உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/வாஷிங்டனில் திருமணம்

விக்கிமூலம் இலிருந்து



வாஷிங்டனில் திருமணம் எப்படி நடத்தினேன்?

இருபது ஆண்டுகளுக்கு முன் (1963-ல்) நானும் என் இனிய நண்பர் பரணிதரனும் திருவையாறு தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம். நானும் அவரும் சேர்ந்து விட்டால் அரட்டைக்கும் சிரிப்புக்கும் பஞ்சமே இராது. நாள் முழுதும் நகைச்சுவையோடு பேசி மகிழ்ந்து கொண்டிருப்போம்.

நாங்கள் இருவரும் காவேரிப் படித்துறையில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருந்தபோது அதே படித்துறையில் நாலைந்து வெளிநாட்டுக்காரர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

தென்னையும் வாழையும் மண்டிய காவிரிக் கரைச் சூழ்நிலையில், சட்டை களைந்த சங்கீதக்காரர்களுக்கும், விபூதி அணிந்த ரசிகர்களுக்கும் இடையே அந்த வெள்ளைக்காரர்கள் சற்றும் பொருந்தாதவர்களாய்க் காணப்பட்டார்கள். சிறிது நேரம் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார் பரணிதரன்.

“இந்த இடத்தில் இவர்களைக் காணும்போது வேடிக்கையா யிருக்கிறது?” என்றேன்.

“நம்முடைய கர்நாடக சங்கீதத்தின் பெருமை அத்தகையது. வெளிநாட்டுக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தது!” என்றார் அவர்.

“ஒரு வருடம் தியாகய்யர் உற்சவத்தை வெளிநாட்டிலேயே கொண்டு போய் நடத்தினால் எப்படி இருக்கும்?” என்று கேட்டேன்.

“ரொம்ப வேடிக்கையாகத்தான் இருக்கும். அதுவும் அம்மாதிரி ஒரு நதிக்கரையில் நடத்திப் பார்க்க வேண்டும். அங்கே தியாகய்யருக்கு ஒரு கோயில் கட்டி அந்தச் சந்நிதியில் அந்த நாட்டவர்களும் நாமும் சேர்ந்து உட்கார்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார்.

அவ்வளவுதான் ; வெறும் வாயை மெல்லும் என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவல் ஒன்று கிடைத்தால் போதாதா? அதிலிருந்து என் கற்பனையை ஓட விட்டேன். அது எங்கெல்லாமோ சுற்றி அலேந்ததன் பயனாக என்னென்னவோ எண்ணங்களெல்லாம் உருவெடுக்கத் தொடங்கின. முழுநீள நகைச்சுவைத் தொடர் ஒன்று எழுத வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த என் லட்சியம், செயல் பூர்வமாக நிறைவேறப் போகிற காலம் வந்து விட்டது போல் ஒரு பிரமை. என் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது.

அடுத்த கணமே, காவிரிக்கரை கர்நாடக சங்கீதம் எல்லாம் எனக்கு இரண்டாம் பட்சமாகி விடுகின்றன. தொலைவில், ஷேக் சின்ன மெளலானாவின் நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒலியே என் கற்பனைக்குப் பின்னணியாகவும் அமைந்து விடுகிறது. மறு நிமிடமே மானசீகமாக வெளிநாடுகளுக்குப் பறக்கிறேன். நான் போகுமிடங்களுக்கெல்லாம் அந்த நாதஸ்வர இசையும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

வெளிநாட்டில் தியாகய்யர் உற்சவம் நடத்துவதைக் காட்டிலும் ‘நம் ஊர்த் திருமணம் ஒன்றை நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்ட போது நமக்குக் கிடைக்கும் வேடிக்கையும் தமாஷூம் அமெரிக்காவில் நம் கலியாணத்தை நடத்துகிற போது அவர்களுக்கு ஏற்படலாம்’ என்று தோன்றியது. இந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.

திருவையாற்றிலிருந்து திரும்பி வருகிற போது இதே சிந்தனைதான், பரணிதரனோடு இதே பேச்சுதான். நம் நாட்டில் சாதாரணமாக ஒரு கலியாணத்தை நடத்தி முடிப்பதென்றாலே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. ஜாதகப் பொருத்தம், பண விவகாரம், சம்பந்திச் சண்டை போன்ற எத்தனையோ விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கே போய் ஆடம்பரக் கலியாணம் ஒன்று நடத்துவதென்றால் அது அத்தனை எளிதான காரியமா? கவலை என்னைக் கவ்விக் கொண்டது. உண்மையாகவே கலியாணம் செய்யப் போகிறவர்களுக்குக் கூட அத்தனை கவலை இருந்திருக்காது. கதைக்கு ‘வாஷிங்டனில் திருமணம்’ என்று பெயர் கொடுத்து விளம்பரமும் செய்து விட்டேன். விளம்பரத்திலும் சரி, வாரா வாரம் கதை வெளியான போதும் சரி, அதை எழுதுகிறவர் யார் என்று சொல்லாமலே கடைசிவரை சஸ்பென்ஸில் வைத்திருந்து முற்றும் போடுகிறபோதுதான் என் பெயரையும் வெளியிட்டேன்.

பதினொன்றே வாரங்கள் வெளியான இந்தக் கதைக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை. வாரா வாரம் திரு கோபுலுவின் உயிர்ச் சித்திரங்கள் இந்தக் கதைக்குத் தனிச் சிறப்பும் முழு வெற்றியும் தேடித் தந்தன.

இன்னொரு விஷயம்.

“இந்தத் திருமணத்தை வாஷிங்டனில் நடத்தப் போகிறேன். அங்கேதான் பொடோமாக் நதியும் அப்ராஹாம் லிங்கன் மண்டமும் டைடல் பேஸின் நீர்த்தேக்கமும் இருக்கின்றன. ஊர்வலம் செல்ல வீதிகள் விசாலமாயிருக்கின்றன. அப்பளம் உலர்த்துவதற்கு வசதியான ஆர்ட் காலரி மொட்டை மாடி இருக்கிறது. பாலிகை விடுவதற்கும் ஜானவாச ஊர்வலம் நடத்துவதற்கும் ஏற்ற இடம் வாஷிங்டன் நகரம்தான்” என்று நான் கூறியபோது, “ரொம்ப சரி, அங்கேயே நடத்துங்கள். ஆனால் செலவையெல்லாம் ராக்பெல்லர் சீமாட்டி தலையில் போடுங்கள்” என்று எனக்கு யோசனை கூறி உதவியவர் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள்தான். அவர் யோசனைப்படியே ராக்பெல்லர் செலவிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விட்டேன். வாஷிங்டனில் திருமணம் எழுதுவதற்கு முன் நான் அமெரிக்காவை பார்த்ததில்லை. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த நாட்டையும் வாஷிங்டன் நகரையும் போய்ப் பார்த்தேன். திருமணம் நடந்த ஜார்ஜ் டவுன், சாஸ்திரிகள் துணி துவைத்த பொடாமாக் நதி, பாலிகை விட்ட டைடல் பேஸின், அப்பளம் உலர்த்திய ஆர்ட் காலரி எல்லாவற்றையும் நேரில் பார்த்தபோது எனக்கே வியப்பாயிருந்தது. இனி அந்த மாதிரி ஒரு கதை எழுத முடியுமா? சந்தேகம்தான்.