பழைய கணக்கு/கலைமகளுக்குத் தமிழும் புரியுமே
உபயகுசலோபரி, சாங்கோபாங்கம், கரதலாமலகம், சிரக்கம்பம், நிர்மானுஷ்யம் போன்ற வடமொழிச் சொற்களை ஏராளமாகப் பயன்படுத்தி ஆனந்தவிகடனில் கதை கட்டுரைகள் வெளியிட்ட காலம் ஒன்று உண்டு.
பெரும்பாலும் பிராம்மண பாஷையில் பிராம்மண குடும்பங்களை வைத்து எழுதப்பட்ட கதைகளே அதிகம் வெளியாகும். கல்கி எழுதிய தியாக பூமி கதை கூட அப்படித்தான்.
கல்கி 1940-ல் விகடனை விட்டு விலகி, சொந்தப் பத்திரிகை தொடங்கியதும், இந்தக் கொள்கையை அடியோடு மாற்றிக் கொண்டார். கதை கட்டுரைகளில் பிராம்மணக் கொச்சையைத் தவிர்த்தார். தமிழ், தமிழர் என்ற உணர்வுக்கு ஊக்கம் தந்து கதை கட்டுரைகள் எழுதினார். ‘தமிழில் பாட வேண்டும்’ என்ற ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களுடைய தமிழிசை இயக்கத்துக்கு உறுதுணையாக நின்று கட்டுரைகள் எழுதி பலம் தேடித் தந்தார்.
இதனாலெல்லாம் கல்கி பத்திரிகையைத் தமிழர்கள் பத்திரிகை என்றும் விகடனை பிராம்மண சார்புள்ள பத்திரிகை என்றும் சொன்னார்கள்.
ஆனந்த விகடனுக்குப் பிறகு தொடங்கப் பெற்ற கல்கி பத்திரிகையின் ஸர்க்குலேஷன் ஒரு லட்சத்தைத் தாண்டி விட்ட போது விகடன் ஸர்க்குலேஷன் அறுபதாயிரம் எழுபதாயிரத்தைத் தாண்டிப் போக முடியாமல் ஒரு தேக்க நிலை இருந்து வந்தது.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு திரு வாசன் அவர்களை நான் சந்தித்த போது, “இதற்கு நீ என்ன காரணம் சொல்கிறாய்?” என்று கேட்டார்.
“விகடனில் பிராம்மண பாஷை அதிகமாக உள்ளது. அதை ஒழித்துக் கட்ட வேண்டும். உபய குலலோபரிக்குச் சீட்டுக் கொடுக்க வேண்டும். பிராம்மண கதாபத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு எழுதப்படும் கதைகளையும் குறைக்க வேண்டும். கார்ட்டூன்களில் வடநாட்டுத் தலைவர்கள் மட்டுமே வருகிறார்கள். தென்னாட்டுத் தலைவர்களில் ராஜாஜி மட்டுமே தலைகாட்டுகிறார். ஈ. வெ. ரா., அண்ணாதுரை போன்ற தமிழர் தலைவர்களும் இடம் பெற வேண்டும்” என்றேன்.
“விகடனை அதிகமாக வாங்கிப் படிப்பவர்கள் பிராம்மணர்கள் ஆயிற்றே! அவர்களை நாம் விட்டு விடமுடியுமா?” என்று கேட்டார்.
“நீங்கள் விகடனை எப்படி மாற்றினாலும் விகடன் வாசகர்கள் மாற மாட்டார்கள். அவர்கள் விகடனோடு பழக்கப்பட்டுப் போனவர்கள்” என்றேன்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு நான் விகடனில் சேர்ந்து வேலை செய்வதென்று முடிவாயிற்று.
அந்த ஆண்டும் வழக்கம் போல் விகடன் தீபாவளி மலர் வெளியிட்டார்கள். மலர் தயாரிக்கும் பொறுப்பை தேவனுக்குப் பிறகு ‘கோபு’விடம் ஒப்படைத்திருந்தார்கள். எப்போதும் போல் முதல் பக்கத்தில் ‘சமர்ப்பணம்’ என்ற தலைப்பில் பத்து வரிகள் எழுதி, அதன் ப்ரூஃபை திரு வாசன் அவர்கள் பார்வைக்கு அனுப்பி வைத்தார் கோபு. ஏராளமான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையில் சில தமிழ்ச் சொற்களும் அங்கங்கே தலைகாட்டின. உஷத் காலம், மங்கள ஸ்நானம், சரஸ்வதி தேவியின் பாதகமலம், சமர்ப்பணம் போன்ற சொற்கள் கலந்த அந்தக் கட்டுரையைப் படித்த போது நாம் தமிழ்ப் பத்திரிகைதான் படிக்கிறோமா? என்ற சந்தேகம் தோன்றியது.
திரு வாசன் அதைப் படித்து விட்டு, அதன் பக்கத்திலேயே ஒரு சிறு குறிப்பு எழுதி ‘கோபு’வுக்குத் திருப்பி அனுப்பி இருந்தார். அது:
‘Goddess Saraswathi can understand chaste Tamil tool’ என்பதுதான்.