உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

உக


கொண்டிருந்தன! பரிமேலழகர், பரிமேலுக்கும் மேலாகி விரிவிசும்பேறிய கதை இப்படிப்பட்டதே!]

வடமொழியிலுள்ள பல்துறை நூல்களையும் ஆழ்ந்து கற்ற வடமொழிப்புலமைசான்ற அவர் தேவையற்ற இடங்களிலெலாங்கூடத் தம் அறிவகலம்(!) பிறர்க்கு விளங்குமாறு - அவற்றை (அவ்வடமொழி நூற் செய்திகளை) இடையிடையிடுக்கில் நுழைத்து நிறுத்தியுள்ளமையால் - அன்று வடமொழிமயக்கந் தெளிவுறாதிருந்தவராகிய நம்மவர் - ஒருவகை அறிவுமதிப்போடேயே அவ்வுரையைப் போற்றிக் கற்பாராயினர்!

அவர் பார்ப்பனராக இருந்தமையால் அவர் உரையானது அதன் உண்மைமதிப்புக்கும் மேலாக, ஒராயிரம் மடங்கு உயர்த்தித் தூக்கப் பெற்றது! பார்ப்பனரும் தூக்கினர்; பார்ப்பனரைத் தூக்கித் தூக்கியே தோளுஞ் சுவலுந் தொய்வடைந்தவராகிய நந்தமிழரும் தூங்கியவாறே தூக்கினர்! இவ்வாறு, - தூக்கு தூக்கென்று தூக்கி - அவருரைக்கு நிகருரையே இல்லை என்றவாறான ஒரு நிலையையும் இம் மண்ணில் கருத்தேற்றி, அதனை நிலவுவிப்பாருமாயினர்! பாரித்துரைக்கப் பெற்றுள்ள அக்கரவுரைக்கும் மேலாகத் - தமிழ்மான மீட்புக்கான உயரிய ஒரு பேருரையைச் செய்யவேண்டும் என்னும் வேட்கையும் - அறிவுமதுகையும் முயற்சிப்பாடும் ஆழ்ந்த அடிமையுணர்வு வயப்பட்டிருந்த அன்றைய மயக்கத் தமிழகத்தில் எப்புலவனுக்கும் எட்டாதனவாகவே நின்றன! எட்டு நூற்றாண்டுகளாக நெட்ட நடையிடையிட்ட நிலைமை, இது!

பிற்றைக் காலத்தினின்று - இற்றைக் காலம் வரைக்குமாக, ஒரு நூற்றுவர்க்கும் மேலான எண்ணிக்கையர் பலவகைப்பட உரைவரைந்துள்ளனர்! இவருள், பரந்து நிற்கும் முழுமையுரை செய்ய முயன்றவர் விரல்விட்டெண்ணத் தக்க விறலவரே! அவருள், - பன்மொழிப்புலவர் - அப்பாத்துரையாரையும் அடுத்து நம் செந்தமிழ்ப்பாவாணரையும் சிறக்கச் சுட்டலாம். முன்னவரின் முனைப்பு - விரிவுரைப்பு முயற்சி; பின்னவராகிய பாவாணரின் முனைப்பு, மரபுரை காண்பு முயற்சி! முன்னவர், - நான்கு தொகுதிகளோடு நின்றார்! பின்னவர், - ஒரே தொகுதியில், ஒரே மூச்சில் விரைவு விரைவாகப் பரிமேலழகரைப் பெரும்பான்மையிடங்களில் அடியொற்றியவாறு வினைமுடித்தார்!

இதுகாறும் வெளிவந்துள்ளனவற்றில் திருவள்ளுவரை ஓரளவுக்கு உளங்கொண்டு உண்மைகாண முயன்ற முயற்சிகளாகச் சில்லிடங்களே