உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/மூன்று கால கட்டங்கள்

விக்கிமூலம் இலிருந்து



மூன்று கால கட்டங்கள்

ங்கள் கிராமத்தில் வருடா வருடம் மாரியம்மன் திருவிழா மிகச் சிறப்பாக நடத்துவார்கள். கரகம் ஜோடித்து உச்சியில் எலுமிச்சம்பழம் வைத்து அம்மனைத் தலைமேல் தூக்கிக் கொண்டு வீதிவலம் போவார்கள். தாரை, தப்பட்டை, கொம்பு வாத்தியம், மேள வாத்தியம் எல்லாமாகச் சேர்ந்து போடுகிற சத்தத்தில் ஊரே அமர்க்களப்படும்.

அம்மனுக்குப் படைக்க எங்கள் விட்டில் கூழ் காய்ச்சுவார்கள். உங்களுக்குக் கிராம வாழ்க்கை பரிச்சயமென்றால், கிணறுகளில் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைக்கும் ‘சால்’ என்ற பெரிய தொட்டியும் பரிச்சயமாகி இருக்கும். அந்தத் தொட்டியைப் பளபளவென்று தேய்த்துச் சுத்தமாக்குவார்கள். கோலம் போட்டு வைத்துள்ள வீட்டு வாசலில் அதைக் கொண்டு வைத்து காய்ச்சிய கூழைக் அந்தச் சால் நிறைய ஊற்றி நிரப்பிப் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். அப்புறம் அந்தக் கூழ் முழுதும் ஏழைகளுக்கு விநியோகம் ஆகிவிடும்.

கூழ் சாப்பிடுவது என்பதை மேட்டுக் குடிமக்கள் தங்கள் அந்தஸ்துக்கு ஒவ்வாததாய்க் கருதினர். உழவர்களும், உழைப்பாளிகளும், ஏழை எளியவர்களும் சாப்பிடுவதற்காகவே ஏற்பட்ட தானியம் கேழ்வரகு என்பது அவர்கள் எண்ணம். அக்கிரகாரத்துக்குள் எல்லோருமே அரிசிச் சோறுதான் சாப்பிடுவார்கள். அங்கே கூழ் தலை காட்டாது. கூழ் சாப்பிட்டால், 'பாவம், கூழ் சாப்பிடுகிறர்கள்’ என்ற அனுதாபத்துக்கும் கேலிக்கும் இலக்காவார்கள். எனக்குக் கூழ் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். என் குடும்பம் அப்போது வசதியான நிலையில் இருந்தாலும் எனக்குப் பிடிக்கும் என்பதற்காக விழாக் காலங்களில் சாலில் கூழ் நிரப்பும் போதே என் தாய் தனியாகக் கொஞ்சம் எடுத்து வைத்து எனக்கும் என் போன்ற சிறுவர்களுக்கும் கொடுப்பார்கள். அதில் கெட்டித் தயிரை விட்டுப் பிசைந்து சாப்பிடும்போது கிடைக்கும் ஆனந்தத்துக்காகவே ஆயிரம் முறை பிறப்பெடுக்கலாம். கூழ் சாப்பிட்டால் வயிறு ‘பம்’மென்று நிரம்புவதுடன் உள்ளமும் உடலும் குளிர்ந்து போகும். மாரியம்மன் மனம் குளிர்ந்து ஊருக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் கூழ் படைப்பதாய்ச் சொல்வார்கள். எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள கடுகனூரில் என் மாமா வசித்து வந்தார். அவர் ஊரில் விழா என்றாலும் நான் நடந்து போய் கூழ் சாப்பிட்டு விட்டு, தெருக்கூத்தும் பார்த்து விட்டுத்தான் ஊர் திரும்பி வருவேன். நானாகவே விரும்பிக் கூழ் சாப்பிட்ட முதல் கால கட்டம் இது.

பின்னர் எங்கள் குடும்பத்தின் பொருளாதாரம் குன்றி, மிஞ்சி இருந்த கொஞ்சம் நஞ்சம் சொத்து சுகங்களும் போய் குசேலர் நிலைக்கு வந்து விட்டோம். அந்த வறுமையை விவரித்துச் சாத்தியமில்லே. என் அம்மாவுக்குக் கட்டிக் கொள்ள மாற்றுப் புடவையில்லாத காரணத்தால், இருந்த ஒரே புடவையை இரண்டாகக் கிழித்து, ஒன்று கட்டியிருக்கையில் இன்னென்றைத் துவைத்துப் போட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். இது என் குடும்பத்தின் அன்றைய வறுமை நிலைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு. அரிசி அப்போது எங்களுக்குக் கனவுச் சோறாக இருந்தது. கேழ்வரகு ரொம்ப மலிவு விலை என்ற போதிலும் அதை வாங்கும் சக்தி கூட இல்லாமல் கால்படி, அரைப்படி என்று குடியானத் தெருவிலிருந்து ரகசியமாகக் கடனாக வாங்கி வந்து காய்ச்சிக் குடிப்போம். வறுமையின் கட்டாயத்தால் நான் கூழ் குடிக்க நேர்ந்த இரண்டாவது கால கட்டம் அது.

முப்பது வருடத்துக்குப் பின்னர் இப்போது எனக்கு வாழ்க்கையில் போதிய வசதிகள் கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலும் நான் தினமும் சாப்பிடுவது கூழ் தான். இதற்குக் காரணம் என் விருப்பமுமில்லை, வறுமையுமில்லை. எனக்கு டயபடீஸ் இருப்பதால் அடிக்கடி எடுக்கும் பசியைத் தணிக்க அரிசிச் சோற்றைக் காட்டிலும் கூழ் கன ஆகாரமாயிருப்பதுதான். டயபடீஸ்காரர்கள் அரிசிச் சோறு அதிகம் சாப்பிடக் கூடாது என்பதால் அவர்களுக்கு அடிக்கடி பசி எடுத்து விடுகிறது. கூழ் டயபடீஸுக்கு நல்லது அல்ல என்றாலும், கெடுதலும் அல்ல என்று டயாபடீஸ் டாக்டர் நிபுணர் திரு விசுவநாதன் சொல்கிறர். எனவே பசியைத் தவிர்க்க இது ரொம்பவும் பயன்படுவதால் கூழைக் கட்டாயமாக வேண்டிச் சாப்பிடுகின்றேன். விரும்பிச் சாப்பிட்டது முதல் நிலை. வருந்திச் சாப்பிட்டது இரண்டாவது நிலை, தெரிந்து சாப்பிடுவது இப்போது மூன்றாவது நிலை.

இந்த மூன்று கால கட்டங்களிலும் பல மாற்றங்கள் இருந்தாலும் ஒன்றில் மட்டும் மாற்றமே இல்லே. அது கூழின் ருசி!