பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற ஒரு வார்த்தை சொல்வதற்குப் பதிலாக எத்தனை பெயரை மாற்றுவது?

நாம் சமுதாய போக்குகளையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். படித்த அறிஞர்கள், சான்றோர்கள் இந்தத் தலைமுறையின் சாதி என்கிற படைநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்காது போனால் நம்முடைய தலைமுறை மிகுந்த சங்கடத்திற்கு ஆளாகும் என்பதை பாரதி உணர்ந்தான்.

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!


என்கிறான் பாரதி. அவனைப் போல சாதிக்கு எதிராகப் பேசிய கவிஞனைப் பார்க்க முடியாது. "எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம்” என்று பாடியதோடு மட்டும் இல்லை, "எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை” என்று மெருகேற்றுகிறான்! சந்தனம் அறைக்க அறைக்க மணம் தருவது போன்றது அவனுடைய கவிதை.

முதலில் குலத்தில் ஒன்றாக்குகிறான்! அடுத்து இனத்தில் ஒன்றாக்குகிறான்! பின் "எல்லோரும் ஓர் நிறை" என்று சொல்லுகிறான். அடுத்து "எல்லோரும் ஒர் விலை” என்று சொல்லுகிறான். "ஓர் விலை" என்று சொன்னால் அவனுக்குப் பத்து இலட்சம் இருக்கிறது. அவனுக்குப் பத்துக் காசு கூட இல்லை என்று சொல்லும் நிலை கூடாது என்பதுதான். எனவே எல்லாரும் இந்த நாட்டு மக்கள் என்கிற மிகச்சிறந்த சமுதாயக் கருத்து கனவாகத்தான் இருக்கிறது. இன்னும் நினைவாகவில்லை. நனவாகக் கூடிய முயற்சிகளில் கூட தடையிருப்பதாகத் தெரிகிறது. எதனால் தடை என்றால் வல்லாண்மை மிக்கவன் வாழ்கிற சமுதாயம் தடைக் கல்லாக இருக்கிறது! இந்தத் தடையை எப்படி அகற்றுவது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது!