பழைய கணக்கு/வள்ளுவருக்கும் அவ்வளவுதானா?

விக்கிமூலம் இலிருந்து

வள்ளுவருக்கும் அவ்வளவுதானா?

நான் ஆனந்த விகடனில் சேர்ந்தபோது அங்கே நிலவி வந்த ஒரு வழக்கம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அப்போதெல்லாம் கதையோ கட்டுரையோ எது பிரசுரமானாலும் அதற்கான சன்மானத்தை நிர்ணயிக்க அவற்றின் நீளத்தை ‘ஸ்கேல்’ வைத்து அளந்து பார்ப்பார்கள். அங்குலத்துக்கு இவ்வளவு என்று சன்மானத் தொகை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கதை இருபது அங்குல நீளத்துக்குப் பிரசுரமாகி இருந்தால் அதற்கு நாற்பது ரூபாய் என்று பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தேவன் காலத்தில் தொடங்கிய இந்த வழக்கம் தேவன் மறைந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த முறை சரியென்று எனக்குத் தோன்றவில்லை.

ஒரு விவாதத்தின் போது இதைப் பற்றி திரு வாசன் அவர்களுடைய மகன் திரு பாலசுப்ரமணியனிடம் கேட்டேன்.

“இது சரியான முறையாகத் தோன்ற வில்லையே! ஒரு எழுத்தாளரின் படைப்பு எவ்வளவு சன்மானம் பெற வேண்டும் என்பதை அந்த எழுத்தாளரின் எழுத்தின் தரத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்க வேண்டுமே தவிர நீளத்தை வைத்து அல்ல” என்றேன்.

“இதில் ஒரு நன்மை இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்று நினைக்கிறேன். ஒரு அங்குலத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து விடும் போது வேண்டியவர், வேண்டாதவர் என்கிற பிரச்னையெல்லாம் வராது. யார் எழுத்தையும் சமநோக்குடன் பார்ப்பதற்கு வசதியாகவும் ஏற்றத் தாழ்வு வித்தியாசத்துக்கு இடமில்லாமலும் போய்விடும்" என்றார். திரு பாலசுப்ரமணியன். நான் அதற்குமேல் அவரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. சக உதவியாசிரியர்களிடம் மட்டும் வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருப்பேன்.

“ஒஹோ... அப்படியென்றால் திருவள்ளுவர். இப்போது உயிரோடு இருந்து அவர் விகடனில் குறள் எழுதினால் குறளின் நீளத்தை அளந்து அதற்குத் தகுந்தபடி அவருக்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்தான் சன்மானம் கொடுப்போம் இல்லையா?”

இப்படி நான் சொல்லிக் கொண்டிருந்தது திரு பாலு அவர்கள் காதுக்கு எட்டியிருக்க வேண்டும். மறுநாளே என்னை அவர் அழைத்து “நான் யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்வது ரொம்ப சரி. அளந்து கொடுக்கும் முறை நியாயமில்லைதான். தரத்தைப் புரிந்து கொடுக்கும் முறையையே நாம் இனி பின்பற்றுவோம். அடுத்த இதழில் ‘வணக்கம்’ என்ற தலைப்பில் இது பற்றி எழுதி விடுங்கள்.‘இனிமேல் கட்டுறைகளை‘ஸ்கேல்’ வைத்து அளந்து சன்மானம் தர மாட்டோம். இலக்கியங்களின் தரத்தை, அதன் நீளத்தைக் கொண்டு மதிப்பிடப் போவதில்லை. தரத்துக் கேற்றபடியே படைப்புகளுக்கான சன்மானம் அமையும்’ என்று விளக்கமாக ஓர் அறிவிப்பு எழுதி விடுங்கள்” என்றார். நான் அவ்வாறே எழுதி அவரிடம் கொடுத்தேன்.

திரு பாலு அவர்கள் அதைப் படித்துப் பார்த்து விட்டுச் சில திருத்தங்களுடன் வெளியிட்டார். அந்த வாரத்தோடு ஸ்கேல் வைத்து அளக்கும் முறை கைவிடப்பட்டது.