உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/தேர்தல் சிந்தனை-1

விக்கிமூலம் இலிருந்து
28. தேர்தல் சிந்தனை-1

இனிய செல்வ!

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எண்ணற்ற சலுகைகள் வாரி வீசப் போவதாக வாக்குறுதிகள்-அறிவிப்புகள் கணக்கிலா நிலையில் வந்துகொண்டே இருக்கின்றன. எதிர்கால முதலமைச்சர் பதவி தனக்கே என்று உரிமை கொண்டாடும் ஒருவர் அறிவித்துள்ள சலுகைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு 42,600 கோடி ரூபாய் ஆண்டு ஒன்றுக்குத் தேவை. இது எந்த உலகம்! இவ்வளவு நிதிக்கு எங்குப் போவது? இதைப் பற்றி யார் எண்ணிப் பார்க்கப் போகிறார்கள்? நம்மில் பாதிபேர் ஏழைகள். வழிவழியாகச் சலுகைகளையே நம்பி வாழ்பவர்கள். ஆனால் அறிவிக்கப்படும் இந்தச் சலுகைகள் ஆகாச வாணங்களே தவிர, ஒளி விளக்குகள் அல்ல. எல்லாருமே மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கவே முயற்சி செய்கின்றனர். மக்களை, மக்களாக வாழ, வழி செய்வதற்கு யாரும் எண்ணுவதாகத் தெரியவில்லை. நெறிமுறையற்ற சலுகைகளும்கூட ஒரு வகையான கையூட்டுக்களேயாம். அதுவும் தேர்தல் காலத்தில் அறிவித்தால் கட்டாயமாகக் கையூட்டாகவே கருத வேண்டும்.

ஒரு குடியாட்சி நாட்டில் வாழும் மக்கள் அனைத்துரிமைகளுக்கும் சொந்தக்காரர்கள். தேர்தல் அறிக்கைகள் காலத்தில் தயார் செய்ய வேண்டும். ஜனவரியில் தேர்தல் வரப்போகிறது. டிசம்பர் பிறந்து விட்டது. இன்னமும் ஒரு கட்சி கூட தேர்தல் அறிக்கைகள் தரவில்லை. தேர்தல் அறிக்கைகள், ஒர் ஐந்தாண்டுத் திட்டம் போலத் தயார் செய்யவேண்டும். ஆக்கவழியிலான நல்லாட்சி அமைப்ப தற்குரிய திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புக்கள் உருவாக்குதல், விலைவாசிக் கட்டுப்பாடு, ஆயுட்கால வளர்ச்சி, எல்லாருக்கும் தரமான கல்வி உரிமை முதலியன வழங்கப் பெறுதல் வேண்டும். சுரண்டல் தன்மையுடைய சமுதாய அமைப்பு, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றினை அறவே நீக்கும் செயல் முடிவுத் திட்டங்கள் அறிவிக்கப் பெறுதல் வேண்டும்.

இத்தன்மையான தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொரு கட்சியும் தயாரித்து, மக்கள் மன்றத்தில் வைத்து, மக்கள் கருத்தறிந்து, இறுதி வடிவம் கொடுத்துப் பின் தேர்தல் காலத்தில் மக்கள் மன்றத்தில் வைத்து வாக்குப் பெறுதலே முறை.

இன்று இந்த நடைமுறையை ஒரு கட்சி கூடப் பின்பற்றவில்லை! எல்லாக் கட்சிகளும் தேர்தல் நிதியை நேரடியாகவும், மறைமுகமாகவும் குவித்துக் கொண்டுள்ளன. இன்றைய நிலையைப் பார்த்தால் தேர்தல் என்ற பெயரில் பணபலப் பரீட்சை நடக்கும்போலத் தெரிகிறது. இது மக்களாட்சி முறையன்று!

இனிய செல்வ, தேர்தலில் உனக்கு வாக்கு இருக்கிறது, நீ கட்டாயம் வாக்களிக்க வேண்டும். மறந்துவிடாதே! வாக்களிப்பதற்குமுன் திருவள்ளுவரை நினைத்துக் கொள். அவர் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையைப் பற்றிக் கூறிய திருக்குறளை ஒரு தரம் நினைத்துக் கொள்க!

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்பது திருக்குறள்.

‘இதனை’ என்று திருக்குறள் எதைச் சுட்டுகிறது? "இதனை” என்பது நாட்டுத் தேவையை! வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், வறுமையை அறவே நீக்குதல், விலையைக் கட்டுப்படுத்தல்; பொருளாதாரத்தில் நாட்டைத் தற்சார்பு நாடாக வளர்த்தல் ஆகிய பணிகளையே "இதனை” என்று குறிப்பிடுகிறார் இந்தப் பணிகளைச் செய்வதை நோக்கமாகக் கொண்ட கட்சி எது? வேட்பாளர் யார்? என்று ஆய்வுசெய்து கொள். ஒரு நல்ல நோக்கம் மட்டும் இருந்தால் போதாது. அதனை நிறைவேற்றும் திறன், கருவிகள் உடையவராக இருக்கின்றாரா என்றும் ஆய்வு செய்தல் வேண்டும் என்பதனையே ‘இதனால்’ என்ற சொல் குறிக்கிறது.

தமிழ் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். உழைக்கும் உள்ளமும், கரங்களும் இருந்தும் வேலை கிடைக்கவில்லை. விலை ஏற்றம் என்பது நச்சுப் பாம்பு. நஞ்சேறும் வேகத்தை விட வேகமாக விலை ஏறுகிறது. தமிழ்நாட்டில் தமிழ், கல்வி மொழியாக, பயிற்றுமொழியாகத் துறைதோறும் வளரவில்லை, இவற்றையெல்லாம் செய்து முடிக்கும் குறிக்கோள் எந்தக் கட்சிக்கு இருக்கிறது? திறன் எந்தக்கட்சிக்கு இருக்கிறது? என்று எண்ணுக! ஒருதடவைக்கு மூன்று தடவை எண்ணுக! சென்றகால வரலாற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்க! ‘இதனை இதனால் இவர் முடிப்பார்’ என்று எண்ணித்துணிக! வாக்களித்திடுக! நல்லாட்சி அமைத்திடுக! இதுவே திருக்குறள், வாக்காளர்களுக்குக் கூறும் அறிவுரை!

இன்ப் அன்பு

அடிகளார்