பழைய கணக்கு/மாடி வீட்டு மாமா
மாம்பாக்கத்திலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள கடுகனூருக்குச் செல்ல செய்யாற்றைக் கடக்க வேண்டும். அந்த ஆற்றில் எப்போதாவது அபூர்வமாகவே வெள்ளம் வரும். சில நாட்களே ஓடும் அந்த வெள்ளம் செய்யாற்றின் ஒரு வருட அழுக்கைத் துப்புரவாக்கிவிட்டு ஓய்ந்து விடும். ஆற்று மணலில் நடந்து போய் நட்டாற்றில் ஊற்றுத் தோண்டி அதிலிருந்து அடக்கமாக வெளிப்படும் தெள்ளிய நீரில் குளித்து மகிழ்வதைப் போன்ற சுகம் ஐந்து நட்சத்திர ஒட்டல் ஸ்விம்மிங் பூலில் கிடைக்காது. நான் ஊற்றுத் தேக்கத்தில் மல்லாந்து படுத்துக் குளித்து மகிழ்வதற்காகவும் மாமா வீட்டு மாடி மீது ஏறிப்போய் ‘ஏரியல் வியூ’வில் பசுமையான கிராமத்து வயல் வெளிகளைப் பார்ப்பதற்காகவும் அடிக்கடி கடுகனூர் போய் வருவேன். அந்தக் கிராமத்தில் ஒரே ஒரு மாடி வீடுதான் உண்டு. அது என் மாமாவின் வீடு. “எங்க மாமா பெரிய பணக்காரர். மாடி வீட்டுக்காரர்” என்று மற்ற சிறுவர்களிடம் சொல்லிக் கொள்வதில் தனிப் பெருமை கொள்வேன்.
என்னிடத்தில் பற்றும் பாசமும் மிக்கவர் என் மாமா. “பையா, பையா!” என்று ஆசையோடும் அன்போடும் அழைத்துக் கொஞ்சுவார். அவருக்கு இரண்டு மனைவிமார்கள். இருவருக்குமே குழந்தைகள் இல்லாததால் மாமாவுக்கு அது பெரும் குறை. அந்தக் குறையைப் போக்க என்னிடத்தில் அளவு கடந்த பிரியம் காட்டினார். வெளியூருக்குப் போய் வந்தால் எனக்கு கிச்சிலி மிட்டாய் வாங்கி வந்து கொடுப்பார். அரிசி பெப்பர்மிண்ட்டுக்கு மேல் நான் பார்த்திராத காலத்தில் கிச்சிலி மிட்டாய் எனக்கொரு அதிசயப் பொருளாக இருந்தது.
ஒரு சமயம் பெரிய நெல்லிக்காய் அளவில் அவர் வாங்கி வந்திருந்த பெப்பர்மிண்ட்டைக் கண்ட போது எனக்கு ஏற்பட்ட வியப்பு பின்னொரு காலத்தில் தாஜ்மகாலைப் பார்த்த போது கூட உண்டாகவில்லை. அந்த மிட்டாயை வாயில் போட்டுச் சிறிது நேரம் சுவைத்து விட்டு, மறுபடி அதை வெளியில் எடுத்துத் துணியால் துடைத்துப் பத்திரமாக வைத்திருந்து, மறுநாள் எடுத்துச் சாப்பிடுவேன். இம்மாதிரி அந்த மிட்டாயை மூன்று நான்கு நாட்கள் வரை கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்துக் கரைத்துத் தேய்பிறையாக்கிய நிகழ்ச்சி இன்றும் நினைவிலுள்ளது.
என் மீது இத்தனை அன்பு கொண்டு இத்தனை பெரிய பெப்பர் மிண்ட் வாங்கித் தந்த அந்தப் பணக்கார மாமா, பிற்காலத்தில் நொடித்துப் போனது என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.
பிற்காலத்தில் நான் சென்னையில் வேலை ஏதுமில்லாமல் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தபோது அவர் சென்னைக்கு வந்திருந்தார். அவரைத் தகுந்தபடி உபசரிக்கவோ, ஊரைச் சுற்றிக் காட்டவோ வேண்டிய பொருளாதார வசதி என்னிடம் இல்லை. ஆனாலும் மாமாவை ஒரு சினிமாவுக்காவது அழைத்துப் போக வேண்டுமென்று விரும்பினேன். வள்ளித் திருமணம் என்ற தமிழ் பேசும் (பாடும்) படம் அப்போது கெயிட்டி தியேட்டரில் ஒடிக் கொண்டிருந்தது. டி. பி ராஜலட்சுமி வள்ளியாகவும், வி. ஏ. செல்லப்பா வேலன், வேடன், விருத்தனாகவும் நடித்த படம் அது.
யாரிடமோ ஒரு ரூபாய் கடன் கேட்டு வாங்கிக் கொண்டு மாமாவை கெயிட்டி தியேட்டருக்கு நடத்தியே அழைத்துச் சென்றேன். தியேட்டர் வாசலில் பெரும் கூட்டம் டிக்கெட்டுக்கு முண்டியடித்துக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் புகுந்து எட்டணாவுக்கு இரண்டு பெஞ்ச் டிக்கட்டுகள் வாங்கி விட்டேன். முதல் வரிசையில்தான் இடம் கிடைத்தது. அதாவது வெள்ளித் திரைக்கும் எங்கள் முதல் வரிசை பெஞ்சுக்கும் இடையே சோடா கலர் விற்பவர்களைத் தவிர எந்தவித இடையூறும் இல்லை. மாமாவுக்குப் பரம சந்தோஷம். கிராமத்து மனிதர். தெருக்கூத்து தவிர வேறு எதுவும் பார்த்து அறியாதவர். சென்னைக்கு அது தான் முதல் விஜயம். சினிமா என்ற பேராச்சரியத்தை அப்போது தான் முதல் முதல் தரிசிக்கிறார் படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியேறும் போது பெரும் கூட்டம் சாடிக் கொண்டு வெளியேறிய காட்சி கண்டு மலைத்துப் போனார்.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் முதல் வகுப்பு டிக்கட் வாங்கி அவரைப் படம் பார்க்க அழைத்துச் சென்றதை மிகப் பெருமையாக எண்ணிக் கொண்டார். சினிமாவில் முதல் வகுப்பு என்பது கடைசியாகத்தான் இருக்கும் என்பது அப்பாவி கிராம வாசியாகிய அவருக்கு விளங்கவில்லை.
வீட்டுக்குத் திரும்பியதும் ரொம்பப் பெருமையோடு என் தாயாரிடம் “பையன் என்னை முதல் வரிசையில் எல்லோருக்கும் முன்னால் கொண்டு போய் உட்கார வைத்து விட்டான்” என்று சொல்லிக் கொண்டார்.
அதுதான் அதம பட்சம். கடைசி வகுப்பு என்பதை நான் அவருக்குக் கடைசி வரை சொல்லவே இல்லை. மாடி வீட்டில் வாழ்ந்த மாமாவிடம் பெரிய பெரிய மிட்டாய்கள் வாங்கித் தந்த பணக்கார மாமாவிடம் ‘கடைசி வகுப்பு டிக்கட் வாங்கி சினிமா காட்டினேன்’ என்ற ‘குட்டை’ உடைத்து அவர் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பவில்லை நான்!