உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!

விக்கிமூலம் இலிருந்து

33. நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!

வெஃகல்-பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல் அதாவது தனககு உரியன வல்லாதனவற்றிற்கு ஆசைப்படுதல் என்பது பொருள்! ஆம்! ஒருவர் மற்றவருடைய பொருளை விரும்புதல் களவுக்குச் சமம்! இதனால் வாழ்க்கை நிலைகளும் மாறிக் களவு, காவல் என்ற இழிநிலைகள் தோன்றும். பூட்டுக்கள் பெருகலாம். ஆனாலும் களவு நின்ற பாடில்லை. ஏன்? பொருள் என்பது உழைப்பின் பயன். உழைப்பாலன்றிப் பொருள் ஈட்ட விரும்புபவன் அறநெறி நிற்பவன் அல்லன். அதுமட்டுமின்றிப் பிறர் பொருளை விரும்புபவன் தனது அறிவை இழக்கின்றான்; ஆற்றலை இழக்கின்றான்; காலப்போக்கில் மானத்தையும், பெருமையையும் இழக்கின்றான்; பழியைத் தேடிக் கொள்கின்றான்.

உழைத்துப் பொருள் ஈட்டாது பிறன் பொருளை விரும்புபவர்கள் பொருளுடையாரைத் துன்புறுத்தவும் செய்வர்; ஈரநெஞ்சினை அறவே இழந்து வெறித்தனமாக நடந்து கொள்வர். அன்பும் அருளும் இவர்களுடைய பண்புகளாக அமைந்து விளங்கா.

இங்ஙனம் பிறன் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள் அதனால் அடையும் துன்பங்களும் பலப்பல. யாருடைய பொருளை விரும்புகிறார்களோ, அவரிடமிருந்தும் துன்பம் வரும், பிறர் கைப்பொருளை நம்பி வாழ்ந்தமையால், தாம் பொருளீட்டும் முயற்சியின்மையின் காரணமாக அவலம் வளரும், ஆதலால் பிறர் பொருள் மாட்டு உள்ள விருப்பம் இன்பத்தைத் தருவது இல்லை; மாறாகத் துன்பம் தருகிறது.

பொருளியல் நியதிகளைச் சார்ந்தே ஒழுக்கங்கள் வளர்கின்றன; அறிவு, ஆற்றல்கள் வளர்கின்றன; சமுதாயத்தினரிடையில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் வளர்கின்றன. ஆதலால் உழைத்து வாழ்தலே வாழ்வு. பிறர் பொருளை எடுத்துக்கொள்ள விரும்புதல், உதவியாகப் பெறுதல், இனாமாகப் பெறுதல் ஆகியனவும்கூட வெறுக்கத் தக்கனவேயாம்.

பிறர் பொருள் ஒரே வழி நம் கையகப்படினும் கூடச் சிறிது பொழுதே இன்பந்தரும். அந்த இன்பத்தினைத் தொடர்ந்து பெருந்துன்பம் வரும் என்பதறிக. நல்வாழ்வின் முன் இன்மை என்பது ஒரு பெரிய குற்றமன்று. இன்மையும் கூட மன்னிக்கப்பெறும். ஆனால் நடுவின்றிப் பொருள் வெஃகுதல் தாம் பிறந்த குடியையே அழிக்கும். மேலும் பல குற்றங்களையும் தரும்.

ஆதலால், பிறர் பொருளை எந்த வகையிலும் அடைய விரும்பற்க! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலையே விரும்புக.

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்”

(171)