உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/சோறு கண்ட இடம்

விக்கிமூலம் இலிருந்து



சோறு கண்ட இடம்

ரு வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலம் அது. பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்போடு முடித்துக் கொண்டு விட்டேன். வகுப்பில் என்னைக் காட்டிலும் குறைந்த வயது சிறுவர்களோடு சேர்ந்து படிப்பதற்கு அவமானமாக இருந்ததே காரணம். என்னுடைய தந்தை வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை ஹைஸ்கூலில் சம்ஸ்கிருத வாத்தியார். நானும் அவரிடம் சம்ஸ்கிருதம் படித்தேன். படிப்புக்கும் விசித்திரன் பத்திரிகையில் சேர்வதற்கும் இடையில் ஒரு வருடகாலம் வெட்டிப் பொழுதுபோக்குதான். வில்லிவாக்கம் பிடிக்காததால் சென்னையிலேயே தங்கி எந்தக் குறிக்கோளுமின்றி திரிந்து கொண்டிருந்தேன். காலையில் எழுந்திருக்க வேண்டியது. இருந்தால் சாப்பிட வேண்டியது, இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரி நினைத்துக் கொண்டு எங்கு போகிறோம் என்ன செய்யப் போகிறோம் என்று எனக்கே தெரியாமல் சுற்றிவர வேண்டியது.

அப்போது, 1932-ல் சென்னையின் முகம் வேறு மாதிரியாக இருந்தது. மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரியில் காஞ்சி சங்கரர்ச்சாரிய சுவாமிகள் முகாமிட்டிருந்தார். அங்கே தினமும் சுவாமிகளைத் தரிசிக்க வருகிறவர்களுக்குச் சாப்பாடு உண்டு. ஒரு மாத காலம் அந்த மடத்திலேயே சாப்பிட்டுக் கொண்டு மயிலாப்பூர் வட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். வானத்தில் ஒட்டடை அடிப்பது போல் டிராம் வண்டிகள் தலைக்கு மேலே இரும்புக் குச்சியை நீட்டியபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். வள்ளுவர் சிலையும், மக்களின் நெரிசலும், வேகம் கலந்த பரபரப்பும் அந்நாளில் கிடையாது.

டிராமில் பயணம் செய்வது குஷியான அனுபவம் என்றால் டிக்கெட் வாங்காமல் போவது. அதைவிட குஷி! நான் பிந்தைய ரகத்தைச் சேர்ந்தவன். கச்சேரி ரோடு ஷட்டில் சர்விஸில் தினமும் நாலு முறையாவது போய்த் திரும்புவேன். அந்தப் பழக்கத்தில் நெற்றி முழுதும் படர்ந்த நாமம் போட்ட கண்டக்டர் நாயுடு எனக்கு ரொம்ப வேண்டியவராகி விட்டார். சின்னப் பையன் என்று ஒரு சலுகை காட்டினார். எப்போதாவது காலணாவுக்குப் பொடி வாங்கிக் கொண்டு போய்க் கொடுக்கும் போது அவரது முப்பத்திரண்டு பற்களையும் பார்த்துவிட முடியும்!

காலையில் சம்ஸ்கிருதக் கல்லூரிக்குப் போய் மடத்து யானை குளித்து முடிகிறவரை காத்திருந்துவிட்டு. அப்புறம் வெளியே போய் ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டு பகல் சாப்பாட்டுக்குத் திரும்பி வந்து விடுவேன். சுவாமிகளைத் தரிசிக்க வரும் பிராமணர்கள் எல்லோருக்குமே மடத்தில் பகல் சாப்பாடு உண்டு. யாருக்கு உண்டோ இல்லையோ எனக்கு நிச்சயம் உண்டு! அது தவிர எப்படியும் ஒரு நாளைக்கு நாலைந்து முறை சம்ஸ்கிருதக் கல்லூரிக்குப் போகாமல் இருக்க மாட்டேன். பெரியவரைப் பார்க்க வேண்டும் என்ற பக்திப் பரவசத்தால் அல்ல. அங்கே அவ்வப்போது கிடைக்கக் கூடிய பிரசாதத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தில்!

விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை அவ்வப்போது ஓடி வந்து அம்மாவைத் தொட்டுக் கொண்டு திரும்பவும் விளையாடப் போய் விடுமே. அது மாதிரி எந்த நிமிடம் எதை விநியோகம் செய்து விடுவார்களோ என்ற சந்தேகம்தான். யாராவது நிறையப் பழங்கள் கொண்டு வந்து பெரியவாளிடம் தட்டோடு வைப்பார்கள். அவர் திடீரென்று ‘இதைக் குழந்தைகளுக்கு வினியோகித்து விடு’ என்று உதவியாளர்களிடம் சொல்லுவார்.

சரி, இப்படியே எத்தனை நாளைக்கு வண்டி ஒட்டுவது? படிப்பும் அதிகமில்லை. வேலை கிடைப்பதாகவும் தெரியவில்லை.

ஒருநாள் கச்சேரி ரோடில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒரு போர்டு காணப்பட்டது. போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கப்படும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

என்னை ஒரு தரம் நானே மானசீகமாய்ப் பார்த்துக் கொண்டேன். எனக்கு போலீஸ் உத்தியோகத்துக்குத் தகுந்த உயரம் இருந்தது. அது மட்டுமல்ல. என் தாத்தாவுக்கு அப்பாவோ வேறு யாரோ ஒருவர் எங்கள் குடும்பத்தில் போலீஸில் உத்தியோகம் பார்த்ததாக என் பாட்டி சொல்லியிருக்கிறாள். ஆகவே அவரைப் போல் போலீஸ் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஓர் ஆர்வம் இருந்தது.

நேராக உள்ளே போனேன். போலீஸ் வேலையில் சேர வந்திருப்பதாகச் சொன்னேன்.

உடனே என்னை உட்காரச் சொன்னார்கள். பிறகு எழுந்திருக்கச் சொன்னார்கள். மார்பு அளவு, உயரம், எடை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.

“எல்லாம் சரியாக இருக்கிறது. நாளை காலை எட்டு மணிக்கு வந்துவிடு தம்பி! வேலூருக்குப் போக வேண்டியிருக்கும். அங்கேதான் ட்ரெயினிங். ஆகவே, காலையில் வரும்போதே உன் துணிமணியெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து விடு” என்றார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு சுலபமாக வேலை கிடைத்து விடும் என்று நான் எண்ணவில்லை. “சரி. வருகிறேன்” என்று சொல்லி அவர்கள் கொடுத்த பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால் மறுநாள் நான் போகவில்லை. அவ்வளவு சுலபமாக வேலை கிடைத்து விட்டதாலோ என்னவோ எனக்கு அந்த வேலைக்குப் போவதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை. அத்துடன் மறுநாள் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு மடத்தில் பெரிய விருந்து நடக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டார்கள். விருந்து சாப்பாட்டை விட்டுச் செல்ல மனம் இல்லாததும் ஒரு காரணம்.

ஒருவேளை, அன்று நான் போலீஸ் உத்தியோகத்தில் சேர்ந்திருந்தால் இன்று ஒரு ‘கிராக்கி’யாக ஆகியிருப்பேனோ என்னவோ!