பழைய கணக்கு/நூற்றுக்கு நூற்றைந்து
பஞ்சாயத்துப் பள்ளியில் ஐந்து வகுப்பு வரை படித்து முடித்ததும் கிராமத்தில் மேலே படிக்க வசதி இல்லாததால் படிப்பை அத்துடன் நிறுத்த வேண்டியதாயிற்று. பதினைந்து முடிந்து பதினாறாவது வயதைக் கடந்து விட்ட நிலையில், “வயதாகி விட்டதே! இனி எப்போது படிப்பது?” என்ற கவலை என்னைப் பிடுங்கித் தின்றது. அப்பாவுக்கு என் எதிர்காலம் பற்றிய கவலை இருப்பதாகவே தெரியவில்லை.
“பையனை ஏன் மேலே படிக்க வைக்காமல் இப்படி கிராமத்திலேயே வைத்திருக்கிறீர்கள்?” என்று வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் கேட்கும்போதெல்லாம் சரியான பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பிக் கொண்டிருந்தார் என் தந்தை. வெட்டிப் பொழுது போக்குவது எனக்கே பொறுக்காமல் போகவே ஒருநாள் அம்மாவிடம் வெடித்து விட்டேன்.
“என்னை ஆரணியில் கொண்டு போய் பெரியம்மாவுடம் விட்டு விடுங்கள். நான் அங்கே படிக்கப் போகிறேன்” என்று சீறினேன்.
என் தாயாரும் என் வேதனையைப் புரிந்து கொண்டு, “அப்பாவிடம் சொல்லிப் பார்க்கிறேன்.” என்றார்.
“பையன் மேலே படிக்க ஆசைப்படுகிறன். ஆரணிக்குப் போகிறானாம். ‘இங்கே குளத்தையும் குட்டையையும் எத்தனை நாளைக்குச் சுற்றிக் கொண்டிருப்பது?’ என்று கேட்கிறான். அவனே அக்கறையாகக் கேட்கும் போது அனுப்பித்தான் பார்க்கலாமே” என்று அப்பாவிடம் சொன்னார்.
“அவனுக்கு வயதாகி விட்டது. இனி படிப்பு ஏறாது. ஆரணிக்குப் போனாலும் ஊர்தான் சுற்றுவான்” என்றார் தந்தை. “சரி. அதையும்தான் பார்த்து விடலாமே. பையனே அக்கறையோடு கேட்கிறானே! நாம் அவனைப் படிக்க வைக்கவில்லை என்ற பழி நமக்கு வேண்டாம். நாளைக்கே அனுப்பிவையுங்கள். என் அக்கா அங்கே இருக்கிறாள். அவள் பார்த்துக் கொள்வான். அக்காள் புருஷனுக்கு ஒரு கடிதம் எழுதிப் பையனிடம் கொடுத்தனுப்புங்கள். அவன் சாப்பாட்டுச் செலவுக்குப் பதிலாக இங்கிருந்து அரிசி மூட்டை அனுப்பி விடலாம்” என்றார்.
அப்பா ராத்திரியெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். பிறகு என்னை அழைத்து, “ஆரணிக்கு அனுப்புகிறேன். அங்கே போய் ஒழுங்காகப் படிப்பாயா? பழையபடி ஊர் சுற்றுவாயா?” என்று கேட்டார்.
“ஒழுங்காய்ப் படிக்கிறேன்” என்றேன்.
“அப்படியானால் விடியற்காலம் புறப்படத் தயாராயிரு. நாளை சனிக்கிழமை. சனி விடியல் பயணத்துக்கு ரொம்ப நல்ல நேரம்” என்றார்.
விடியற்காலம் ஐந்து மணிக்கு அம்மா தயிர் சாதம் கட்டிக் கொடுத்தார். அப்பா இரண்டு ரூபாயை என்னிடம் கொடுத்து, “இதைப் பத்திரமாக வைத்துக் கொள். அவசியமாகச் செலவு செய்ய வேண்டியிருந்தால் செலவழி. வீண் செலவு செய்யாதே! நான் அடுத்த வாரம் ஆரணிக்கு வந்து உன்னை போர்டு ஹைஸ்கூலில் சேர்த்து விடுகிறேன். பிரம்மதேசம் சுப்பிரமணிய அய்யர்தான் ஹெட்மாஸ்டர். அவர் எனக்குத் தெரிந்தவர்தான். அவரிடம் சொல்லி உன்னை முதல் ஃபாரத்தில் சேர்த்து விடுகிறேன்” என்றார்.
நல்ல கோடை மழை பெய்து குளம் குட்டைகள் எல்லாம் நிரம்பியிருந்த நேரம். குளிர்ந்த வேளையில் அம்மா கொடுத்த கட்டுச் சாதத்துடன் ஆரணிக்குப் புறப்பட்டு விட்டேன்.
நீர்த் தேக்கங்களில் தவளைகள் முறை வைத்துக் கத்திக் கொண்டிருந்தன. லேசான இருள் கவ்வியிருந்தது.
அப்பா என்ன வழி அனுப்புவதற்காக இரண்டு மைல் கூடவே நடந்து வந்தார். நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொண்டே வந்தார். வழியில் இருந்த நீர்த்தேக்கத்தின் அருகில் என்னைச் சாப்பிடச் சொன்னார். கட்டுச்சாத மூட்டையை அவிழ்த்து தயிர் சாதத்தைத் தீர்த்துக் கட்டினேன். தேக்கத்தில் கையைக் கழுவிக் கொண்டேன். “போய் வா, ஜாக்கிரதை” என்று அப்பா வழி அனுப்ப வேகமாக நடந்து எட்டு மணிக்குள் ஆரணியை அடைந்து விட்டேன்.
என்னைக் கண்டதும் என் பெரியம்மாவின் கணவருக்கு ஒரே ஆச்சரியம்!
“ஏண்டா நீ மட்டும் தனியாகவா வந்தாய்? வீட்டில் சொல்லாமல் வந்து விட்டாயா?” என்று கேட்டார். அடிக்கடி வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் போவது என் வழக்கமாதலால் அவர் அப்படிக் கேட்டார்.
அப்பா கொடுத்த கடிதத்தை நான் அவரிடம் நீட்டினேன். அதைப் படித்துப் பார்த்து விட்டு, “அப்படியா சங்கதி? பலே! இங்கே படிக்க வந்திருக்கிறாயா? வா, வா ரொம்ப நல்ல காரியம். கடைசியாக உன் அப்பா உன்னைப் படிக்க வைப்பது என்று முடிவு செய்து விட்டாராக்கும்” என்று சிரித்தார்.
பெரியம்மாவுக்கும் அவள் கணவருக்கும் என் மீது அன்பும் அக்கறையும் அதிகம்.
சில தினங்களுக்குள்ளாகவே அப்பாவும், அம்மாவும் கிராமத்தைக் காலி செய்து கொண்டு நிலங்களைக் குத்தகைக்கு விட்டு விட்டு ஆரணிக்கே குடி வந்து விட்டார்கள்.
போர்டு ஹைஸ்கூலில் எனக்குத் தனியாகப் பரீட்சை வைத்து என்னை ஃபஸ்ட் ஃபாரத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.
என் வகுப்பில் படித்த கிருஷ்ணாஜி, ராமு என்ற இரு மாணவர்களும் எனக்கு நெருங்கிய தோழர்கள் ஆயினர். மூவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் பிரியமாகப் பழகினோம். சேர்ந்தே ஊர் சுற்றினோம். சேர்ந்தே நாடகங்களுக்குப் போனோம். சேர்ந்தே சைக்கிள் விடப் பழகிக் கொண்டோம். சேர்ந்தே கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டோம்!
அப்பா ஆரணியில் ராமாயண உபந்தியாசம் செய்து அதில் வரும் வரும்படியைக் கொண்டு குடும்பத்தை நடத்தினார். எனக்குப் பள்ளிக்கூடச் சம்பளம் கட்டினார். நான் சைக்கிள் விடுவதையும் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையும் பற்றிப் பல பேர் அப்பாவிடம் போய் அடிக்கடி புகார் சொல்லிக் கொண்டிருந்தனர். நான் தோளுக்கு மிஞ்சிய தோழனாகி விட்டதால் அப்பா என்னை முன்போல் அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்தி விட்டார். ஒரு நாள் கோபமாக என்னை அழைத்து, “நீ இந்த மாதிரியெல்லாம் செய்து கொண்டிருந்தால் உன்னை வீட்டை விட்டே துரத்தி விடுவேன்” என்று மட்டும் கடுமையாக் எச்சரித்தார்.
“நான் சரியாய்த்தான் படிக்கிறேன்” என்று அப்பாவிடம் சொன்ன போதும் அதை அவர் நம்பவில்லை.
என் எதிரில் நிற்காதே போ” என்று கர்ஜித்தார்.
ஒரு வருடம் படித்து முடிந்ததும் பரீட்சை ரிஸல்ட் வந்தது. நான் கிருஷ்ணாஜி, ராமு மூவரும் மட்டும் நல்ல மார்க்குகள் வாங்கிப் பாஸ் செய்திருந்தோம். கணக்கில் எனக்கு நூற்றுக்கு நூற்றைந்து மார்க் கிடைத்தது.
அந்தப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் அத்தனை பேரும் அப்பாவின் உபந்நியாசத்துக்குத் தவறாமல் வருகிறவர்கள்.
நான் நல்ல மார்க்குகள் வாங்கியிருந்தது பற்றி அவர்களுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை.
என் தந்தையிடம் போய், “சாஸ்திரிகளே! உங்க பையன் பாஸ். ரொம்ப நல்ல மார்க்குகள் வாங்கியிருக்கிறான். வகுப்பிலேயே முதலாவதாகத் தேறியிருக்கிறான்” என்று பெருமை பொங்கச் சொல்லியிருக்கிறார்கள். அப்பா அதை நம்பவில்லை. என் கிளாஸ் டீச்சர் சந்தான கோபாலகிருஷ்ணய்யரே சொன்ன பிறகுதான் நம்பினார்.
ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும், சைக்கிள் விடப் பழகினாலும் நானும் என் தோழர்களும் படிப்பிலே ஊக்கமாக இருக்கிறோம் என்பதை எங்கள் கிளாஸ் டீச்சர் சந்தான கோபாலகிருஷ்ணய்யர் நன்கு அறிந்திருந்தார். எங்கள் செக்ஷ்னுக்கு அவர்தான் கிளாஸ் டீச்சர். தம்முடைய செக்ஷன் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக எங்களிடம் கணக்கு உட்பட முக்கிய கேள்வித் தாள்களை முன்கூட்டியே தந்து, இதை நன்றாகப் படித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று சூசகமாகச் சொல்லி விட்டார். முன்கூட்டியே அந்தக் கேள்விகள் கிடைத்து விட்டதால் நாங்கள் மூவருமே அந்தக் கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டோம், பரீட்சையில் அவர் கொடுத்த கேள்விகளே வந்ததால் சிறப்பாக எழுதி, நல்ல மார்க்குகள் வாங்கி விட்டோம். இதனால் எங்கள் செக்ஷ்னுக்கு நல்ல பெயர் கிட்டியது. என் தந்தையின் மதிப்பீட்டில் நானும் உயர்ந்து விட்டேன்.