உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/வந்தேன் ஹிரண்ய கசிபு

விக்கிமூலம் இலிருந்து
“வந்தேன் ஹிரண்ய கசிபு”

புரிசை நடேசத் தம்பிரானுடைய தெருக் கூத்து அப்போது ரொம்பப் பிரபலம். அந்தக் கலைஞர் அடிக்கடி பாதுகா பட்டாபிஷேகம் அல்லது ஹிரண்யவாசாப் கதைகளைத் தெருக்கூத்தாக நடத்துவார். நிறையக் கூட்டம் சேரும். அதில் நிச்சயம் நானும் இருப்பேன். பிரகலாதனுடைய கதையைத்தான் ஹிரண்ய வாசாப் என்று அறிவிப்பார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது ஆனால் அவருடைய நடையும், குரலும், பாவனையும். ஜிகினா பளபளக்கும் உடைகளும் அப்போது என்னை ஆச்சரியப்பட வைத்தன.

எல்லோரும் சேர்ந்து பிரகலாத சரித்திரம் தெருக் கூத்து நடத்தினால் என்ன என்று ஒரு சமயம் எங்களுக்கு திடீர் ஆசை வந்தது.

தூண்டி விட்டவன் கிருஷ்ணமூர்த்திதான். ஆளில்லாத லைப்ரரி ஆரம்பிக்க ‘டொனேஷன்’ கொடுத்தானே, அதே கிருஷ்ணமூர்த்தி.

தெருக் கூத்து நடத்தலாம் என்பது அவன் ஆலோசனை; பிரகலாத சரித்திரம் போடலாம் என்பது என் ஐடியா.

விஷயம் வெளியே தெரிந்து விட்டால் பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் உள்ளுர இருந்தது. யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக ஏற்பாடுகளைச செய்ய ஆரம்பித்தோம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் எல்லாரும் மாட்டுக் கொட்டகை ஒன்றில் புகுந்து கொண்டு பரபரப்போடு ஏற்பாடுகளைச் செய்தோம். ஏதோ வெள்ளைக்காரனுக்கு எதிரான வெடி குண்டு தயாரிக்கிற ரகசிய தேசியவாதிகள் மாதிரி கதவை மூடிக் கொண்டு, கிசுகிசுவென்று தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டு, எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். கொட்டகையில் இருந்த மாடுகள் எல்லாம் மேய்ச்சலுக்குப் போயிருந்தன. காலையில் போகும் மாடுகள் மாலையில்தான் திரும்பி வரும். இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

அட்டையையும் கத்தரிக்கோலேயும் வைத்துக் கொண்டு, கிரீடமும், புஜமும் தயாரித்தோம். பளபளவென்று இருப்பதற்காக ஜிகினா வேண்டியிருந்தது. சில பேர் கோயில் உற்சவப் பிரபையிலிருந்த ஜிகினாவைப் பிய்த்து எடுத்துக் கொண்டு வந்தோம். இன்னும் சிலர் சிகரெட் பெட்டியிலிருந்து ஜிகினா காகிதத்தை எடுத்து வந்தார்கள்.

காலையிலிருந்து மும்முரமாக ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால் எல்லாருக்கும் நேரம் ஆக ஆகப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. ஒவ்வொருவராகப் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடுவது என்று ஏற்பாடு.

என்னதான் ரகசியமாக ஏற்பாடு செய்தாலும் கிராமத்துப் பொடியன்களுக்கு எப்படியோ மூக்கில் வியர்த்து விட்டது. ஒவ்வொருவராக வந்து கதவைத் தட்டி, உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் எதிரில் ஏற்பாடுகளைச் செய்யும் போது கொஞ்சம் மிதப்பாகக் கூட இருந்தது.

தெருக்கூத்து என்றால் வாத்தியங்கள் வேண்டாமா?

பஜனைக் கோயிலிலிருந்து ஹார்மோனியம், மிருதங்கம், ஜால்ரா முதலியவைகளைத் தூக்கிக் கொண்டு வந்தோம். அதை ‘ஹார்மோனியம்’என்று சொல்வது கூடத் தப்பு. சுருதிப் பெட்டி; அவ்வளவுதான்.

உடைகள் ஓரளவு தயாரானவுடனேயே மேக்கப் பற்றி யோசனை எழுந்தது முன் கூட்டியே எல்லாவற்றையும் சேகரம் செய்து வைத்துக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஒவ்வொன்றாய் முடிக்க முடிக்கத்தான் அடுத்த பிரச்சனை முன்னால் வரும்.

ஒன்று மட்டும் நினைவுக்கு வந்தது.

மேக்கப் போட்டுக் கொண்டு விட்டால் அப்புறம் சாப்பிடுவதற்கு வெளியே போக முடியாது; விஷயம் தெரிந்து விடும். அதனால் ஒவ்வொருவராகப் போய்ச் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வரும்போது மேக்கப் சாமான்களோடு வருவது என்றும் முடிவு செய்தோம். மஞ்சள், குங்குமம், பவுடர் ஒவ்வொன்றையும் ஒவ்வொருத்தர் கொண்டு வருவது என்று தீர்மானித்தோம்.

நான்தான் ஹிரண்ய கசிபு. லைப்ரரி கிருஷ்ணமூர்த்தி ஹிரண்யனுடைய மனைவி லீலாவதியாக நடிக்கப் புடவையைச் சுற்றிக் கொண்டு தயாரானான்.

விபூதியெல்லாம் பூசிக்கொண்டு சண்ட மார்க்கன் என்ற குருவாக வேஷம் போட்டுக் கொண்டவன் பெயர் ஞாபகம் இல்லை. எருமை மாட்டில் ஏறிக் கொண்டு வயல்காட்டுக்கு தினமும் போய் வரும் இன்னொரு பையனை நரசிம்மனாக்கினோம்.

தூண் கூட ‘செலக்ட்’ பண்ணியாகி விட்டது. அதன் பின் குல்தான் நரசிம்மன் பதுங்கிக் கொள்வார். தூணை நான் கதையால் ஓங்கி அடித்ததும் வெங்காய வெடிவெடிக்கும். உடனே நரசிம்ம மூர்த்தி பிரத்யட்சமாக வேண்டும்.

வெங்காய வெடி தயாராக இருந்தது. எவ்வளவோ தடவை புரிசை தம்பிரான் நாடகத்தைப் பார்த்து ரசித்திருந்தாலும் எங்கள் யாருக்குமே வசனம் ஞாபகமில்லை. ஒட்டுமொத்தமாக பிரகலாதன் கதை தெரியும். அதை வைத்துச் சமாளித்து விடலாம் என்று ஒரு அசட்டுத் தைரியம்.

நான்தான் மிருதங்கம் வாசிக்க வேண்டும். நானே ‘தொம் தொம்’ என்று மிருதங்கத்தைச் சப்தம் செய்துவிட்டு, “வந்தேன், வந்தேன் ஹிரண்ய கசிபு” என்று போய் நிற்க வேண்டும். மிருதங்கம் ஏகமாய் சுருதி இறங்கிக் கிடந்தது.

ஆறுமணி ஆன போது எங்களுக்குக் கூட பஜனை கோயில் மிருதங்கம் மாதிரியே சுருதி இறங்கிப் போய் விட்டது.

ஒரு வழியாய் கூத்தை ஆரம்பிக்கலாம் என்று எல்லாரும் தீர்மானித்த போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. எல்லா ஏற்பாடுகளையும் ரகசியமாகச் செய்து வந்ததால், வெளியே யாருக்கும் கூத்து நடக்கப் போவதே தெரியாதே, கூத்தைப் பார்க்க யாரும் வர மாட்டார்களே, ஆடியன்ஸுக்கு என்ன செய்வது என்று யோசித்தோம். எதிரே உட்கார்ந்து கொட்டுக் கொட்டென்று விழித்துக் கொண்டிருந்த பத்துப் பதினைந்து வாண்டுகள்தான் ஆடியன்ஸ்?

எப்படியாவது விஷயத்தைத் தெரிந்து கொண்டு, யாராவது வந்து விட மாட்டார்களா என்று ஒரு ஏக்கம்.

அப்போது பார்த்து மாட்டுக் கொட்டகையின் கதவு தபதப வென்று தட்டப்பட்டது. எங்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். அப்பாடா! நம்ம கூத்துக்கு ஆடியன்ஸ் வந்து விட்டார்கள் என்ற திருப்தி.

அவசரமாகப் போய்க் கதவைத் திறந்தபோது, மந்தைக்கு மேயப் போன மாடுகள் திரும்பி வந்து நின்று கொண்டிருந்தன.