பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்க்கை நெறியாக இருக்கிற சைவ நெறியை மக்களிடை வலியுறுத்திப் பரப்பவே சேக்கிழார் காப்பியம் செய்தார்.

செழுந்தமிழ் வழக்கு-சைவநெறி

சைவ சமயம், தமிழரின் பேரறிவில் பூத்து வளர்ந்த நெறி நம்பிக்கைக்கும் நல்வாழ்க்கைக்கும் ஏற்ற நெறி; இயற்கையோடிசைந்த நெறி. இம்மையிலும்-இம்மண்ணுலகிலும் மகிழ்ச்சியோடு வாழத்துணை செய்யும் நெறி. மறுமையிலும் இறவாத இன்ப அன்பு வழங்கும் நெறி, சைவ நெறியில் நம்பிக்கைகள் மட்டுமே ஆட்சி செய்யவில்லை. புனைந் துரைகள் அறவே இல்லை. மானுடம் போற்றப்படுகின்றது. கடவுள் மானுடத்தின் வாழ்முதலாகப் பேசப்படுகிறார். பரவப் படுகிறார். கடவுள் தந்தையாக, தாயாக, ஆசிரியனாக, தோழனாக, சேவகனாக நின்றாளும் பெற்றிமை தமிழகத்தின் சமய நெறிகளில் மட்டுமே உண்டு. ஆதலால் சைவம், செந்தமிழ் வழக்கு என்றும் இவற்றுக்கு ஒத்துவரா நெறிகள் அயல் வழக்கு என்றும் கொள்ள வேண்டும்.

சைவத்தின் சிறப்பு

இந்தியாவில் வழங்கும் சமயங்களில் அய்ல் வழக்குகள் பல உள்ளன. அதை எதிலுமில்லாத-நிலையில் அறிவியலடிப் படையில் வாழ்வியலை தத்துவ இயலைச் சேக்கிழார் விளக்குகிறார். இது சைவத்திற்கே உரிய தனிச் சிறப்பு.

"செய்வினையுஞ் செய்வானும் அதன் பயனுங் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே, இவ்வியல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என, உய்வகையாற் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்தறிந்தார்"

(சரக்கியநாயனார் புராணம்-பா5)

என்பது பெரிய புராணம்.