பழைய கணக்கு/நீறு பூத்த நட்பு

விக்கிமூலம் இலிருந்து



நீறு பூத்த நட்பு

பெருந்தலைவர். காமராஜூக்கு அடுத்தபடியாக அத்தனை நெருக்கமாக நான் பழகிய வேறொரு அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிதான்.

ஆனால் இந்த இரு உறவிலும் நுட்பமான வித்தியாசம் உண்டு. காமராஜிடம் எனக்கிருந்த உறவு ஒரு சங்கீத வித்வானுக்கும், அந்த வித்வானயே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ரசிக விசிறிக்கும் உள்ள உறவைப் போன்றது.

கலைஞரிடம் ஏற்பட்டது நகைச்சுவை அடிப்படையில், இலக்கிய உணர்வு அடிப்படையில் எழுந்த நட்பு. நுனிக் கரும்பில் தொடங்கி அடிக்கரும்பு வரை சுவைக்கும் போது கூடிச் செல்லும் இனிப்பைப் போல் அது வளர்ந்தது. பல கூட்டங்களில், பல சந்திப்புகளில், பல பயணங்களில், பல நேரங்களில் நாங்கள் இருவரும் காதலர்கள் போல் இந்த நட்பை வளர்த்துக் கொண்டோம்.

இப்போதும் அந்த நட்பு அழிந்து போகவில்லை. இருவருமே சந்தித்துப் பேசிக் கொண்டால் தீர்ந்து போகக் கூடிய, மிக மிக அற்பமான காரணங்களால் நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

இதில் வேடிக்கை என்னவென்றல், எங்களுக்குள்ளே ஏதோ தீராத பகை மூண்டு ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தையற்று நிற்பது போல் சிலர் கற்பனை செய்து கொண்டிருப்பதுதான்.

அவருடைய எழுத்தாற்றல், பேச்சுத் திறமை, நகைச்சுவை உணர்வு இம்மூன்றிலும் எனக்கு எப்போதுமே ஒரு மயக்கம் உண்டு. சுயநலத்தின் அடிப்படையில் நான் அந்த நட்பை வளர்த்துக் கொள்ளவில்லை, காமராஜோடு பழகிய போதும் சரி, கலைஞருடன் பழகிய போதும் சரி, எம். ஜி. ஆருடன் பழகிய போதும் சரி, எனக்கென்று இவர்களை நான் எதுவுமே கேட்டதில்லை.

காமராஜராவது ஒரு நாள் பேச்சு வாக்கில், “வீடு கீடு ஏதாவது சொந்தமாக் கட்டிருக்கீங்களா?” என்று கேட்டதுண்டு. கலைஞர் அது கூடக் கேட்டதில்லை.

கலைஞர் வெளியூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பார். “நானும் உங்களோடு வருகிறேன்?” என்பேன். “வரட்டுமா?” என்று கூடக் கேட்க மாட்டேன். அவரும், “வாங்களேன்” என்பார். அந்த “வாங்களேன்” என்ற சொல்லில் அன்பு, ஆனந்தம், ஆர்வம் எல்லாம் கலந்திருக்கும். அப்புறம் பயணம் முழுதும் நகைச்சுவை கலந்த பேச்சுதான். காமராஜ், ராஜாஜி, அண்ணா, பெரியார், வாசன், மைசூர் மகாராஜா, ஷேக் அப்துல்லா, ம. பொ. சி., எம். ஜி. ஆர். சங்கராச்சாரியார் எல்லாரைப் பற்றியும் பேசியிருக்கிறார். யாரைப் பற்றியும் அவதுாறாக, பண்பாடற்ற முறையில் தரக்குறைவாக எப்போதும் பேசியதில்லை. எந்தெந்த சந்தர்ப்பங்களில் யார் யார் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மட்டும் வேடிக்கையாகவும் சில சமயம் சீரியஸாகவும் தமக்கே உரிய பாணியில் சொல்லுவார். அதையெல்லாம் நான் ஓர் எழுத்தாளன் என்கிற முறையில் கவனமாகக் கேட்டுக் கொள்வேன்.

நான் அவரிடம் பதவியோ, உதவியோ எப்போதும் கேட்டதில்லை. நான் அவரிடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது நான் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் போடுவதற்குக் கதை, கட்டுரை!

1977 பொதுத் தேர்தலின் போது என்னை ஒரு நாள் டெலிபோனில் கூப்பிட்டு, “மாம்பலம் தொகுதியில் தி மு. க. சார்பில் நிற்கிறீர்களா?” என்று கேட்டார். நான் நேற்றுதானே ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியாதா?” என்று இழுத்தாற்போல் பதில் சொன்னேன்.

உடனே எனக்கு வருத்தம் தெரிவித்து, “அப்படியா சங்கதி? எனக்குத் தெரியாதே! தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தி விட்டேனே? மன்னிக்கவும்” என்று டெலிபோனில் கூறியதுடன் மிக மிகப் பெருந்தன்மையோடு ஒரு கடிதமும் எழுதி அனுப்பியிருந்தார். முதல் முறை அண்ணா நகர் தொகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்த போது அவர் என்னிடம் எதுவுமே அது பற்றிப் பேசவில்லை. ஆயினும் நானகவே அண்ணா நகரில் வீடு வீடாகச் சென்று அவருக்காக வோட்டுக் கேட்டேன். ஏறத்தாழ ஒருமாத காலம் அண்ணாநகரில் ஒரு தெரு பாக்கி இல்லாமல், ஒரு வீடு பாக்கி வைக்காமல் தினமும் நடந்தே போய் வோட்டுக் கேட்டேன். இதெல்லாம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நேசத்தின் அடிப்படையில் செய்த காரியங்கள்.

கலைஞர் முதலமைச்சராயிருந்த போது வெளியூர்ப் பயணம் போகாத நாட்களில் மாலை வேளைகளில் கடற்கரை செல்வதுண்டு, மெரினா கடற்கரையில் பத்து இருபது நண்பர்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்து கொள்வார்கள். அந்த வட்டத்தில் சிற்சில சமயங்களில் நானும் கலந்து கொள்வேன் அரசியலைத் தவிர மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவோம். அப்போதைய அமைச்சர் என். வி. என். அவர்கள் தவறாமல் வந்து விடுவார். வீட்டிலிருந்து கலைஞருக்குப் பிடித்தமான ‘நொறுக்குத் தீனி’ கொண்டு வருவார். அதை எல்லோரும் பங்கு போட்டுக் கொள்வார்கள். சில சமயம் நானும் ஏதாவது தின்பண்டம் எடுத்துச் செல்வேன்.

திருமதி இந்திரா காந்தி அறிவித்திருந்த எமெர்ஜென்சி உத்தரவுகள் மிகக் கடுமையாக இருந்து கொண்டிருந்த நேரம். கலைஞரின் கடற்கரை வட்ட அங்கத்தினர்களை மத்திய அரசு மிகக் கூர்மையாகக் கண்காணித்துக் கொண்டிருந்தது. நான் அது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தைரியமாக அந்த வட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன்.

கோவை மாநாட்டுக்குப் பிறகு தி. மு. க. வின் எதிர்காலமே ஓர் பயங்கரச் சுழலில் சிக்கியிருந்தபோது, பல தலைவலிகளுக்கும் இந்திரா காந்தியின் மறைமுகமான கிடுக்கித் தாக்குதல்களுக்கும் இடையே மன அமைதியின்றி எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் புன்சிரிப்புப் பூச்சில் வாழ்ந்து கொண்டிருந்த கலைஞர் அவர்கள் என் அறுபதாண்டு விழாவுக்குத் தலைமை தாங்க ஒப்புக் கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டொரு நாட்களில் தி. மு. க ஆட்சி டிஸ்மிஸ் ஆகப்போகிறது. உள்ள வேதனையும் உடல் வேதனையும் சேர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்த கலைஞர் என் விழாவில் கலந்துகொள்ள முடியாத தவிப்பு, உடல் நிலை சரியில்லை வர முடியாது போலிருக்கிறது என்று கலஞர் வீட்டிலிருந்து தகவல் கிடைத்த போது கலைஞருக்கு நான் ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். “ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி. கடமை தவறக்கூடாது. உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்தாலும் வந்தே தீர வேண்டும். திரிபுரா காங்கிரஸ் தலைமை ஊர்வலத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்குக் கடுமையான காய்ச்சல் வந்து விட்ட போதிலும் அவர் கடமையிலிருந்து தவறவில்லை” என்று சுட்டிக் காட்டியிருந்தேன்.

மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கலந்து கொண்டது மட்டுமல்ல. மிகமிக அழகாகப் பேசி எனக்குப் பெரும் மதிப்பையும் பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

“அருமை நண்பர் சாவி எனக்கு இன்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில், ‘நேதாஜி போஸ் கடுமையான காய்ச்சல் வீசிக் கொண்டிருந்த போதிலும் கடமையில் தவறவில்லை. அதைப் போல நீங்களும் இன்று தவறக் கூடாது, என்று எழுதியிருக்கிறார்.

“ஆனால் நேதாஜி போஸ் அன்று என்னைப் போல் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை நண்பர் சாவி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்” என்று கூறிய போதுதான் கலைஞரின் உண்மை நிலை புரிந்து வருத்தமுற்றேன்.

அந்த ஆண்டில்தான் என் மகன் பாச்சாவின் திருமணமும் நடந்தது. அன்று மாலை ஹேமமாலினியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கலைஞர் பாச்சாவைப் பார்த்து, “பாச்சா, உன் பாச்சாவெல்லாம் இனி பலிக்காது” என்று வேடிக்கையாகச் சொல்லி விட்டு போட்டோவுக்கு நின்றுவிட்டு மறுகணமே பீச்சுக்குக் கிளம்பிவிட்டார். நான் கார் வரை சென்று வழி அனுப்பிய போது, “இன்று நீங்கள் பீச்சுக்கு வர முடியாது, இல்லையா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

“ஆமாம்” என்று பதில் கூறி விட்டேனே தவிர பீச்சுக்குப் போகாதது மனதுக்குச் சமாதானமாயில்லை.

ஏழரை எட்டு மணிக்கு மேல் கொஞ்சம் ரிஸப்ஷன் பரபரப்பு அடங்கியதும் கலியாணச் சீர்வரிசை பட்சணங்களைப் பைகளில் போட்டு எடுத்துக் கொண்டு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கார் ஏறி பீச்சுக்குப் போய் விட்டேன். என்னைக் கண்டதும் கலைஞருக்கு ஒரே வியப்பு!

“எப்படி வந்தீங்க?” என்பது போல் ஒரு பார்வை. அந்தப் பார்வையிலே சொல்லொனத மகிழ்ச்சி. வாய் நிறையச் சிரிப்பு. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?

என் அறுபதுக்கு வந்து பாராட்டிய கலைஞருக்கு இன்று அறுபது! அவர் பல்லாண்டு வாழ உளமார வேண்டுகிறேன்.