பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

135



இடையறாது இறைவனைத் துதித்தால் பாவம் அணுகாது. ஒரோவழி அணுகினாலும் அரனடிக்கே வைத்த பக்தியைச் சாதனமாகக் கொண்டால், அது மேலும் தீவிரமாக வீழ்த்திவிடாது.

கல்வியும் ஞானமும்

இந்தப் பயிற்சிக்குக் கல்வியும் ஞானமும் தேவை. மானுடப் பிறவி பயனுடைய பிறவியாதல் கல்வியினாலேயாம். அதனாலன்றோ தமிழ்மறை ‘கற்க’ என்றது.

“கற்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பதே நல்லது” என்றும் “அறியாமையே தீவினையின் மூலவேர்” என்றும் பிளேட்டோ கூறினார்.

யெளவன இத்தாலி கண்ட மாஜினி “கல்வியே ஆன்மாவின் உணவு; கல்வி இல்லையேல் நமது சக்திகள் ஸ்தம்பித்துவிடும்; பயன் தரா” என்றான்.

கல்வியின் துறைகள் பலப்பல. அதில் துறைதோறும் கல்வி மெய்ப்பொருள் கல்வி என்று பிரித்துப் பார்க்க வேண்டும். “நூலறிவு வந்துவிடும், மெய்ப்பொருள் அறிவு வரத் தயங்குகிறது” என்பர் சிந்தனையாளர்.

முறையான கல்வி மனிதனைச் சான்றோன் ஆக்கும்; ஞானியாக்கும். திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் மெய்ப்பொருள் விளக்க நூல்கள் ஆகியவற்றை உண்மை உணர்த்தும் நூல்கள் என்று கூறலாம்.

உண்மை நூல்களைக் கல்லாதவர் மனத்தில் கடவுள் அணுகவும் மாட்டான். ஒரோவழி அணுகி வந்தாலும் அவர்தம் அறிவில், உள்ளத்தில் நின்றருள் செய்ய மாட்டான். “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்பது திருமந்திரம். திருஞானசம்பந்தரும் “கற்றல் கேட்டல் உடையார் பெரியார்” என்றார். நமது திருநாவுக்கரசர்,