அனிச்ச மலர்/21
தோழிகளை தாஜ்கோரமண்டலுக்கு அழைத்துச் சென்று உபசரித்துவிட்டுத் திரும்பிய தினத்தன்று இரவு சுமதி தயாரிப்பாளர் அலுவலகத்தில் தங்குவதாக இல்லை. மகாலெட்சுமி தெருவிலுள்ள யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போய்விடுவதாகத்தான் இருந்தாள். ஆனால் கன்னையாதான் அவளைத் தடுத்தார். மேரியும் வற்புறுத்தினாள். “கொஞ்ச நேரத்திலே என்னோட ஃபைனான்ஷியர் ஒருத்தன் இந்திக்காரன் இங்கே வரான், ஒரு சின்ன லிக்கர் பார்ட்டி இருக்கு நீயும் மேரியும்கூட அதுக்கு இருக்கணும். வர்ரவன் நான் கேட்கிறப்போ எல்லாம் லட்சம் லட்சமா எனக்குக் கடன் கொடுக் கிறவன். நீங்கள்ளாம் கூட இருந்து சுமுகமாப் பழகினிங் கன்னா அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். கொஞ்சம் தயவு பண்ணனும்” என்றார் கன்னையா. சுமதியால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை. கன்னையாவே கெஞ்சிக் குழைந்துதான் அவளிடம் அதைக் கேட்டி ருந்தார்.
கல்லூரியில் முதன் முதலாக மேரி கொஞ்சம் கொஞ்சமாக அவளை எப்படி கடன்பட வைத்து வசப் படுத்தினாளோ அப்படியே அதே முறையில் கன்னை யாவும் அவளை மெல்ல நன்றிக் கடன்பட வைத்து வசப்படுத்தி விட்டார். அவளால் எதையும் முகத்தை முறித்தது போல மறுக்க முடியவில்லை, கன்னையா அவளை அடிமைபோல் ஆண்டார். அந்த இந்திக்காரனோடும் கன்னையாவோடும் மேரியோடும் சேர்ந்து அவளும் குடிக்க வேண்டியாதாயிற்று. கார்ச் சவாரியைப் பணப் பகட்டைத் தன்மீது அவசர அவசரமாகத் திணிக்கப் பட்ட நட்சத்திர அந்தஸ்தை - எதையும் இப்போதும் இனிமேலும் சுமதி இழக்கத் தயாராயில்லை. அவற்றை எல்லாம் பகிரங்கமாக இழக்காமல் இருப்பதற்காக வேறுசில விஷயங்களை ரகசியமாகவாவது இழக்கவும் அவள் தயாராகிவிட்டாள். ஒரு சினிமாத் தயாரிப்பாள ரின் பெரிய காரில் ஜவுளிக் கடை வாசலில் போய் இறங்கியபோது அன்று பகலில் முன்பு தன்கூடப் படித்த கல்லூரி மாணவிகளும், கடைக்காரரும் காண்பித்த மரியாதை அவளுக்கு நினைவு வந்ததது. சுமதி பல விஷயங்களை விட்டுக் கொடுக்கவும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் புரிந்து கொண்டு விட்டாள். அவள் மாறுதல்கள் கன்னையாவுக்கும் ஓரளவு புரிந்துவிட்டிருந்தன.
பாதிப் பார்ட்டியிலேயே மேரியும், கன்னையாவும் ஒருவர்.பின் ஒருவராக நழுவிவிட்டார்கள்; அந்த சிந்தி ஃபைனான்ஷியரும், சுமதியும் மட்டுமே தனியாக விடப்பட்டார்கள். அந்தப் பணக்காரர் வந்ததும் அவரை அறிமுகப்படுத்துகிறபோதே, 'சுமதி ! இவருதான் நீ ஹீரோயினா நடிக்கப்போற படத்துக்கு ஃபைனான்ஸ் பண்றவரு, உன்னோட ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அன்னிக்கு முதல் காஷ் ஷீட், அதான் அந்தக் காபரே ஸீன் எடுத்தமே, அப்பக் கூட வந்து உன்னைப் பார்த்திருக்காரு. நீதான் இன்னிக்கு இவரை எண்டர்டெயின் பண்ணனும். அன்னிக்கே உன் அழகைப் பார்த்து, சார்மிகர்லின்’னு திரும்பத் திரும்ப எங்கிட்டப் புகழ்ந்துக் கிட்டிருந்தாரு” என்று சுற்றி வளைக்காமல் சுமதியிடம் நேராகவே கூறிவிட்டார் கன்னையா. சுமதிக்கும் அவர் என்ன கூறுகிறாரென்று புரிந்துவிட்டது.
மேரியும் கன்னையாவும் - சுமதியையும் அந்தப் பணக்காரனையும் ஏ.ஸி. ரூமில் தனியே விட்டுவிட்டு வெளியேறிய போது இரவு பதினொன்றரை மணி. அந்த சிந்திக்காரன் சுமதியிடம் ஆங்கிலத்தில் பேசினான். எங் கெங்கெல்லாம் 'எஸ்' என்ற எழுத்தை உச்சரிக்க வேண் டுமோ அங்கெல்லாம் எஜ் என்று அதை உச்சரித்தான். ஸோதட் என்பதற்குப் பதில் ஜோதட் என்றும், கர்வ்ஸ் என்பதற்குப் பதில் கர்வ்ஜ் என்றும் அவன் பேசியது கேட்க வேடிக்கையாயிருந்தது.
கன்னையா தனக்கு அறிமுகப்படுத்திய பெண்கள் எல்லோரினும் சுமதிதான் அழகானவள் என்று நற்சான்று வழங்கியபடியே அவளைத் தொட்டுத் தனது காமச் சேஷ்டைகளை ஆரம்பித்தான் அவன். சுமதிக்கு இதயம் மரத்துப் போயிருந்தது. உடம்பு மட்டுமே ஒரு மிஷின் மாதிரி இயங்கியது. ஓரளவு குடித்துச் சுயநினைவு தடு மாறியிருந்தாலும் முதலில் தான் காஷ்மீரில் கன்னையா விடம் இழந்ததை இன்று மற்றொருவனிடம் இழக்கிறோம் என்று மெல்லியதாக ஒரு மனத்தைப் பிசையும் ஞாபகம் உள்ளுற இழையோடத்தான் செய்தது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அன்று நள்ளிரவு இரண்டரை மணிக்கு அந்த இந்திக்காரன் போனபின் சுமதி படுக்கையில் தளர்ந்து அயர்ந்து கிடந்தாள். மூன்று மணிக்கோ மூன்றரை மணிக்கோ கன்னையா தன்னருகே வந்து படுத்ததுகட்ட அவளுக்குத் தெரியாது; நடுவே ஒருமுறை ஏதோ கைகள் தன்னை இறுகத் தழுவியபோதுகூட இருளில் இந்தி பைனான் வியர் இன்னும் போகவில்லை போலிருக்கிறது என்று தான் அவள் நினைத்தாள். பாதி அசதி-பாதி போதை யில் இருந்த அவள் ஏதோ ஒரு ஞாபகப் பிசகில் அந்த இந்திக்காரனையே திரும்பவும் எண்டர்டெயின் செய்வ தாக நினைத்துக் கொண்டு கன்னையாவை எண்டர் டெயின் செய்திருந்தாள். விடிந்த பின்புதான் அவளுக்கே அது தெரிந்தது. காலை எட்டரை மணிவரை அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. உடலில் ஒரே அயர்ச்சி, வலி. அடித்துப்போட்ட மாதிரித் துரங்கினாள். எட்டரை மணிக்கு அவளைத் தொட்டு எழுப்பிக் கன்னையாவே பிளாஸ்கிலிருந்து காபியை ஊற்றிக் கொடுத்தார். டிபன் எத்தனை மணிக்கு வேணும் என்று ஒரு வெயிட்டர்’ கேட்பதுபோல அவளிடம் மரியாதையாகக் கேட்டார்.
"நம்ம போஜ்வானிக்கு ஒரே குஷி ! உன்னை மாதி ரிப் பொம்பளை உலகத்திலேயே கிடையாதுங்கிறான். போறப்போ இந்த கவரை உங்கிட்டக் கொடுக்கச் சொல் லிட்டுப் போனான். அவன் இரண்டரை மணிக்குப் போனப்புறம் உனக்குத் துணையா இருக்கட்டும்னு நான் இங்கே வந்து படுத்துக்கிட்டேன்.”
உடனே சுமதி அந்தக் கவரை வாங்கிப் பிரித்தாள். அதில் புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுகளாக நிறைய இருந்தன. அவற்றை அவள் எண்ணவில்லை. ஒரு பார்வையில் ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் என்று தோன்றியது.
"பாத் ரூம்லே நல்ல வெந்நீர் ரெடியாயிருக்கு. வெந்நீர்லே குளி: உடம்புக்கு இதமா இருக்கும். பாத் 'டப்லே ஸெண்டெட் ஹாட்வாட்டர் உனக்காக ரொப்பியிருக்கேன். இந்த ஸெண்ட்கூட நம்ம ஃபைனான்ஷியர் போஜ்வானி ஹாங்காங்கிலிருந்து கொண்டாந்ததுதான்” என்றார் கன்னையா. சுமதி பதிலே சொல்லவில்லை. ஃபோன் மணி அடித்தது. கன்னையா எடுத்தார் "உனக்குத் தான் சுமதி ! யாரோ யோகாம்பாள் அத்தை வீட்டிலே இருந்து கூப்பிடறாங்களாம்” என்று சொல்லி ஃபோனை அவளிடம் நீட்டினார் கன்னையா. சுமதி ஃபோனை வாங்கினாள்.
“மன்னிச்சுக்குங்கோ மாமா! திடீர்னு இங்கே ராத்திரியும் ஷல்ட்டிங் இருக்குன்னுட்டாங்க வர முடி யலே. நான் இப்போ கொஞ்ச நாழியிலே முடிஞ்சா அங்கே வரேன்” என்று ஃபோனில் பதில் சொன்னாள் சுமதி. ஃபோனை வைத்ததும், "மேரி இருக்காளா, வீட்டுக்குப் போயிட்டாளா?” என்று அவள் கன்னை யாவைக் கேட்டாள்.
"அவ ராத்திரியே வீட்டுக்குப் போயிட்டா சுமதி: அங்கே கிளப் ஆளுங்கள்ளாம் வந்திருப்பாங்களே.... வேணா இப்ப ஃபோன்ல அவளைக் கூப்பிட்டுக் குடுக்கட்டுமா ?”
‘'வேண்டாம் ! குளிச்சிட்டு வந்தப்புறம் நானே அவகிட்டப் பேசிக்கிறேன். அவசரம் ஒண்னுமில்லே.” நாளடைவில் சுமதி பலவற்றை ஜீரணித்துக் கொள்ளப் பழகிவிட்டாள் என்பது கன்னையாவுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் தன்னோடு கலகலப்பாகச் சிரித்துப் பேசிப் பழகாமல் அவள் உள்ளேயே வேகிறாள் என்பது ஒரளவு அவரை வருத்துகிற விஷயமாகவும் இருந்தது. அதனால் அவர் வேறு சில தந்திரங்களை மேற் கொண்டார். சுமதி தனியாக இருக்கும்போது அவளுக்கு வேறு மனப்பான்மைகள் தலையெடுத்து ரோஷம் வந்து விடக் கூடாது என்பதற்காக அவள் வேறு வேறு பெருமி தங்களை அடையும்படி செய்தார் அவர். பத்திரிகைக் காரர்களைத் தாமே ஏற்பாடு செய்து அவளைப் பேட்டி காணவும் அவள் படங்களைப் பிரசுரித்துப் புகழவும் வகை பண்ணினார். யாரோ ஒரு மூன்றாந்தரச் சினிமாப் பத்திரிகைகாரனைக் கூப்பிட்டுச் சுமதியின் வாழ்க்கை வரலாற்றை அவளிடமே கேட்டு எழுதி வெளியிடச் செய்தார். எல்லாத் தினசரிகளிலும் சினிமாப் பகுதி வெளிவருகிற தினத்தன்று எப்படியும் சுமதியின் கவர்ச்சிப் படம் ஒன்று தவறாமல் வெளிவருமாறு செய்து கொண்டிருந்தார். தன்னுடைய கைப்பாவையாக அவள் பயன்பட வேண்டுமென்பதற்காக அவளைப் புகழேணி யின் உச்சிக்குத் துரக்கிவிடத் தான் ஏற்பாடுகள் செய்வ தாக அவளே அறியும்படி நடந்து கொண்டார். நீ என்னிடம் வந்திராவிட்டால் இந்தப் பணமும் பவிஷ-ம், பகட்டும் புகழும் உனக்கு வருகிற விதத்தில் வேறு யாராலும் செய்திருக்க முடியாது?’ என்று நிர்ப்பந்தமாக அவளுக்கு அறிவுறுத்துவதுபோல நடந்துகொண்டார் அவர். இன்னொருபுறம் மேரியின் மூலமாகப் பெர்மி எலிவ் ஸொஸைட்டி பற்றிய ஆங்கில நூல்கள், நாவல்கள் ஆகியவற்றைச் சுமதிக்கு நிறையப் படிக்கக் கொடுத்தும், பேசியும், கற்பு, புனிதம் பற்றிய அவள் மனநிலைகளைக் கரைத்துவிடவும் முயன்றார். சுமதியை மிகச் சில மாதங்களிலேயே குடிப்பதற்கும் போதை தரும் எல்.எஸ்.டி., மார்ஜுவானா மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் சகஜமாகப் பழக்கிவிட்டார். பணத்தாலும் செளகரியங்களாலும், அவளைக் குளிப்பாட்டினார். சலிப்பின்றி அதைச் செய்தார். கன்னையா தாமே முயன்று நகரின் மிகப் பெரிய குழந்தைகள் கான்வென்ட் ஒன்றின் விழாவில் ஒரு பெண் மந்திரியின் தலைமையில் பரிசளிப்பதற்குச் சுமதியை அழைக்கச் செய்தார். அந்த மந்திரியம்மையாரும் சுமதியைப் புகழ்ந்து நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டு அப்புறம் அவள் பரிசளிப்பது பற்றிக் கூட்டத்தில் அறிவித்தார். அந்த விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களில் முதல் வரிசையிலேயே சுமதி முன்பு படித்த சிவசக்தி மகளிர் கல்லூரியின் பிரின்ஸிபால் அம்மாள், வார்டன் மாலதி சந்திரசேகரன் எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரேயே தான் மேடையில் வி.ஐ.பி.யாக அமர்ந்திருப்பதில் சுமதிக்கு கர்வமாகக்கூட இருந்தது. பரிசளிப்பு விழா முடிந்ததும் சுமதியின் சார்பில் அந்தக் கான்வென்டிற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையாகத் தருவதாக அங்கேயே அந்தக் கூட்டத்திலேயே மந்திரி அம்மாளைவிட்டு அனெளன்ஸ் செய்யவைத்தார் கன்னையா. தானே கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்த புகைப்படக்காரனைக் கொண்டு சுமதி குழந்தைகளுக்குப் பரிசளிக்கும் காட்சியையும், மந்திரி அம்மாளின் அருகே அழகு மயிலாக அமர்ந்திருக்கும் காட்சியையும், பல படங்கள் பிடித்துக்கொள்ளச் செய்தார். மறுநாள் காலையே பத்திரிகைகளில் அந்தப் படங் களையும் சுமதியின் தாராள மனப்பான்மையையும் பற்றிப் பிரசுரிக்கச் செய்தார்.
சுமதி புகழாலோ, பூரிப்பாலோ அல்லது கன்னையா வோடு, மேரியோடு சேர்ந்து குடிக்கப்பழகியதாலோ சிறிது சதை போட்டுப் பருத்தாள். கொடி போலிருந்த அவள் மொழுமொழுவென்று ஆகி அழகாக உப்பியிருந்தாள். கன்னையா விளம்பரம் செய்த அவள் கதாநாயகி யாக நடிக்கிற படம்தான் இன்னும் தயாராகவில்லை. அதன் விளம்பரங்கள்தான் புதுப்புது விதத்தில் வந்து கொண்டிருந்தன. கன்னையாவின் பண உதவியாளர் களில் பலர் சுமதி அவரிடம் இருக்கிறாள் என்பதாலேயே அவரை மாலை வேளைகளில் அடிக்கடி சந்திக்க வரத் தொடங்கினார்கள். அவருக்கு வேண்டியமட்டும் கடன் தரத் தயங்கிய சிலர் இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்தார்கள். சுமதி அவருடைய சக்தி வாய்ந்த முதலீடாக மாறியிருந்தாள். நடுநடுவே வேறு கம்பெனிகளின் படங்களின் சிறுசிறு வேடங்களில் அவளை நடிக்கவிடக் கன்னையா தயங்கவில்லை... ஆனால் எல்லாமே குளியலறைக் காட்சியாகவோ இரவு விடுதி நடனமாகவோதான் இருந்தன. முதலில் தான் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டாளோ அப்படியே ஒவ்வொரு தயாரிப்பாளரும் தன் உடல் வளப்பத்தையே காட்டும் காட்சிகளைத் தனக்குத் தருவது சுமதிக்குப் புரிந்துவிட்டது. படிப்படியாக மெல்லமெல்ல யோகாம் பாள் அத்தை வீட்டுக்குப் போவதைச் சுமதி விட்டு விட்டாள். அவர்களும் நாலைந்து முறை கேட்டுப்பார்த்து எச்சரித்துப் பார்த்துவிட்டு ‘நமக்கென்ன வந்தது ?’ எக்கேடு கெட்டு வேண்டுமானால் போகட்டும் என்று அவளைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டார்கள்.
அந்தச் சமயத்தில் ஒருநாள் சுமதியின் பேருக்கு ஒரு ரிஜிஸ்தர் தபால் மதுரையிலிருந்து வந்தது. கடிதத்தை அவளுடைய அம்மாதான் அனுப்பியிருந்தாள். நோட் டீஸோ என்று முதலில் சுமதி சந்தேகப்பட்டாள். அப் புறம் எதுவாயிருந்தாலும், வாங்கித்தான் பார்க்கலாமே? என்று துணிந்து கையொப்பமிட்டு அதை வாங்கிப் பிரித்த போது அது ஒரு நீண்ட கடிதமாக இருந்தது. ஏதோ கட்டுரைக்குத் தலைப்புப் போடுவதுபோல் ஒரு தாயின் கடைசி எச்சரிக்கை என்று அதற்குத் தலைப்பே போட்டி ருந்தாள் அம்மா. இதுதான் அநேகமாய் நான் உனக்கு எழுதுகிற கடைசிக் கடிதமாக இருக்கும் என்ற முதல் வாக்கியத்தோடுதான் அம்மாவின் கடிதமே ஆரம்ப மாகியது. அம்மாவின் அந்த நீண்ட கடிதத்தைப் படிக்கத் தொடங்கியபோது சுமதியின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.