உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/ஒருமைப்பாட்டு உணர்வு கொள்

விக்கிமூலம் இலிருந்து

13. ஒருமைப்பாட்டு உணர்வு கொள்

இனிய செல்வ!

இன்றைய இந்தியா எப்படி இருக்கிறது? ஆள்கிற கட்சிகள் எப்படி இருக்கின்றன? எதிர்க்கட்சிகள் எப்படி இருக்கின்றன? வினாக்கள் புரிகின்றனவா? ஆம்! திருக்குறள் நெறிக்கு முற்றிலும் எதிர்நிலையில் இன்றைய நாடு இருக்கிறது.

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு."

என்பது திருக்குறள். ஆம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாடு பல குழுக்களாகப் பிரிந்து கிடந்தது. நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரிய முட்டுக்கட்டை இந்தக் குழு மனப்பான்மையே! வெளிப்படையாகத் தெரியும் சாதி, குல, கோத்திர மதப்பிரிவினைகள் வேறு. இந்தப் பிரிவினைகள் வழிப்பட்டு, வேறுபட்டு நிற்கும் கூட்டங்கள், குழுக்கள் என்று அழைக்கப்படுவதில்லை! 'பல்குழுக்கள்’ என்று குறிப்பிட்டது ஒரு அணிபோல் தோற்றத்தில் காட்டி, உள்ளே முரண்பட்டுக் கிடக்கும் சக்திகளைக் குழுக்கள் என்று திருக்குறள் இனம் காட்டுகிறது.

இனிய செல்வ! இந்தக் குழுக்கள் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று கேட்கின்றாய். குழுஉ மனப்பான்மையில் ஒதுங்கியும், ஒதுக்கியும் ஒரு சிறு கூட்டம் சேர்ப்பதற்குக் காரணம், வறட்சித்தன்மை மிக்க தலைமை உணர்வே! உயர்வு மனப்பான்மை இயக்குகிறது; ஆனால், இயல்பாக உயர்வு நலத்திற்குரிய எந்தத் தகுதியும் இல்லை. ஆதலால் தாழ்வு மனப்பான்மை எதிர் விளைவை உருவாக்கும் பொய்யான உயர்வு மனப்பான்மையாக உருக் கொள்கிறது. இது ஒரு முக்கிய காரணம். அடுத்து செல்வ, அப்பட்டமான தற்சார்பான வாழ்க்கைமுறை. அதாவது சுயநலம். மேலும் சில சமயங்களில் பயந்தாங்கொள்ளித் தனங்கள், தைரியம் என்ற ஆடையைக் கட்டிக் கொண்டு பொய்யாட்டம் போடும். இத்தகு ஆட்டங்கள் பயனற்றவை.

இன்று நம்முடைய நாட்டை வருத்தும் துன்பங்களுள் பெரியது பல்வகைப்பட்ட குழுக்கள் அமைந்திருப்பதே. இத்தகு குழு மனப்பான்மையுடைய முரண்பட்ட சக்திகள் நாட்டின் அனைத்து அமைப்புகளிலும் உள்ளன. இந்திய நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றுள்ள பேராயக் கட்சியாகிய காங்கிரஸ் (இ) கட்சியில் உள்ள குழு உக்கள் எண்ணில் அடங்காதவை. அதுபோலவே தான் மற்ற கட்சிகளிடத்திலும் அமைந்து கிடக்கின்றன. ஏன்? இனிய செல்வ, அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் உடைந்து விடும் நிலைக்கு வந்துவிட்டது என்ற செய்தியைப் படித்தாய் அல்லவா? ஆம் செல்வ! கடந்த அரை நூற்றாண்டுக்குள்ளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முற்றாக உடைந்து விட்டது. இப்போது ஏற்படும் பிரிவு நான்காவது. விஞ்ஞான பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய கடமைப்பாடுடைய கட்சிகள் கூட உடைபடுகின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் ஒவ்வொருவரும் கற்கும் கல்வியை விட - அறிவை விடப் பாரம்பரியம் அதிகச் செல்வாக்குடையதாக விளங்குகிறது என்பதுதானே! இனிய செல்வ, குழூஉ மனப்பான்மை கூடாது. கருத்து மாற்றங்கள் மனம்விட்டு விவாதிக்கப் பெற்று ஏற்றுக் கொள்ளப் பெறுதல் வேண்டும். கருத்து மாற்றங்கள் ஏற்படவில்லையா? அதனால் என்ன? குடியா முழுகிவிடப் போகிறது? காத்திருக்கலாமே! இப்போது எல்லாம் இத்தகு பொறுமை இல்லை. கருத்து மாற்றங்களுடையோர் குழூஉக்களாகப் பிரிந்து உட்பகை கொள்கின்றனர். உட்பகையின் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு பாழ்களை விளைவிக்கின்றனர். இந்த அளவிலும் நிற்பதில்லை, குழூஉ மனப்பான்மை ஆளும் அரசுகளையே கையகப்படுத்திக் கொண்டு ஆட்சி முறைக்குக் கேடு செய்கின்றனர். மக்களாட்சி நடைபெறும் நாட்டில் குழூஉக்கள் தோன்றிவிடின் அரசே நடைபெறாது. அரசையே இந்தக் குழூக்கள் தம்வயப்படுத்தி இயக்க முயலும். ஆக, நாள்தோறும் அதிகாரப் பங்கீடுகள் பற்றிய சர்ச்சையே நடைபெறும். அரசு எந்திரத்தின் உறுப்புக்களாகிய அரசு அலுவலர்கள் திசை தெரியாமல் தவிப்பர். யார் சொல்வதைக் கேட்பது என்ற சங்கடத்திலேயே காரியங்கள் ஒத்திப் போடப்படும் நாட்டில் நிர்வாகமே நடைபெறாது. இத்தகு இரங்கத்தக்க நிலை நமக்கு வேண்டியதுதானா? இனிய செல்வ, எண்ணுக! எண்ணித்துணிக! கூடித் தொழில் செய்க! ஒருமைப்பாடுடையராய் நாட்டு வேள்வி இயற்றுவோமாக! நாட்டின் அரசைக் குழுக்களின் அரசாக மாற்றி மக்களுக்குத் தீங்கு செய்கின்றனர். ஆட்சியும் நிலை குலைகிறது. இன்றைய நமது நாட்டின் நிலையும் இதுவேயாம்.

சிற்றூர்கள் - பேரூர்கள் நலம்பெற பல்குழூஉ மனப்பான்மை அறவே விட்டொழிக்க வேண்டும். எல்லோரும் ஒர் குலமாக - ஓரினமாக - ஓர் நிறையாகக் கூடித் தொழில் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். தலைமைப் பசி வரக்கூடாது! தாழ்வெனும் தன்மையுடன் பணிசெய்தல் வேண்டும். தேவையில்லாமல் கூட்டம் போடக்கூடாது. நமது நாட்டில் கூட்டம் நல்ல பயனை அடையமுடிவதில்லை. ஒரோவழி அபூர்வமான சூழ்நிலைகளிலே நமது நாட்டில் கூட்டம் பயன்தருகிறது.

இனிய செல்வ! குழூஉ மனப்பான்மை தீயது! நாட்டுக்கு ஏற்றது பரந்த ஒருமைப் பாட்டுணர்வேயாம்! இனிய செல்வ, சின்னச் சின்னக் கூட்டம் வேண்டாம். சிறு பிள்ளைத்தனம் வேண்டாம். இனிய செல்வ, ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கேற்றதாக நம் அனைவரின் சிந்தனை அமைவதாக! இந்தச் சிந்தனை உயிர்ப்பும் உறுதியும் உடையதாக அமைவதாக! நாம் அனைவரும் இந்தியர்! மனிதர்! உரத்தகுரலில் சொல்வோமாக! நமது நாடு உலகம்; நமது வீடு, நமது நாடு. இந்தப் பண்புகள் நமது அணிகலன்கள் ஆகுக!

இன்ப அன்பு

அடிகளார்