பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமையும். அதுபோல ஆன்மா தன் இதயத்தை - சிந்தனையைத் திருவருளிடத்தில் நிறுத்தித் தன் செயலைச் செய்யுமாயின் குறையினின்றும் விலகி நிறைவு பெறும்; அறியாமையிலிருந்து விலகி அறிவு பெறும்; வாழ்க்கை வடிவம் பெறும்; நிறைநலம் பெறும்; இன்ப அன்பினை எய்தும். இதற்கு மாணிக்கவாசகர் வரலாறு சான்று.

மாணிக்கவாசகர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தவ வாழ்க்கை அல்ல. மாணிக்கவாசகருக்கு வாய்த்தது அரசியல் வாழ்க்கை; அமைச்சியல் வாழ்க்கை. அரசியல்-அமைச்சியல் வாழ்க்கையில் தவம் மேவுதல் இயற்கையன்று; மரபும் அன்று. அரசியல்-அமைச்சியல் வாழ்க்கையில் வினைகளும் வினைகளின் பயனாகிய அதிகாரங்களும் அமையும். ஒரோவழி பத்திமை பொருந்தி அமைதலும் கூடும். இது விதிவிலக்கு. ஆயினும் மாணிக்கவாசகர் அமைச்சியல் வாழ்க்கையையே தவ வாழ்க்கையாக நடத்திய அருமை அறிதலுக்குரியது. அதனாலேயே மாணிக்கவாசகர் பாண்டியனின் ஆணைவழி குதிரை வாங்க நாட்டமில்லாமல் திருக்கோயில் கட்டினார். மாணிக்கவாசகர் செய்தது தவறா? உலகியல் முறைப்படி தவறு; அறநெறி விதிகளின்படி தவறன்று. அரசன் அறநெறியறிந்து உணர்வான் என்று மாணிக்கவாசகர் நம்பினார். தகுதி இல்லாதாரை - நெறிமுறை தவறுகிறவர்களைத் திருத்தும் பாங்குகள் பலப்பல. திருத்தங்காணும் முயற்சி, நெறிமுறை தவறுகிறவர்களின் தகுதிப் பாட்டிற்கேற்ப அமையும். கயவர் ஒறுத்துத் திருத்தப்படுவர். சான்றோர் சொல்லத் திருந்துவர். மிக உயர்ந்தோர் குறிப்பாக, அரசியலில் ஏவினது ஒழிந்து பிறிதொன்று செய்தலாலே ஏவினது தவறு என்று உணர்ந்து திருந்துவர் என்பது மரபுவழி வந்த வழிமுறை. மாணிக்கவாசகர் அரசன் ஏவியவழி, குதிரை வாங்காது திருக்கோயில் கட்டியமையால் குதிரை வாங்குதல் தவறு, திருக்கோயில் கட்டியது நன்று என்று உணர்வான் என்று நம்பினார். ஆனால், பாண்டியன்