பழைய கணக்கு/கொஞ்சம் இனிப்பு

விக்கிமூலம் இலிருந்து



கொஞ்சம் இனிப்பு—கொஞ்சம் கசப்பு

காஞ்சிப் பெரியவர்களை தரிசிப்பதற்காகச் சென்ற வாரம் கலவைக்குப் போனபோது, அப்படியே என் சொந்த கிராமத்தையும் போய்ப் பார்த்து விட்டு வந்தேன். கிராமத்தைச் சுற்றிலும் முட்செடிகள் அமோகமாய் வளர்ந்திருப்பதைத் தவிர பெரிய மாறுதல்கள் எதையும் காண முடியவில்லை.

சிறு வயதில் நான் வசித்த அந்தத் தென்னை மர வீட்டையும் எட்டிப் பார்த்தேன். பூட்டிக் கிடந்தது. “தென்னை மரம் போயிட்டுது” என்று முருகேச கவுண்டர் சற்று வருத்தத்தோடு சொன்னபோது எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

கலவைக்குப் போகும் வழியில் கரும்புத் தோட்டங்கள் கண்ணில் பட்டன. அந்தக் காலத்தில் என் தந்தை கரும்பு சாகுபடி செய்த பழைய நினைவுகள் தோன்றி என்னைப் பரவசத்தில் ஆழ்த்தின.

கிராமத்து எல்லையில், எட்டியம்மன் கோவிலுக்கருகில் எங்களுக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலங்கள் இருந்தன. ஆற்றுப் பாசன வசதி இல்லாததால் பெரிய கிணறுகள் வெட்டி ஏற்றம் போட்டு வயலுக்கு நீர் பாய்ச்சுவார்கள். வடாற்காடு மாவட்டம் முழுதுமே ஏறக்குறைய இப்படித்தான்.

என் தந்தை அந்த வயல்களுக்குப் பக்கத்தில் பெரிய கிணறு வெட்டி ஏற்றம் போட்டிருந்தார். அதில் ஊற்றுத் தண்ணீர் எப்போதும் சுரந்தபடி இருக்கும். கிணற்றங்கரை மேட்டில் வாழையும். அகத்தியும், முருங்கையும் ஆண்டு முழுவதும் பலன் தந்து கொண்டிருக்கும்.

ஒரு வருடம் கரும்பு பயிருட்டுப் பார்க்க விருமபினார் என் தந்தை.

நெற்பயிரைத் தவிர வேறு எதுவும் விளைந்து பார்த்திராத எனக்கு இது சற்று ஆச்சரியமாகவும் புது அனுபவமாகவும் இருந்தது. கரும்பு, வெல்லம், கரும்புச்சாறு இதெல்லாம் இலவசமாகச் சாப்பிடலாம் என்ற நினைப்பே இனிக்கச் செய்தது

நிலத்தை ஆழ உழுது பாத்திகள் வெட்டி கரும்புக் கணைகளைக் கொஞ்சம் முனை தெரியும்படி மண்ணில் ஊன்றி நீர் பாய்ச்சிய போது அந்தக் காட்சியைக் கண் கொட்டாமல் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் நிலத்தில் ஊன்றிய அந்தக் கரும்புத் துண்டுகள் முளைவிட்டு வளர்ந்தபோது பெரிய ஆச்சரியம் நிகழ்வதுபோல் தோன்றியது.

கரும்பு முற்றி சாகுபடிக்குத் தயாரானதும் ஒரு நல்ல நாள் பார்த்து கரும்பு வெட்டத் தொடங்கினார்கள்.

கிணற்றடியில் பக்காவாக ஒரு குடிசை போட்டு அடுத்த சில தினங்களுக்குள் நாங்கள் அந்தக் குடிசைக்குக் குடியேறினோம்.

கிணற்றுக்குப் பக்கத்திலேயே கரும்புச்சாறு பிழியும் ஆலையை நிறுவினோம்.

ஆலை இயக்கத்துக்கு இரண்டு மாடுகள் போதவில்லை. அந்த மாடுகளுக்கு ஓய்வு கொடுக்கும்போது மாற்றக வேறு மாடுகள் தேவைப்பட்டன. இன்னொரு ஜோடி மாடுகள் விலைக்கு வாங்கி ஷிப்ட் முறையில் வேலை வாங்கப் பொருளாதார வசதி இல்லை.

புதிதாக விலை கொடுத்து மாடுகள் வாங்குவதைக் காட்டிலும் யாரிடமாவது ஒரு மாதத்துக்கு மாடுகளை இரவலாக வாங்கிக் கொள்ளலாம் என்பது அம்மாவின் யோசனை.

கடுகனூரிலுள்ள என் மாமாவிடம் மாடுகள் ஏராளமாயிருந்தன. ஆனாலும் அப்பாவுக்கு அவரிடம் கேட்க இஷ்டமில்லை.

“நான் கேட்கட்டுமா?” என்று அப்பாவிடம் சொன்னபோது, “கேட்டுப் பார்” என்றார் அப்பா, மாமாவுக்கு என்னிடம் அளவு கடந்த அன்பு ஆனதால் நான் கேட்ட உடனேயே பதில் ஏதும் சொல்லாமல் சந்தோஷமாக மாடுகளை அனுப்பி வைத்து விட்டார்.

கரும்புச் சாற்றை இரும்புக் கப்பரையில் ஊற்றி, மணிக்கணக்கில் காய்ச்சி, வெல்லப் பாகு பக்குவ நிலைக்கு வரும் போது பொன் பதமாக அந்தப் பாகைப் பலகைக் குழியில் ஊற்றி வெல்லம் தயாரிப்பது ஓர் அபூர்வக் கலை. அந்தக் கலையில் நான் கைதேர்ந்த அனுபவசாலியாகி விட்டேன்.

கப்பரையில் எத்தனை குடம் பால் ஊற்ற வேண்டும்? பால் காயும் போது திரண்டு வரும் அழுக்கை எப்படி அகற்ற வேண்டும்? வெல்லப்பாகு பக்குவம் பெறும் நேரம் தெரிந்து எப்போது அதைப் பலகைக் குழியில் ஊற்ற வேண்டும்? இவ்வளவும் எனக்கு அத்துபடி.

மாங்காய், தேங்காய் இவற்றைக் கோப்பரை வளையத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொதிக்கும் வெல்லப் பாகோடு சேர்த்துப் பதமாக வேகவைத்ததும் அவற்றை எடுத்துச் சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சி அடைவோம். இது கூடக் கொஞ்ச நாட்களுக்குத்தான். அப்புறம் இனிப்புப் பண்டங்களே திகட்டிப் போகும்.

குடிசையிலிருந்து மணக்கும் அம்மா சமையலும், கப்பரையில் கொதிக்கும் வெல்ல வாசனையும் சேர்ந்து மூக்கைத் துளைக்கும்.

இனிப்புக்கு ஒரு மாற்றாக அம்மா எனக்கும் என் தந்தைக்கும் காரமான சமையலாகவே செய்து போடுவார். பொறிக் கொள்ளு, கார அடை, அதற்குத் தொட்டுக் கொள்ள மிளகாய் சட்னி இத்தியாதி......

நல்ல வெயில் வேளையில் சில்லென்ற கிணற்று நீரில் இறங்கி நீச்சலடித்துக் குளித்து விட்டுக் கரையேறும் போது பகாசுரப் பசி எடுத்து விடும்.

அந்தப் பசி வேளைக்கு அம்மா சமைத்துப் போடும் உணவு தேவாமிருதமாயிருக்கும். சாப்பாட்டுக்குப் பின் ஒரு தூக்கம் போடத் தோன்றும்.

இம்மாதிரி ஒரு மாதம் அல்லது நாற்பது நாட்கள் பொழுது போவதே தெரியாமல், கரும்புச் சாகுபடி வேலையில் மூழ்கி விடுவோம்.

திடீரென்று ஒருநாள் மாமா அனுப்பிய மாடுகளில் ஒன்று கீழே விழுந்து கால்களை உடைத்துக் கொண்டது. வாயில் நுரை நுரையாய்ப் பொங்கி வழிந்தது.

கரும்புச் சோகையும், அழுக்கு வெல்லப் பாகும் சாப்பிட்டதன் விளைவாய் அதற்கு நினைவு தப்பிப் போயிற்று. காலை உதைத்துக் கொண்டிருந்த மாடு அன்று மாலைக்குள் செத்துப் போயிற்று. மாமாவுக்கு என்ன பதில் சொல்வதென்று அப்பாவும், அம்மாவும் கலங்கிப் போனார்கள். எனக்கோ மாமாவைப் பார்ப்பதற்கே தயக்கமாயிருந்தது.

மிகமிக உற்சாகமாக, இனிமையாகத் தொடங்கிய அந்தக் கரும்புச் சாகுபடி சீசன் கடைசியில் பெரும் சோகத்தில் முடிவடைந்தது.