ப்போம்.

மிலோ தன் உள்ளங்கையில் மாதுளங்கனி (Pomegranate) ஒன்றை வைத்து மூடிக் கொள்வானாம். அதனை எத்தகைய சக்தி வாய்ந்தவன் வந்து அவன் மூடிய கையைத் திறக்க முயற்சித்தாலும், அவனது மூடிய கையை திறக்கவே முடியாதாம். இதில் என்ன விசேஷம் என்றால், இந்தக் கைமூடி திறக்கும் திறமையான போராட்டத்தில், மிலோவின் உள்ளங்கைக்குள் இருக்கும் மாதுளங்கனியை கொஞ்சங் கூட கசங்காமல் காப்பாற்றி வைத்துக் கொள்கின்ற அதிசயமான சக்தியை படைத்தவனாக விளங்கியிருக்கிறான் மிலோ.

கை விரல்களின் வலிமைக்கு ஒரு கதை என்றால், கடிய சுமைதாங்கும் கால்களுக்கும் ஒரு கதை விடாமலா இருப்பார்கள்! அதையும் கேளுங்கள்.

எண்ணெய் அதிகமாக பூசப்பெற்ற வழ வழப்பு நிறைந்த ஒரு பெரிய இரும்புத் தட்டின் மீது (Discus) அவன் ஏறி நின்று கொள்வானாம்! ஆள் நிற்கும் பொழுதே நிலையாக நிற்க முடியாமல் வழுக்கி விழச் செய்யும் தன்மை வாய்ந்த தட்டின் மீது ஏறி நின்று கொண்டிருக்கும் மிலோவை, எத்தகைய பலவான் வந்து பிடித்துப் பிடித்துத் தள்ளினாலும், அவனை அந்தத் தட்டிலிருந்து அப்பால் கீழே தள்ளிவிட முடியாதாம். பயங்கரமாக வழுக்கும் தட்டின் இடத்திலும், கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்ற காலூன்றும் சக்தியைக் கொண்டிருந்தான் மிலோ.

முன்னர் நாம் கூறியவாறு போட்டிக் களமான பிதியன் பந்தயங்களில் வெற்றி வீரர்களுக்குப் பரிசாக மலர்வளையத்தால் முடிசூட்டுவதுடன் ரிப்பனையும் மாலையாக அணிவித்துப் பாராட்டுவதும் உண்டு. அந்த ரிப்பனை தன்முன் நெற்றியில் படுமாறு தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு விடுவானாம். பின்னர், தனது நெற்றி நரம்பினைப் படைக்கச் செய்து, கட்டியிருக்கும் ரிப்பனை அறுத்தெறிந்து விடும் ஆற்றல் படைத்தவன் என்றும் கூறியிருக்கிறார்கள்.

மாபெரும் மல்யுத்த வீரனாக வாழ்ந்தவன் மிலோ, சர்வ வல்லமை படைத்த விளையாட்டு வீரனாக மட்டு மல்லாமல், தன் தாய் நாடு காக்கும் தியாக சீலனாகவும்

விளங்கியிருக்கிறான். ஆண்மை மிக்க அரும்மறவர்கள் வாழும் நாடு, அனைத்து நலன்களையும் நிறைத்தல்லவோ வைத்திருக்கும்! அந்த லட்சியத்தில் தானே கிரேக்க நாடு, விளையாட்டுப் பந்தயங்களைப் பிரபலமாக நடத்திக் கொண்டு வந்தது!

கி.மு. 512ம் ஆண்டு, சிபேரிஸ் என்ற நாட்டுடன் அவனது நாடு போரிட நேர்ந்தது. அவனது நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த, மிலோ படைவீரர்கள் மத்தியிலே நின்று உற்சாகப் படுத்தினானாம். ஹிராகிலிஸ் என்பவன் வைத்திருந்த கதைபோல (பீமன் கதை போல) இவன் ஒன்றைச் செய்து எடுத்துக் கொண்டு, ஒலிம்பிக் பந்தயத்தில் பெற்ற வீர முடியை ஒய்யாரமாக அணிந்து கொண்டு, அந்த நாட்டுப் படைத் தளபதி போல, வீரர்களிடையே புகுந்து சென்று, உற்சாகமாகப் பேசி ஊக்கப்படுத்திப் போரிடத் தூண்டினான். அந்த மாவீரனைப் பார்த்த போர் வீரர்களும், மனதில் வீரம் பொங்கப் போராடி வெற்றி பெற்றார்கள். உயிருக்கும் அஞ்சாத வீரனாக நடைபோட்டவண்ணம் மிலோ வீரர்களை ஊக்குவித்திருக்கிறான்.

(நமது நாட்டில் சீனாவுடன் போர் நடந்தபோது, நமது இராணுவ வீரர்கள் மத்தியில் சினிமா நடிக நடிகைகள் சென்று, ஆடிப்பாடி உற்சாகம் ஊட்டியதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.)

வலிமைபெற்ற வீரன் ஒருவனுக்கு எங்கு சென்றாலும் பெருமையும் புகழும் உண்டு என்பதற்கு மிலோ சான்றாக வாழ்ந்திருக்கிறான். கணிதம் பயின்றவர்களுக்கு பித்தகோரஸ் என்னும் தத்துவ ஞானியின் பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும், கணித சாத்திரத்தில் வல்லவர் அவர். அவரது மகள் மியூவா (Muia) என்பவளை மிலோ தன் மனைவியாக்கிக் கொண்டிருக்கிறான்.

இவர்களுக்கு வாரிசாகப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மங்கையான அந்தப் பெண்ணை மணம் புரிந்து கொள்ள டெமாசீட்ஸ் எனும் மருத்துவன் வந்தான். அவன் அந்நாட்டு அரசருக்கு மருத்துவம் செய்பவன். புகழ்பெற்ற மருத்துவன், அந்த நாட்டு வழக்கப்படி, பெண் வீட்டாரே மணமகனுக்கு டௌரிபோல வரதட்சணையாகப் பணம் தந்து எல்லா செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், வீரன் மிலோவின் நிலை வேறுவிதமாக அமைந்திருந்தது. மணமகனே மிலோவுக்கு ஏராளமான பணத்தைக் கொடுத்து, அவனது மகளை மணம் புரிந்து கொண்டான். மிலோவின் புகழ், அவனது சமுதாய மரபையே மாற்றி அமைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்.

இத்தகைய வீரனின் இறப்பை, சாதாரண மரணமாகக் கூறாமல், வீரமரணமாகவே வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கின்றார்கள். காட்டில் ஒரு நாள் மிலோ தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது வழியிலே வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதியில் சிறுபிளவு ஒன்று தெரிந்ததைப் பார்த்துவிட்டு, அதில் கையை விட்டுப் பெரிதாகப் பிளந்திட முயற்சித்தானாம். வலிமை பொருந்திய வீரன், தன் சக்தியை வேண்டாத இடத்திலே சென்று பரிட்சித்துப்பார்க்கப்போய், அடிமரத்தைப் பிளந்து கொண்டே போகும் பொழுது, திடீரென்று பிளவின் சக்தி திரும்பவே, எதிர்பாராத விதமாக பிளவின் இடையிலே மாட்டிக் கொண்டானாம்.

பிரிக்கப்பட்ட அடிமரம் படிரென்றுசேர்ந்து கொள்ளவே, அதன் இடையில் பிடிபட்டுப்போன மிலோவால் வெளிவர முடியாமல் மாட்டிக் கொண்டு விட்டான். காட்டிலே தனியன். கதறினாலும் துணைக்கு யார் வருவார்! அவன் அலறலைக் கேட்டு ஓநாய் கூட்டம் தான் வந்ததுபோலும், ஓநாய் கூட்டத்திற்கு அவன் இரையாகிப்போனான் என்பதாக அவன் முடிவைக் கூறுகின்றார்கள். பலமுள்ளவன், பயனற்ற காரியம் ஒன்றைச் செய்து பலியாகிப் போனான் என்பதற்கு உதாரணமாக, மிலோவின் ஜீவியம் முடிந்திருக்கிறது.

ஆண்மையும் ஆற்றலும் மிக்க வீரனான மிலோ தனது வயதான காலத்திலும் வீதியிலே நடந்து வருகின்ற பொழுது, பார்க்கின்ற இளைஞர்கள் எல்லோரும் மிலோவைப் போல தாங்களும் வரவேண்டும். வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம். அத்தகைய கவர்ச்சி மிக்க வீரனாக இருந்தான் மிலோ. அவ்வாறு ஆசைப்பட்டவர்களில் ஒருவன் பெயர் பயிலஸ். இனி மிலோவைக் குருவாகப் பாவித்து தன்னை வளர்த்துக் கொண்ட பயிலஸ் என்பவனின் கதையைக் காண்போம்.