பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

327


அளிக்கவேண்டும். சாதி மதங்களைக் கருவியாகக் கொண்டு வாழ்ந்திடுதல் நன்றோ? இல்லை, இல்லை! ஆதலால் ஆட்சியாளர்கள் நமது நாட்டில் எந்த ஒரு பிரிவினரும் சாதிகளைக் கருவியாகக் கொண்டு வாழ்ந்திட வேண்டிய அவசியமில்லாமல் வாழ உத்தரவாதம் அளிக்கவேண்டும் – வாழ வைக்க வேண்டும். சாதிச் சான்று கேட்டு அலைய வைக்கக் கூடாது.

ஆதலால் நாடெங்கும் சாதிச் சங்கங்கள், சாதிப் பேரணிகள் சாதி முறைகளை வலியுறுத்திப் பேசும் கூட்டங்கள் முதலியன நடந்த வண்ணம் இருக்கின்றன. நாளுக்கு நாள் மனிதகுல ஒருமைப்பாடு சீரழிகிறது. இந்தச் சாதித் தீமைகளிலிருந்து விடுதலைபெற வழியில்லையா? வழியிருக்கிறது! செய்யத்தான் துணிவில்லை!

மத நிறுவனங்களுக்கு, பழக்க வாசனை காரணமாகச் சாதிமுறைகளைக் கைவிடத் துணிவில்லை! ஆட்சியாளர்களுக்கு தேர்தல் காரணமாகச் சாதிமுறைகளைக் கைவிடத் துணிவில்லை! எல்லாவற்றிற்கும் மேலாக நமது "சமூக ஊழ்” வலிமையாக அமைந்துவிட்டது.

தீண்டாமை, சாதி வேற்றுமைகளை இந்தத் தலை முறையில் நாம் தீர்க்காவிட்டால் அவற்றால் ஏற்படும் எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை விழுப்புரம், உஞ்சனை, போடி சாதிக் கலவரங்கள் எச்சரிக்கை செய்கின்றன. நமது நாட்டு அரசியல் அமைப்பின்படி நமது நாடு ஜனநாயக சோஷலிசக் குடியரசு ஆகும். இத்தகு அரசினை அருட்பிரகாச வள்ளலாரும்.

“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுள ராகிஉல கியல் நடத்த வேண்டும்”

என்றார். இன்று நம்முடைய அரசியல், மக்களாட்சி முறையின் வடிவம் உள்ளது; வண்ணம் இல்லை! உருவம் இருக்கிறது; உணர்வு இல்லை! நம்முடைய நாட்டுப் பணச் சந்தை “லேவாதேவிக்”காரர்களிடம் சிக்கிக் கொண்டது. அதனால் வாழ்க்கையில் துறைதோறும் அறிவு, திறன், கடமை