குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/இட ஒதுக்கீடு
இனிய செல்வ,
மண்டல் குழு அறிக்கையின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்த நடுவண் அரசு முடிவெடுத்திருக்கிறது. அதாவது, நடுவண் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு 27 விழுக்காடு செய்வதாக முடிவு. இனிய செல்வ, இது தொடர்பாக ஒரு செய்தி உனக்கு தெரிந்தாக வேண்டும். அதுதான் நடுவண் அரசு பணிகளுக்கு ஆள் தேர்வு செய்வதில்லை என்ற அரசின் முடிவு. அதாவது, அரசு அலுவலகங்களில் ஒரே கூட்டம்! போதும் போதும் என்றாகி விட்டது போலும்! இந்த நிலையில் இட ஒதுக்கீட்டு அறிவிப்புகள்! வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் ஆர்வம் இல்லை! முயற்சி இல்லை! இருப்பதை எப்படிப் பங்கிடுவது என்பதுதான் கவலை!
இனிய செல்வ, கம்பன் கூட "எல்லாருக்கும் எல்லாம்” என்றுதான் கனவு கண்டான்! நமது நிலை ஏழ்மையை, இன்மையைப் பங்கிட்டுக் கொள்வது எப்படி என்பதுதான்; இனிய செல்வ, தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர் ஒதுக்கீடுகள் வேண்டாம் என்பது நமது கருத்து அல்ல. உயர் சாதியினருக்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பின் தங்கியவர்களுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம் என்பதிலும் இரண்டு கருத்து இருக்க நியாயமில்லை. ஆயினும், இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மட்டும் குறைக்க கூடியதா? குறைக்க முடியுமா? தாழ்த்தப் பட்டவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், பின் தங்கியவர்கள் ஆகியோரின் 80 விழுக்காடு பேரின் தரமும் செயல் திறன்களும் முறையாக வளர்க்கப்படுதல் வேண்டும். இன்று பெறும் இந்த வளர்ச்சி தான் உண்மையான நலம் பயக்கும். இடைக்கால ஏற்பாடாக ஒதுக்கீட்டை ஏற்கலாம்.
தாழ்த்தப்பட்டோர், மிகவும் பின்தங்கியோர், எண்பது விழுக்காட்டு மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். மற்ற 20 விழுக்காட்டினர் நகர்ப்புற வாசிகளாக மாறி உள்ளனர். இவர்களில் பலர் வளர்ந்தவர்கள். இவர்கள் தொடர்ந்து வளரவும் நிலைப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இன்றைய கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளின் தரம்... ஐயோ... ஐயோ...! எழுதவும் கூசுகிறது. அவ்வளவு மோசம்! கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளுக்குப் போதிய ஆசிரியர்கள் நியமிப்பதில்லை! போதிய கட்டிட வசதியில்லை. கற்பிக்கும் கருவிகள் இல்லை! பரிதாபகரமான நிலை! இத்தகைய கல்வி நிலையை வைத்துக் கொண்டு உயர்சாதிக்கு ஒப்ப நகர்ப்புறவாசிகளுக்கு இணையாக வளர வேண்டுமென்றால் முடியுமா? ஒருக்காலும் முடியாது. ஆளும் அரசுகளுக்குத் தாழ்த்தப்பட்டவர்களிடத்தில் பின்தங்கியவர்களிடத்தில் பரிவும் அக்கறையும் இருக்குமானால் கிராமப்புறக் கல்வியின் தரத்தைக் கூட்டவேண்டும். இனிய செல்வ, அடுத்து உயர் சாதியினர் என்று கூறப்படுவோர் மட்டுமே முன்னேறியவர்களா? தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சேர்ந்தவர்கள் முன்னேறியவர்களாக இல்லையா? வசதியும் வாய்ப்புமுடையோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்று ஒதுக்கீடு செய்தால் இச்சாதிகளில் உள்ள முன்னேற்ற நிலையை அடைந்தவர்கள் ஒதுக்கீட்டின் பலன்களை அடைவர். இந்த, தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரில் கடைகோடி மனிதனுக்குச் சென்றடையாது. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கிய ஒதுக்கியச் சலுகை அந்தச்சாதியைச் சேர்ந்த 20 விழுக்காடு மக்களுக்குள்ளேதான் சுழன்றுக் கொண்டிருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக மற்ற தாழ்த்தப்பட்ட குடும்பங்களைப் பொருத்த வரையில் இன்றுவரை எட்டாத கனி தான், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்துக்கென்று ஒதுக்கிய ஆண்டுகள் 15 ஆண்டுகள்! ஆனால் மூன்று 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தாழ்த்தப்பட்ட சாதியினர் இன்னமும் முன்னேறவில்லை என்பதே உண்மை. அதே போழ்து மற்ற சாதியினர் முன்னேறிய சாதிப்பட்டியலில் உள்ளவர்கள்! ஏன் மற்ற சாதிகளில் கூட அழுக்காறு வளரத் தொடங்கிவிட்டது? தாழ்த்தப்பட்டவர்களிடத்திலும் சலுகை இன்றி முன்னேற முடியாது என்ற இயலாமைக் குணம் தலை காட்டுவதை உணர்தல் வேண்டும். இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட சாதிமுறை மாறாநிலை உருவாகிறது என்பதுதான் உண்மை.
இனிய செல்வ, ஆம்! நீ கேட்பது சரியான கேள்வி! கல்வியைப் பொருத்தவரையில் மக்களை நான்கு பிரிவினராகப் பிரிக்கலாம். மூன்று தலைமுறை வரையில் கல்வியில் முதுகலை அல்லது தொழிற் கல்வி, மருத்துவக்கல்வி, பொறியியற் கல்வி பெற்றிருந்தால் அந்தக் குடும்பம் கல்வியில் முன்னேறிய குடும்பம் என்று கருதிச் சலுகை பெறும் சாதிப் பட்டியலிலிருந்து நீக்கி முன்னேறிய சாதிப்பட்டியலில் சேர்க்கவேண்டும். நமது பாராட்டுதலுக்குரிய முதல்வர் கலைஞர் இந்தத் திட்டத்தை வேறுவகையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது பட்டதாரியே இல்லாத குடும்பத்தினைச் சார்ந்தவருக்கு 5 மதிப்பெண் கூட்டுவது என்ற திட்டம்தான் அது. இதற்குச்சாதி இல்லை; சாதி வேண்டாம்! கல்வியில் பின்தங்கிய குடும்பம் என்ற ஒரே அளவுகோல்! இந்த அளவுகோலைப் பணி இட ஒதுக்கீட்டுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே பலர் விருப்பம். இஃது ஒரு வரவேற்கத்தக்கமுறை. அடுத்து, பொருளாதாரத்தில் மட்டும் பின் தங்கியவர்கள். இவர்களுக்குப் பொருளாதார உதவி மட்டுமே கிடைக்கும். கல்லூரிகளில் இடஒதுக்கீடோ, மதிப்பெண். சலுகையோ கிடைக்காது; கிடைக்கக்கூடாது. அடுத்து, கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள். இவர்களுக்கு இரண்டு உதவிகளும் தரவேண்டும் என்று முறைப்படுத்துவதோடன்றி இதில் பின்னடைவோரைக் குடும்ப அடிப்படையில் கணித்து அட்டைகள் (cards) வழங்கிக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் மேம்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். நிர்ணயிக்கப்பெற்ற மேம்பாட்டு நிலைக்கு வந்தவுடன் அவரும் இவருடைய குடும்பமும் முன்னேற்ற மடைந்த சாதியைச் சேர்ந்த குடும்பமாகக் கருதப்பட வேண்டும். அல்லது முழுதும் முன்னேற்றமடையாமல் இருந்தால் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைகளுக்கும் செல்லலாம். 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மறு ஆய்வு செய்து அந்தந்த நிலைகளில் இருத்தி மேம்பாடு அடையச் செய்யலாம். இந்த நடைமுறை கல்வியைப் பொருத்த வரையில் ஆகும்.
இனிய செல்வ, அரசுப்பணி மனைகளில் இட ஒதுக்கீடு! இன்று அரசுப் பணிகளுக்கிருந்த மதிப்பீடு குறைந்திருக்கிறது. தன்னம்பிக்கையும் ஆசையும் உடைய சிலர், அரசுப் பணிகளிலிருந்து விலகித் தனியே தொழில் தொடங்குகின்றனர். அல்லது தனியார் துறைப்பணிக்குச் செல்கின்றனர். வேலை வாய்ப்புகளை நிறைய உண்டாக்குவதன் மூலமே வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்கவும் வேலை வாய்ப்புத் துறையில் உள்ள ஆரோக்கியமில்லாத போட்டிகளைத் தவிர்க்கவும் வழி ஏற்படும். அதுவரையில் அரசு அலுவலகங்களில் இரண்டு மூன்று நிலைகளில் பணிபெற்ற குடும்பங்கள் இரண்டு தலைமுறை பணி பெறலாம். கடைநிலை ஊழியர் குடும்பங்கள் மூன்று தலைமுறை வரையில் பெறலாம். ஆனால் அடுத்த நிலைப் பணிகள் அளவுக்கு தரத்தை-தகுதியை உயர்த்திக்கொண்டாலே பெறலாம். அப்படி இல்லையெனில், இரண்டு தலைமுறை மட்டும் தான் பெறலாம். அகில இந்தியப் பணி - முதல்தர நிலைப்பணி பெற்ற குடும்பங்கள் (l.A. S, I.P.S.) பெற்ற அளவிலேயே முன்னேற்றமடைந்த சாதியைச் சேர்ந்த குடும்பங்கள் என்று கருதப்படுதல் வேண்டும். இந்தக் குடும்பங்கள் எதிர்ப்பார்த்தபடி வளராது போனால் பெற்ற வளர்ச்சியை நிலைப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டால் மூன்றாந் தலைமுறையில் சலுகைகளைப் பெறலாம் (ஆயினும் உரிமையாகாது). இனிய செல்வ, வேலை வாய்ப்பைப் பொருத்தவரை, நிறைய வேலை வாய்ப்புக்களை உண்டாக்குவதே தீர்வுக்குள்ள ஒரே வழி. இந்தியா, தனியார் துறையிலும் சரி, பொதுத்துறையிலும் சரி, அரசு திட்டமிட்டால் வேலை வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன; உருவாக்க முடியும்.
இனிய செல்வ, பொதுவாகச் சாதி முறையில் ஒதுக்கீடு உள்ள வரையில் சாதிகள் நிலைப்பாடு கொள்ளும்; சாதிச் சண்டைகளும் ஓயா, நமது நாட்டு இளைஞர்கள் தன்னம்பிக்கையையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். சாதிகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அந்தந்தச்சாதிகளின் குடும்ப அடிப்படையில் மேம்பாட்டுக்குரிய பணி ஒதுக்கீடுகளைக் கால எல்லைக்குட்பட்டுச் செயற்படுத்த வேண்டும்.
"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை"
(469)
இன்ப அன்பு
அடிகளார்