உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/ஊருக்கு வந்த குறத்தி

விக்கிமூலம் இலிருந்து



ஊருக்கு வந்த குறத்தி

கிராமத்துப் பள்ளியில் ஆங்கிலம் கற்பதற்கு வழியில்லை. ஆங்கில எழுத்துக்களை ஆரூர் வாத்தியார் நரசிம்ம ஐயங்காரிடம் கற்றுக் கொண்டேன். அவர்தான் பஞ்சாயத்து ஸ்கூல் டீச்சர். கிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆரூரிலிருந்து மாம்பாக்கத்துக்கு தினம் தினம் நடந்தே வந்து போவார். நான் அவரிடம் படித்த மாணவன் என்பதில் அவருக்குப் பெருமை அதிகம். சமீபத்தில் ஒருநாள் அவர் என்னிடம் பேச விரும்பி என் வீட்டுக்குப் போன் செய்த போது நான் வீட்டில் இல்லாமற் போனது என் துரதிருஷ்டமே.

அந்த ஆசானிடம் எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முறையில் அந்தப் பெரியவரை நேரில் சென்று தரிசித்து வணங்கி விட்டு வரும் நன்னாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆங்கில எழுத்துக்கள் இருபத்தாறும் அவரிடம் கற்றுக் கொண்டவைதான். பிறகு பெரிய எழுத்து பாட புத்தகங்களை எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்து கொண்டதும் அவரிடம் தான்.

ஒரு நாள் எங்கள் கிராமத்துக்கு நரிக்குறவர் குடும்பம் ஒன்று வந்திருந்தது. அந்தக் குடும்பத்தினர் ஊர் ஓரத்தில் சத்திரத்துக்குப் பின்னால் மாந்தோப்பில் ‘முகாம்’ போட்டிருந்தார்கள். அவர்களில் இளம் வயது குறத்திப் பெண் ஒருத்தி மிக வசீகரமாயிருந்தாள். ஏறக்குறைய டி. ஆர். ராஜகுமாரி மாதிரி தோற்றம் உடையவள். ‘ஸெக்ஸ்’ உணர்வு இன்னதென்று புரியாத இரண்டுங்கெட்டான் வயசு என்னுடையது. அவளிடம் எனக்கு ஒரு ‘கிறக்கம்’ உண்டாயிற்று.

அவளைப் பார்ப்பதற்காகவே காலையிலும் மாலையிலும் அந்தத் தோப்புக்குப் போய் விட்டு வருவேன். அவளிடம் ஏதாவது வலியப் பேசி விட்டு வருவேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் மரத்தடியில் உட்கார்ந்து யாருக்கோ பச்சை குத்திக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட போது அவள் என்னைத் தொட்டுப் பச்சை குத்த வேண்டும் என்று அந்தரங்கமாய் ஓர் ஆசை என்னுள் எழுந்தது.

“பச்சை குத்த எவ்வளவு தர வேண்டும்?”

“ஒர்ணா குடு” என்றாள். வீட்டில் காசைத் திருடி எடுத்துக் கொண்டு போய் அவளிடம் கொடுத்தேன். என் இடது கையில் நானே பேணாவினால் M.S.V. என்று மூன்று எழுத்துக்களை எழுதி அவற்றின் மீது அப்படியே பச்சை குத்தச் சொன்னேன். அவள் என் இடது கையை இழுத்துத் தன் மடி மீது வைத்துக் கொண்டு (ஒரு கிளுகிளுப்பு) ஊசியால் சுருக் சுருக்கென்று குத்தியபோது எனக்கு அந்த வலி தெரியவில்லை. அந்தக் குத்தலில் ஓர் இன்பம் இருந்தது. இந்த உணர்வு எனக்குப் புதிய அனுபவம். இதன் பின்னணி ஸெக்ஸ்தான் என்பது எனக்கு அப்போது விளங்கவில்லை. பிற்காலத்தில் வயது முதிர்ந்து பக்குவம் பெற்ற பிறகே புரிந்து கொண்டேன். அந்தக் குறத்தியின் பல்வரிசை, ‘கொல்’ சிரிப்பு, தொப்புள் தெரியும் இளம் தொந்தி, டப்பா தட்டிக் கொண்டு ‘லல்லல்லல்லா’ பாடி டான்ஸ் ஆடியது எல்லாமே என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தின. அப்புறம் அவள் வேறு ஊருக்குப் போய் விட்டாள்.

அவள் போனபின் மாம்பாக்கமே ஒளி இழந்த மாதிரி எனக்குப் பட்டது. பச்சை குத்திக் கொண்டதற்குக் குறத்தியிடம் எனக்கிருந்த கிறக்கம் மட்டும் காரணமல்ல. என் இங்கிலீஷ் அறிவை அதாவது எம். எஸ். வி. என்று எழுதத் தெரிந்துவிட்ட புலமையைக் காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பமாக அது அமைந்து விட்டதும் ஒரு காரணமாகும்.

என் உடல் வளர்ச்சிக்கு ஏற்றாற் போல அந்த எழுத்துக்களும் என்னோடு சேர்ந்து பெரிதாக வளர்ந்து கொண்டேயிருந்தன. அப்புறம் அந்த எழுத்துக்களை நான் பார்க்கும் போதெல்லாம் அவை என்னைப் பார்த்து ‘அசடே!’ என்று அழைப்பது போலத் தோன்றுகிறது. இப்போது கூடச் சில நண்பர்கள் என் கையிலுள்ள அந்த எழுத்துக்களைப் பார்த்துவிட்டு “என்ன ஸார் இது? உங்க பேர் மறந்துவிடும் என்பதற்காகவா?” என்று ஜோக் அடிக்கிறாா்கள்.

இரண்டும் கெட்டான் வயதில் புரியாத் தனமாகச் செய்து விட்ட இந்த அசட்டுத்தனம் ஆயுள் முழுதும் நிரந்தரமாகி விட்டதை எண்ணும் போதெல்லம் வெட்கம் பிடுங்கித் தின்கிறது. இந்த எழுத்துக்களை யாரும் பார்க்காதபடி நான் முழுக்கை சட்டை போட்டு மறைத்துவிட முடியும். ஆனால் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அதை ஏன் மறைக்க வேண்டும்?

அறியாப் பருவத்தில் தெரியாத்தனமாகப் பச்சை குத்திக் கொண்டது பற்றி எண்ணும் போதெல்லாம் அந்தக் குறத்தியின் முகம்தான் என் கண் முன் தோன்றிச் சிரிக்கிறது! லல்லல்லல்லா!