உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/ஜெயகாந்தன் சொன்ன பதில்

விக்கிமூலம் இலிருந்து
ஜெயகாந்தன் சொன்ன பதில்

பிராம்மண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் தான் ஆனந்த விகடனில் வெளியாகும் என்ற குற்றச்சாட்டு அந்த நாளில் உண்டு. 1957-ல் நான் விகடனில் சேர்ந்து பணியாற்றிய போது அந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதையும் உணர்ந்தேன். அந்தச் சூழ்நிலையை எப்படியும் மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினேன். நல்ல எழுத்தை யார் எழுதினாலும் அவர்களுக்கு நீட்டப்படும் முதல் ஆதரவுக்கரம் நம்முடையதாக இருக்க வேண்டும் என்று நான் எந்தப் பத்திரிகையில் பணியாற்றினாலும் கருதுபவன்.

பார்த்தசாரதி என்ற இளைஞர் அப்போது விகடன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் என்னிடம் வந்து தூசு படிந்த புத்தகம் ஒன்றைத் தந்து, “இதில் உள்ள கதைகளைப் படித்துப் பாருங்கள். ரொம்ப நன்றாக இருக்கின்றன. மஞ்சரி ஆசிரியர் தி. ஜ. ர. முன்னுரை எழுதியிருக்கிறார்” என்று சொன்னார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘ஒரு பிடி சோறு.’ எழுதியவர் அப்போது பிரபலமாகாமல் இருந்த ஜெயகாந்தன்.

புத்தகத்தைப் புரட்டிய என் கண்ணில் ‘டிரெடில்’ என்ற கதை பட்டது. படித்தேன். அசந்து போனேன். ‘இந்த எழுத்தாளரைத் தேடிப் பிடித்து விகடனில் எழுத வைத்துவிட வேண்டும்’ என்று அன்று முதல் ஒரே குறியாக இருந்தேன்.

அப்போது ஆனந்த விகடன் நிர்வாகத்தை ஏற்றிருந்த திரு பாலு (எஸ். பாலசுப்ரமணியன்) அவர்களின் அறைக்குச் சென்று அந்த ‘டிரெடில்’ கதையைப் படித்துக் காட்டினேன். புன்சிரிப்போடு ரசித்துக் கேட்ட அவர், “நன்றாக இருக்கிறது. யார் இந்த எழுத்தாளர்? இவரை நமக்குக் கதை எழுதச் சொல்லலாமே?” என்றார்.

பின்னர் ஒரு நாள் எழுத்தாளர் கூட்டம் ஒன்றில் ஜெயகாந்தனை எனக்கு யாரோ அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது, “நீங்கள் ஏன் ஆனந்த விகடனுக்கு எழுதக் கூடாது?” என்று அவரிடம் கேட்டேன்.

“அவாள்ளாம் நம்ம கதையைப் போட மாட்டா” என்று வேண்டுமென்றே பிராம்மண பாஷையில், விகடனில் அந்தக் குறிப்பிட்ட இனத்தவரின் ஆதிக்கம் இருப்பதை எனக்கு உணர்த்துவது போல், தமக்கே உரிய பாணியில் குத்திக் காட்டினார்.

எனக்குக் கோபமோ, வருத்தமோ ஏற்படவில்லை, அவரை எப்படியாவது விகடனுக்கு எழுதச் செய்ய வேண்டும் என்பது தானே என் குறிக்கோள்?

“நான் விகடன் ஆசிரியரின் அனுமதியோடுதான் கேட்கிறேன். கதை எழுதிக் கொடுங்கள்” என்றேன்.

“சரி. பார்க்கலாம்” என்று சொல்லி விட்டுப் போனார்.

சில நாட்கள் கழித்து ஜெயகாந்தனிடமிருந்து ‘ஓவர்டைம்’ என்ற சிறுகதை விகடன் அலுவலகத்துக்கு வந்தது.

பாலசுப்ரமணியன் அந்தக் கதையைப் படித்துப் பார்க்க விரும்பினர்.

“வேண்டாம். அதை அப்படியே கம்போஸுக்கு அனுப்பி விடலாம். நாமே கேட்டு அவர் அனுப்பியிருக்கும் முதல் கதை இது. இதைப் பரிசீலனைக்கு உட்படுத்துவதோ, அல்லது பிரசுரத்துக்கு ஏற்றதல்ல என்று முடிவெடுப்பதோ அவரை ஊக்குவிப்பதாகாது. இது நாம் கேட்டு அவர் அனுப்பியுள்ள முதல் கதை. ஆகையால் பிரசுரித்து விடுவோம். இதற்குப் பிறகு வரும் கதைகள் சரியில்லையென்றால் திருப்பி அனுப்புவதில் தவறேதுமில்லை”என்று சொன்னேன் நான்.

புது எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் இந்த முறையை எனக்குக் கற்றுத் தந்தவர் ஆசிரியர் கல்கி.

‘ஓவர்டைம்’ விகடனில் பிரசுரமாகி வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானம் கொடுப்பது என்று முடிவானபோது நானும் மணியனும் பாலுவிடம் நீண்ட நேரம் பேசி எழுபத்தைந்து ரூபாயாக உயர்த்தினோம். பிறகு ஜெயகாந்தன் தம் கதைகள் ஒவ்வொன்றும் ‘முத்திரைக் கதை’யாகத்தான் வரவேண்டும் என்று விரும்பினார். விகடனுக்கு வரும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து விகடன் ஆசிரியர் குழுவினர் முத்திரைக்குச் சிபாரிசு செய்வார்கள். ஆனால் ஜெயகாந்தன் தம் கதைகள் எல்லாமே முத்திரைக் கதைகளாக வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கவே அவர் கதைகள் எல்லாவற்றுக்குமே முத்திரை கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

“முத்திரையைக் குத்த வேண்டியவர்கள் ஆசிரியர் குழாம். ஜெயகாந்தன் தன் கதைகளுக்குத் தானே முத்திரை குத்திக் கொள்வது எப்படி சரியாகும்?” என்பது என் வாதம்.

ஆனால், இதற்குப் பின்னரும் அவர் கதைகள் ‘முத்திரைக் கதை’களாகவே வெளியாகிக் கொண்டிருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாருக்காகவும் ஒரு பத்திரிகை தனது கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது என் கருத்து. ஆனால் நான் இதையெல்லாம் சொல்லத்தான் முடியுமே தவிர செயல்படுத்தும் அதிகாரம் என்னிடம் இருக்கவில்லை. எனவே ஜெயகாந்தன் விவகாரத்தில் தலையிடுவதை நான் அத்துடன் நிறுத்திக் கொண்டு விட்டேன்.