குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/அறன் வலியுறுத்தல்
இந்த உலக இயக்கம் குறிக்கோளுடையது. குறிக்கோள் இலாது இயங்கும் எதுவும் இல்லை. மானுட வாழ்க்கையும் குறிக்கோளுடையது. மானுடத்தின் குறிக்கோள் என்ன? வாழும் உயிரினம் அனைத்திற்கும் தலைமை தாங்குவது மானிடமே! மானுட வாழ்வைச் சார்ந்துதான் மற்ற உயிர்கள் வளர்கின்றன; வாழ்கின்றன. நிலம் முதலிய ஐம்பூதங்களும் கூட மானுடத்தின் மூலமே பயன்பாடுறுகின்றன. ஆதலால் மானுட வாழ்க்கை அருமையானது. மிக மிக உயர் குறிக்கோளுடையது.
மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம், செய்தலன்று; வாழ்தல். அறமே வாழ்வு; வாழ்வே அறம்! மனம், புத்தி சித்தம் ஆகிய அகநிலை உறுப்புக்களை அன்பில் தோயச் செய்து யார் மாட்டும் அன்புடையராக வாழ்தல் அறம். அறத்திற்குப் பகை, பகையேயாம். அதனாலன்றோ இறைவன் திருமேனியில் மாறுபட்டவைகள் பகை நீங்கி அணிகளாகத் திகழ்கின்றன. அறத்தில் சிறந்தது மனத்தில் மாசின்றி இருத்தல். மனத்திற்கு மாசு இயற்கையன்று. மனத்திற்கு மாசு கொள்முதலேயாம்.
நமது பொறிகள்-மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தகவலைச் சேகரிக்கும் கருவிகள்-ஆன்மாவிற்குத் தகவலைத் தரும் கருவிகள். இந்தக் கருவிகள் அறியும் தன்மையுடையன. ஆனால், அறிவுடையன அல்ல. இந்தப் பொறிகள் ஆன்மாவின் அறிவோடும் புலன்களோடும் தொடர்பு கொண்டு இயங்கின் மனத்திற்குத் தீங்கு வாரா! மாசும் வாரா! .
ஆனால் பொறிகள் தன்னிச்சைப் போக்குடையன; விரைவுத் தன்மையுடையன. எல்லா இடங்களுக்கும் வரையளவுமின்றி, நெறிமுறையின்றிச் செல்லும் தன்மையன. இந்தப் பொறிகள் வாயிலாகவே மனத்திற்கு மாசு வந்தடைகிறது. ஆதலால் பொறிகள் மீது நமக்கு மேலாண்மை தனியரசாணை செலுத்த உறுதிவேண்டும். ஆக மனத்துக்கண் மாசிலராக வாழ்தல் அற வாழ்க்கை.
எந்த ஒரு நன்மைக்கும் களம் துரய்மையாக வேண்டும். அதுபோல வாழ்க்கையெனும் களத்தில் ஆடச் செய்ய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய களைகள் அகற்றப்படுதல் வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன அன்பின்மையால் வருவன. மற்றவர் வாழ்தலில் நமக்கு ஆர்வமும், மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளப் பழகினாலேயே இத் தீமைகள் அகலும். இதற்குப் பெயர்தான் அன்பு.
அறத்தின் பெயர் இன்பம். அறத்தின் பயன் அமைதி, அறத்தின் பயன் ஒருமைப்பாடு. அறத்தின் பயன் எல்லாரும் வாழ்தல்-நன்றாக வாழ்தல், இதுவே நியதி.
அறத்தின் பயன் செல்வம், சிவிகையூர்தல் என்று சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானவை. இக்கருத்துக்கள் வல்லாண்மையில் வாழ்வாருக்குத் தாளம் போடும் கருத்துக்கள்!
கடவுள், மழை, நீத்தார் ஆகியன பயன்பாடுடையன என்று நிரூபணம் செய்வதே அறம்தான். அறநெறி நிற்போம். அறநெறிச் சிந்தனையில் தோய்வோம். அறநெறி சார்ந்த அறிவினைப் பெறுவோம். அறநெறி சான்ற மனத்தினையே பெற்றுயர்வோம்! அதனாலேயே அறன் வலியுறுத்தப்படுகிறது.