உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/என் முதல் பஸ் பயணம்

விக்கிமூலம் இலிருந்து



என் முதல் பஸ் பயணம்

வானம் பார்த்த பூமிகளில் வடாற்காடு மாவட்டமும் ஒன்று. வேர்க்கடலை, சோளம், கம்பு போன்ற புன்செய்ப் பயிர் சாகுபடி அதிகம். சாகுபடி காலங்களில் தவிர மற்ற நாட்களில் விவசாயிகளிடம் பண நடமாட்டம் இருக்காது. கையில் காலணா இல்லாமலே கிராம மக்கள் காலத்தை ஓட்டி விடுகின்ற தந்திரத்தைக் கற்று வைத்திருந்தார்கள்!

வறட்சிக் காலங்களில் ஏழை மக்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பது, சாகுபடி காலங்களில் அந்தப் பணத்துக்கு ஈடாகக் கொல்லைகளில் விளையும் வேர்க்கடலைகளை அளந்து வாங்கிக் கொள்வது என்று ஒருவகை வட்டி வியாபாரம் அந்தக் காலத்தில் நடந்து வந்தது. அந்த வியாபாரிகளில் என் தந்தையும் ஒருவர்.

இப்படி வசூலிக்கும் வேர்க்கடலைகளே உலர்த்தி, அவற்றை மொத்தமாகக் கட்டி வைத்து, நல்ல விலை வரும் வரை காத்திருந்து, மொத்த வியாபாரி யாரிடமாவது அதிக லாபத்துக்கு விற்பார்கள். வசூல் செய்யும் கடலைக்காயை உலர்த்தி வைக்க விஸ்தாரமான நிலப்பரப்பு தேவைப்படும். எங்கள் ஊரில் அதற்குப் பொருத்தமான இடம் சுடுகாடுதான்!

என் தந்தையைப் போலவே அந்த வியாபாரத்தில் ஈடுபட்ட வேறு சிலரும் உலர்த்துவதற்கு அந்த மயான பூமியைத்தான் பயன்படுத்தினார்கள். இப்படி ஒரு மாத காலம் அந்த மயான பூமி முழுவதும் வேர்க்கடலை மயமாய்ப் பரந்து கிடக்கும். சவாரி வண்டிகளின் கூண்டுகளை அங்கே கொண்டு வைத்துக் கொண்டு அதற்குள் உட்கார்ந்து காவல் புரிவார்கள். தினமும் ரிலீவிங் ஸ்டேஷன் மாஸ்டர் போல் நான் போய் அப்பாவை வீட்டுக்கு அனுப்புவேன். சிறு பையனாக இருந்த காரணத்தால் இரவு நேரக்காவலுக்கு மட்டும் என்னை அனுப்ப மாட்டார்கள்.

அந்த மயானத்தை அடுத்து ஒரு ரோடு. ஆரணிக்கும் செய்யாற்றுக்கும் அந்த வழியாக ஒரே ஒரு பஸ் போய் வரும். மயானத்திலிருந்தபடியே அந்த பஸ்ஸின் வரவை ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பேன். அதுவரை நான் பஸ்ஸில் பயணம் செய்தது கிடையாது. என்றாவது ஒரு நாள் அதில் பயணம் செய்து பார்த்து விடவேண்டுமென்று விரும்பினேன்.

ஒருநாள் அப்பாவுக்குத் தெரியாமல் களத்திலிருந்து கொஞ்சம் வேர்க்கடலையை வாரி எடுத்துத் துணியில் மூட்டை கட்டிக் கொண்டு போய் பல சரக்குக் கடையில் விற்று இரண்டணா தேற்றிக் கொண்டேன். பஸ் வருகைக்காக அந்த ரோடு ஓரத்தில் போய்க் காத்திருந்தேன் தூரத்தில் பஸ் வருவது தெரிந்ததும் கையை வீசி நிறுத்தும்படி அபிநயம் செய்தேன்.

நின்றது.

“எங்கே போவனும் தம்பி?” கண்டக்டர் கேட்டார்.

“ரெண்டணா வச்சிருக்கேன். அதற்கு எங்கே கொண்டு போய் விட முடியுமோ. அங்கே விட்டுவிடு” என்றேன்.

“ஏறிக்கொள்” என்றார்.

மூன்று மைல் தொலைவிலுள்ள மாமண்டூர் கிராமம்வரை கொண்டு போய் விட்டார். ஜன்ம சாபல்யம் தீர்ந்தது. அங்கிருந்து நடந்தே திரும்பி வந்து சேர்ந்தேன். இந்த இடை வேளையில் என் அப்பா களத்துக்கு வந்து பார்த்திருக்கிறார், சவாரிக் கூண்டில் என்னைக் காணாமல் திடுக்கிட்டுப் போயிருக்கிறார். சுற்று முற்றும் தேடிப் பார்த்திருக்கிறார். “பையனுக்கு என்ன ஆபத்தோ? எங்கே போனானோ?” என்று பயந்து போய் குளம் குட்டைகளெல்லாம் வலை வீசியிருக்கிறார். கடைசியில் நான் மாமண்டூரிலிருந்து நடந்தே வருவதைக் கண்டு விட்டு “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டாா்.

நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். உண்மை பேசியதற்காக எனக்கு அன்று கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா? செம்மையான உதைதான்! புளியமிலாறு பிய்ந்து விட்டது. முதுகெல்லாம் ரணம்! அழுது அழுது கண்கள் வீங்கிப் போயின.

அப்பா அடித்துத் துன்புறுத்தியதால் அந்த விரக்தியில் மனம் முறிந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டே போய் விட்டேன். சென்னையை இலக்காக வைத்து என் பாதயாத்திரையைத் தொடங்கினேன். முதலில் குப்படிச்சாத்தம், (தி. மு. க. ஆற்காடு வீராசாமியின் கிராமம்) அப்புறம் கலவை, அப்புறம் ஆற்காடு-ஆற்காட்டில் உறவினர் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு, இரண்டாவது கட்டமாக சென்னை நோக்கிப் பயணம்— இதுதான் என் திட்டம்.

இடுப்பில் ஒரு வேட்டி. தோள் மீது காசிப்பட்டுத் துண்டு. ஆறு மைல் தூரத்திலுள்ள கலவையைத் தாண்டி ஆற்காடு நோக்கி நடக்கிறபோது கால் வலி தாங்க முடியவில்லை. இரட்டை மாட்டு வண்டி ஒன்று போய்க் கொண்டிருந்தது. அந்த வண்டிக்காரர் நிம்மதியாக வண்டிக்குள்ளேயே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

நான் அந்த வண்டிக்காரரை எழுப்பி “நீங்க நல்லாப் படுத்துத் தூங்குங்க. நான் வண்டி ஒட்டுகிறேன்” என்றேன். அவர் சந்தோஷமாய் ஒப்புக் கொண்டார்.

எனக்கு வண்டி ஓட்டத் தெரியும். மாடுகளை அதட்டி வால்களை முடுக்கிவிட்டு வண்டியை வேகமாகச் செலுத்தினேன். மாடுகளின் சலங்கை ஒலி காதுக்கு இனிமையாக இருந்தது. ஆற்காட்டை இன்னும் ஒரு மணி நேரத்தில் அடைந்து விடலாம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம். நான் அதுவரை ஆற்காடு பார்த்ததில்லை.

இந்தச் சமயம் பார்த்துப் பின்னால் ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்ஸின் முன் சீட்டில் என் தந்தை உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்து போய் வண்டிக்குள் ஆமை போல் அடங்கிக் கொண்டேன். அப்படியும் என் சிவப்பு மேல் துண்டு (காசிப்பட்டு) என்னை அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது. “அதோ, அதோ பையன்!” என்ற என் தந்தையின் குரல். பஸ் நின்று விட்டது. என்னைத் தேடிப் பிடிப்பதற்காக ஸ்பெஷல் பஸ் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்த என் தந்தை என்னைக் கண்டதும் கண்கலங்கி விட்டார்.

“உன்னை அடித்தது தப்புதான். அதற்காக நீ இப்படியா சொல்லாமல் வந்து விடுவது? ஊரில் ஒரு கிணறு பாக்கி இல்லாமல் தேடிப் பார்த்து விட்டோம். நீ எனக்கு ஒரே மகன். பிள்ளைப் பாசம் கேட்கவில்லை. அன்பினால்தானே அடித்தேன்; நீ இப்படிச் செய்யலாமா? உன் அம்மா உன்னைக் காணாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். வண்டியை விட்டு இறங்கி வா. வீட்டுக்குப் போகலாம்” என்று அழைத்தார். நான் சற்று பிகு செய்துவிட்டு அப்புறம்தான் இறங்கி வந்தேன்.

காலையில் குப்படிச்சாத்தம் பக்கமாக நான் நடந்தே போய்க் கொண்டிருந்ததை எதிரில் வந்த பள்ளிச் சிறுவர்கள் பார்த்து விட்டு என் தந்தையிடம் போய்ச் சொல்லியிருக்கிறர்கள். உடனே என் அப்பா ஸ்பெஷல் பஸ் ஏற்பாடு செய்து கொண்டு என்னைத் தேடி வந்திருக்கிறார். அப்புறம் என்ன செய்ய? நான் அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு அப்பாவோடு ஊர் போய்ச் சேர்ந்தேன். ஆசை தீர இன்னொரு பஸ் பயணம்!